நம்மாழ்வாரின் அம்சம் கொண்ட மகிழ மரத்தடியில் பெரிய நம்பிகள், பஞ்ச சம்ஸ்காரத்தை ராமானுஜருக்குச் செய்துவித்தார். ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியான அந்த நன்னாளைக் கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் சதஸ் நடைபெற்றுவருகிறது. இவ்வாண்டும், செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற்ற சதஸில் உ.வே.கருணாகராச்சாரியார் கலந்துகொண்டு ஆன்மிக சொற்பொழிவாற்றினார். திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் ஏரிக்கரையில் அமர்ந்து, திருமஞ்சனம், தீர்த்தவாரி ஆகியவற்றைக் கண்டு களித்தனர்.
பஞ்ச சம்ஸ்காரம் என்றால் என்ன?பஞ்ச சம்ஸ்காரம் என்றால் ஐந்து விதமான வைணவச் சடங்குகள். அவை தாப, புண்ட்ர, நாம, மந்த்ர, யாகம் எனப்படும். இதனை ஸ்ரீராமானுஜர் நியமித்த ஆச்சார்யர்களின் வழி வந்தவர்கள் மூலமே பெற்றுக்கொள்ள வேண்டும். இச்சின்னங்கள் ஆத்மாவில் பொறிக்கப்பட வேண்டும். ஆத்மாவில் நேரடியாகப் பொறிக்க முடியாது அல்லவா? ஆத்மாவால் தாங்கப்படுகிற தேகத்தில் பொறிக்கப்பட வேண்டும். அரசனுடைய உடைமைகளில் அவனது சின்னத்தைப் பொறிப்பதுபோல் இறைவனுடைய உடைமையான சரீரத்தில் சின்னம் பொறிக்கப்படுகிறது.
தாப சம்ஸ்காரம்: பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் தரித்துக்கொள்வது. முறையே வலது தோளில் சக்கரத்தையும், இடது தோளில் சங்கத்தையும் முத்திரையாக நெருப்பில் சுட வைத்துப் பொறித்துக்கொள்ள வேண்டும். இதனை `கோயிற் கொடியானை ஒன்றுண்டு நின்று` என்று பெரியாழ்வார் குறிப்பிடுகிறார்.
புண்ட்ர சம்ஸ்காரம்: நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் திருமண் காப்புத் தரித்தல். இவற்றைத் தரிக்கும்பொழுது ஸ்ரீமன் நாராயணனின் பன்னிரெண்டு திருநாமங்களை உச்சரிப்பார்கள். இதனை வலியுறுத்தி நம்மாழ்வார் திருவாய்மொழியில், `கேசவன் தமர்` என்று தொடங்கும் பன்னிரெண்டு பாசுரங்கள் பாடியிருகிறார்.
நாம சம்ஸ்காரம்: பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) வைக்கும் பெயர் ஒன்றை வைத்துக்கொள்ளுதல். இதற்கு தாஸ்ய நாமம் என்று பெயர். இப்பெயருடன் தாசன் என்ற சொல்லை சேர்த்துக்கொள்வார்கள்.
மந்திர சம்ஸ்காரம்: ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றையும் ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல்.
யாக சம்ஸ்காரம்: திருவாராதணை, பூசை செய்யும் முறைமைகள் ஆகியவற்றை முறையாக ஆச்சாரியனிடம் கற்றுக்கொள்ளல். இவை அனைத்தும் ஒரு நன்னாளில், ஒரே வேளையில் நடத்தப்படும்.
இத்தகைய பஞ்ச சம்ஸ்காரத்தைத்தான் ஆச்சாரியனாக இருந்து பெரிய நம்பிகள், ஸ்ரீராமானுஜருக்கு 983 ஆண்டுகளுக்கு முன்னர் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறைமை இன்றளவும் தொடர்கிறது.