ஹிஜ்ரி புத்தாண்டு சிறப்புக் கட்டுரை: மக்காவை ஏன் துறந்தார்?

By இக்வான் அமீர்





“முஹம்மதை இறைவனுடைய தூதராக ஏற்றுக் கொண்டு அவர் போதிக்கும் மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டுமா? முடியாது.. முடியவே முடியாது..!” குறைஷிகள் அனலில் இட்ட புழுவாக துடித்தார்கள்; துவண்டார்கள்!

“இதை விடக் கூடாது! அவரிடம் அப்படி என்னதான் இருக்கிறதோ கேட்பவரெல்லாம்.. உடனே அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களே..!” வியப்பும் கோபமும் கொண்ட குறைஷித் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தினார்கள். இறுதியாக, நாவன்மையும், நுண்ணறிவும் கொண்ட ‘உத்பா'வைத் தூதராக நபிகளாரிடம் அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.

உத்பா நபிகளாரைத் தம் வழிக்குக் கொண்டுவரப் பல வகைகளிலும் முயற்சிக்கிறார்: “என் அன்பு மகனே! எங்கள் கொள்கைகளை ஏன் புறக்கணிக்கிறீர்? உம்முடைய நோக்கம் செல்வம்தான் என்றால் அரபு நாட்டின் மொத்த செல்வக் குவியலையும், உம்முடைய காலடியில் கொட்டத் தயாராக இருக்கிறோம்! அழகிய பெண்தான் உம்முடைய நோக்கம் என்றால் இந்த அரபு நாட்டிலேயே பேரழகு வாய்ந்த பெண்ணை உமக்கு மணமுடித்துத் தருகிறோம்!

உம்முடைய நோக்கம் கண்ணியமும், மதிப்பும்தான் என்றால், உம்மை எம் தலைவராக ஏற்றுக்கொள்ளச் சித்தமாகவும் இருக்கிறோம்! உமது நோக்கம், ஆட்சி அதிகாரம்தான் என்றால், அதிலும் எங்களுக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை. வாருங்கள்..! உம்மை அரபு நாட்டின் மன்னராக்கி மகிழ்கிறோம்! உம்முடைய மூளையில்தான் ஏதாவது கோளாறு என்றால், அதற்காக நாம் சிறந்த மருத்துவரிடம் உம்மை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்கிறோம்!” என்கிறார் குத்தலாக!

தூதின் நோக்கம்

உத்பாவின் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த நபிகளார் கடைசியாக, மென்மையும், உறுதியும் வாய்ந்த குரலில் பதிலளித்தார். “பெண்ணோ, பொருளோ அதிகாரமோ எனது தூதின் நோக்கமல்ல. என் மூளையில் எவ்விதமான கோளாறும் இல்லை! நான் மனநலம் பாதிக்கப்பட்டவனுமல்ல. இறைவனின் திருத்தூதைத்தான் நான் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றேன். பின்பற்றுவோருக்கு நற்செய்தியும், நிராகரிப்போருக்குக் கடும் தண்டனை பற்றிய எச்சரிக்கையும் இதில் அடங்கியுள்ளது. அதனால், தாங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது!”

தெள்ளத் தெளிவான, திட்டவட்டமான, எந்தவித நீக்குப்போக்குகளும் இல்லாத, நேரடியான பதிலை அழகிய வார்த்தைகளால் நபிகளார் எடுத்து வைத்து விடுகிறார்.

கடைசியில் உத்பா, தோல்வியுடன் திரும்பி செல்ல வேண்டியதாயிற்று!

தம் தூதில் தோல்வியுற்ற குறைஷிகள் மீண்டும் ஒன்று கூடித் திட்டமிடுகிறார்கள். பின்பு நபிகளாரின் பெரிய தந்தையான அபூதாலிபின் மூலமாக மிரட்டலை ஆரம்பிக்கிறார்கள்.

அபூதாலிப் கவலையடைகிறார். நபிகளாரை அழைத்துச் சொல்கிறார்.

“என்னுடைய சகோதரரின் மகனே! இனி நான் உமக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது. நீர் தொடர்ந்து உமது பணிகளை நீடித்தால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீரே பொறுப்பாவீர். நன்றாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்!”

தம் பெரிய தந்தையாரின் இக்கட்டான சமூகச் சூழலையும், அதேநேரத்தில், அவர் தம் மீது வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பையும், உணர்ந்து நபிகளார் கண் கலங்குகிறார். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு சொல்கிறார்.

“பெரிய தந்தையே! தங்களது இக்கட்டான சூழல் என்னைப் பெரிதும் கவலை கொள்ளச் செய்கிறது. தாள முடியாத வேதனை அளிக்கிறது. இறைவன் மீது ஆணையாக! இவர்கள் என் போதனைகளை விடச் சொல்லி, என் வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும் நான் இப்பணியிலிருந்து விலகப் போவதில்லை! இறை வாக்கில் ஓர் எழுத்தைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ போவதில்லை! இந்தப் பணியில் என் உயிர் போவதாயினும சரியே!” என்று கூறிவிட்டு வருத்தத்துடன் அங்கிருந்து எழுந்து செல்லலானார்.

நபிகளாரின் அசைக்க முடியாத உறுதியைக் கண்ட அபூதாலிப் தமது முடிவை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. நபிகளாரைத் தடுத்து நிறுத்தி, அருகில் அழைத்துச் சொன்னார்.

வருவதை எதிர்கொள்வோம்

“எனது சகோதரரின் மகனே! நீர் உம்முடைய கொள்கையில் நிலையாக நில்லுங்கள். வருவதை எதிர்கொள்வோம்!” உருட்டல், மிரட்டல், சாதுர்யங்கள் எதுவும் எடுபடாததைக் கண்ட குறைஷிகள் தற்போது நேரிடையான வார்த்தை மோதலில் இறங்கினார்கள். தடித்த வார்த்தைப் பிரயோகங்கள்தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம். மோதல்களுக்கு வழிவகுக்கும் சாதனம். குறைஷிகள் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்தார்கள். ஆனால். நபிகளாரோ இவற்றை அழகிய முறையில் எதிர்கொள்கிறார். குறைஷிகள் நபிகளாரைக் கிண்டலும், கேலியுமாய்ப் பரிகாசம் செய்தனர்.

நபிகளார் மிகவும் பொறுமையைக் கடைப்பிடித்தார். உணர்ச்சி பூர்வமாக எதிர்வினையாற்றவில்லை.

கொதித்தெழுந்த குறைஷிகள், “ஓ! முஹம்மதே! நாங்கள் உம்மை நிம்மதியாக இருக்க விட மாட்டோம்! உம்மை நாங்கள் அழிக்கும்வரை” என்று சூளுரைத்தார்கள்.

தமது போதனைகளுக்காக, நபிகளார் பட்ட துன்பங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாத துன்பக் காவியங்கள். நல்லொழுக்க அடிப்படையில் ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதற்கான அவரது முயற்சிகளுக்கு கிடைத்த பரிசுகள், சித்திரவதைகள், சமூக விலக்குகள், அடக்குமுறைகள் என விதம் விதமாக நீளும் பட்டியல் அது.

சுற்றமும், நட்பும், ஒட்டு மொத்த சமூகமும் பகையாகி நின்றபோது, நபிகளார் சத்தியத்தையும், பொறுமையையும் மட்டும் ஆயுதங்களாகிக் கொண்டார். இப்படி பதிமூன்றாண்டுகள் தாய் மண்ணில் மௌன யுத்தம் நடத்தினார். இந்த 13 ஆண்டுகளும், அண்ணலாரும் அவரைப் பின்பற்றி வாழ்ந்த தோழர், தோழியரும் குறைஷிகளின் கொடுமைகளுக்கு நித்தம் ஆளாகி இரத்தம் சிந்திக் கொண்டேதானிருந்தார்கள்.

நபிகளார், இறைக்கட்டளைப்படி மக்காவைத் துறந்து மதீனாவுக்கு செல்கிறார். இந்த சம்பவம்தான் வரலாற்றில் “ஹிஜ்ரத்” எனப்படுகிறது. இந்த முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இஸ்லாமிய ஆண்டு கணக்கும் நாட்காட்டியாய் கணக்கிடப்படுகிறது. நபிகளார் மற்றும் அவரது தோழர், தோழியரின் எண்ணற்ற தியாகங்களை நினைவுறுத்த ஹிஜ்ரி 1438-ம் ஆண்டு பிறந்துவிட்டது. இப்புத்தாண்டின் பிறப்புக்குப் பின்னால் புதைந்திருக்கும் வரலாற்றுப் படிப்பினைகள் ஏராளம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்