விசிஷ்டாத்வைதத்தை நெறியாகக் கொண்ட வைணவ சம்பிரதாயத்தில் உள்ள அஹோபில மடம் 620 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிவண் சடகோபன் சுவாமி என்பவரால் நிறுவப்பட்டது. அத்வைதம், ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டது. விசிஷ்டாத்வைதம் ராமானுஜரால் உருவாக்கப்பட்டது. அதாவது அவர்களால் காண்பிக்கப்பட்டது. ஏற்கனவே இருந்ததைச் சுட்டிக்காண்பித்தார்கள். சில சம்பிரதாயங்கள் சில காலங்களில் பிரபலமாகின்றன. மற்றவை அடக்கி ஆளப்படுகின்றன. ஆனால் வேதோத்தமான மதங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே பகவான் அவதாரம் எடுக்கிறார் என்று சொல்கிறார் அஹோபிலமடம் 46-வது பட்ட அழகியசிங்கர் ஜீயர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“அந்த வகையில்தான் அத்வைதத்தைப் பரப்புவதற்காக ஆதிசங்கரர் அவதாரம் எடுத்தார். ரிஷிகளைப் பற்றிக் கூறும்போது அவர்கள் மந்திரங்களைப் பார்த்தார்கள். அம்மந்திரகள் அநாதியானது. அவர்கள் உருவாக்கவில்லை, கண்டு கொண்டனர். அதுபோலத்தான் அதற்கு முன்னர் பெளத்த மதம், ஜைன மதம், சார்வாக மதம் ஆகியவை தோன்றின. விசிஷ்டாத்துவைதமான வைணவ சம்பிரதாயத்தை உடையவர் என்று அழைக்கபப்டுகிற ராமானுஜர் பிரகாசப்படுத்தினார். 2015- ம் ஆண்டு அதாவது அடுத்த ஆண்டு அவரது ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா வருகிறது. மத்துவ சம்பிரதாயத்தை ஆனந்த தீர்த்தர் பிரபலப்படுத்தினார். அனைவருமே ஸ்தாபகர்கள் – தொடங்கிவைத்தவர்கள்தானே தவிர தோற்றுவித்தவர்கள் அல்ல. மறைந்திருந்த உருவத்தை பிரகாசப்படுத்துனார்கள்.
அதே போல் 620 ஆண்டுகளுக்கு முன்னர் மேல்கோட்டையில் கேசவாச்சார்யாருக்கு, நிவாசாசார் என்ற ஒரு குழந்தை பிறந்தது. இவர் காஞ்சியில் வேதம் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் இவரது கனவில் வந்த அஹோபிலம் நிருசிம்மன், தன்னைத் தரிசிக்க அஹோபிலம் வருமாறு கூறினார். ஆழ்வார் பாசுரங்களிலேயே, சென்று காண்டர்க்கு அரிய கோவில் என்று அஹோபிலத்தைக் குறிப்பிட்டு உள்ளார்கள். மிகவும் சிரமப்பட்டே அந்தக் கோவிலை அடைய முடியும் என்பதே அதன் பொருள். துஷ்ட ஜந்துக்கள் நிறைந்த அக்காட்டிற்குச் சென்றார் ஸ்ரீநிவாசார்யார்.
அந்தக் காட்டில் அவருக்கு வழியே தெரியவில்லை. அப்போது ஒரு பாம்பு, அவருக்கு வழியைக் காட்டிக் கொண்டே முன்னால் சென்றது. பாபநாசினி என்ற தீர்த்தக்கரையைச் சென்றடைந்தவுடன் அந்தப் பாம்பு மறைந்துவிட்டது. இவரும் தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு வெளியே வர, அந்தக் காட்டிலும் வயதான சந்நியாசி ஒருவர் அவர் முன் தோன்றி பேஷ மந்திரம் உபதேசம் செய்தார். அந்த வயதான சந்நியாசி மறைந்துவிட்டார். அவரே நிருசிம்ம பெருமாள் எனக் கண்டு கொண்டார் நிவாசார்யார். பின்னர் அங்குள்ள மாலோல நிருசிம்மனைத் தரிசிக்கச் சென்றார். அஹோபிலம் என்ற தலத்தில் மலைகளின் மீது ஒன்பது நிருசிம்மர்கள் எழுந்தருளி உள்ளார்கள்.
இதற்கும் ஒரு புராணக் கதை உள்ளது. பிரதாபசிம்மன் என்றொரு ராஜா. அவன் தினமும் தங்கத்தால் உமா மகேஸ்வர விக்கிரகம் செய்து அதை உடனடியாகத் தானம் செய்தபின் மதிய உணவு உட்கொள்வான். இப்படியாக ஒரு நாள் அதே அச்சில் தங்கத்தை உருக்கி ஊற்றி எடுத்தால் லஷ்மி நரசிம்மராக வருகிறது. ஒரு முறையல்ல மூன்று முறையாக இப்படியே வருகிறது. இந்த இடம் நிருசிம்ம தலம் என்பதை உணர்ந்து கொண்ட அம்மன்னன் அது முதல் தங்க நிருசிம்ம விக்கிரகத்தைத் தானம் செய்து கொண்டு வந்தானாம். அப்படி தானமாக வந்த தங்க நிருசிம்ம விக்கிரகம் இன்றும் அஹோபில மடத்தில் பூஜையில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க ஸ்ரீ நிவாசார்யார், மாலோல பெருமாள் முன்னிலையில் ஜபம் செய்து கொண்டிருந்தபோது, மூலவர் லஷ்மி நிருசிம்மர் தானே இவரது கையில் எழுந்தருளிவிட்டாராம். கூடவே ஓர் அசிரீரி எழுந்து, தன்னை ஆராதித்து பிரபலப்படுத்துமாறு கூறியதாம். அப்போது அவரது பெயர் ஜீயர் சுவாமி. ஜீயர் என்றால் சந்நியாசி , உயர்ந்தவர் என்று அர்த்தம். பின்னர் நம்மாழ்வாரால் சடகோபன் என்ற சிறப்புப் பெயர் பெற்று சடகோபன் ஜீயர் என்று ஆனார். ஆழ்வார் திருநகரியில் கோயில் கொண்டுள்ள ஆதிபிரான் என்ற பெருமாள் தன்னுடைய பெயரில் உள்ள ஆதி என்பதையும் அளித்துச் சிறப்பித்தார். வண் என்றால் வள்ளல், அனைத்தும் அறிந்த சிறந்தவர் என்று பொருள். அந்த வண் பட்டமும் சேர ஆதிவண் சடகோபன் ஜீயர் சுவாமி என்றானது. இவர் தோற்றுவித்ததே அஹோபில மடம்” என்றார் தற்போதைய இம்மடப்பீடாதிபதியான 46-வது பட்டம் அழகியசிங்கர்.
இவரது திருநட்சத்திர விழா குறித்து, இம்மடத்தின் சன்னதி காரியம் டாக்டர் எஸ்.பத்மநாபச்சாரியார் தெரிவித்ததாவது:
“தற்போது பீடாதிபதியாக உள்ள இவரையே ஆசார்யனாகக் கொண்ட சீடர்கள் பூஜை செய்வதே திருநட்சத்திரச் சிறப்பு. அன்றைய தினத்தில் இருந்து மூன்று நாட்களுக்கு நான்கு வேதங்களும் ஓதப்படும். இங்கு வரும் பக்தர்களுக்கு, அஹோபில மடம் ஆதிவண் சடகோபன் ஜீயர் கையில் வந்து அமர்ந்த மாலோல நிருசிம்மனுக்குப் பூஜை, ஆராதனைகள் செய்யப்படும். பிரசாதமாக பக்தர்களுக்கு அட்சதை, தீர்த்தம் அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படும்” என்று தெரிவித்தார். சென்னை தாம்பரம், சேலையூரில் உள்ள இம்மடத்தின் மாலோல பெருமாளைத் தரிசித்தால் வேண்டுவனவெல்லாம் கை கூடுகிறது என்பது பக்தர்கள் நம்பிக்கை.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago