நெகிழ்ச்சி தரும் நெமிலி பாலா பீடம்

By குள.சண்முகசுந்தரம்

‘நான் பார்க்க நினைப்பவர்கள்தான் என்னைப் பார்க்க வருவார்கள். என்னைப் பார்க்க நினைப்பவர்கள் கோயிலுக்குத்தான் செல்வார்கள். கோயிலுக்குச் செல்ல அழைப்பு தேவையில்லை; நினைப்பே போதும். என் வீட்டிற்கு வர நினைப்பு மட்டும் போதாது; எனது அழைப்பும் வேண்டும்.’ நெமிலியில் குடிகொண்டிருக்கும் அகிலம் புகழும் அன்னை பாலாவின் அருள் வாக்கு இது.



ராமசுவாமி அய்யரும் நெமிலியும்

வேலூர் மாவட்டம் தாங்கி என்னும் சிற்றூரில் வசித்தவர் ராமசுவாமி அய்யர். கடவுளுக்குத் தொண்டு செய்து காலம் செலுத்திய வேதவிற்பன்னரான ராமசுவாமி அய்யருக்கும் கஷ்ட காலம் வந்தது. அதிலிருந்து மீள முடியாமல் தனது குடும்பத்தோடு ஊரை விட்டே கிளம்பினார்.

கால்நடையாகவே வந்தவர்கள் அரக்கோணம் அருகிலுள்ள நெமிலி கிராமத்தை வந்தடைகிறார்கள். அங்கு சத்திரம் ஒன்றைக் கண்டவர்கள், நிரந்தரமான வசிப்பிடம் கிடைக்கும்வரை இங்கேயே தங்கலாம் எனத் தீர்மானிக்கிறார்கள். ஆனால், சத்திரத்தின் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களோ, இது மோகினிப் பிசாசு குடியிருக்கும் இடம் என்று அச்சமூட்டுகிறார்கள். அய்யர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

தூசிபடிந்து கிடந்த சத்திரத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தீபம் ஏற்றினார் அய்யரின் மனைவி சாவித்திரி. அன்று இரவு உணவை உண்டு அனைவரும் உறங்கிப் போனார்கள். ஆனால், ராமசுவாமி அய்யர் விடிய விடியக் கண்விழித்து மந்திரங்களைப் பாராயணம் செய்து கொண்டே இருந்தார். பொழுது விடிந்ததும் சத்திரத்துக்கு ஓடிவந்த ஊர் மக்கள், அங்கே அய்யரும் அவரது மனைவி மக்களும் நலமுடன் இருந்ததைக் கண்டார்கள். இவர்களிடம் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த ஊர்மக்கள், அய்யர் குடும்பம் நிரந்தரமாக தங்கள் ஊரிலேயே தங்கி இருக்க வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.

கனவில் வந்த பாலா

காலங்கள் கடந்தன. ஒருநாள் இரவு, ராமசுவாமி அய்யரின் இரண்டாவது மகன் சுப்பிரமணியனின் கனவில் ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி காட்சி கொடுத்தாள். “அன்னை ராஜராஜேஸ்வரியின் அருளாசிப்படி பாலாவாகிய நான் கொசஸ்தலை ஆற்றில் மிதந்து வந்து கொண்டிருக்கிறேன். அங்கிருந்து என்னை நீ எடுத்து உனது இல்லத்தில் வைத்து அமர்த்திக்கொள்; நீ தொட்டது அனைத்தும் துலங்கும்” என்று சொல்லி மறைந்தாள் சிறுமியாய் காட்சிதந்த பாலா.

அன்னை பராசக்தியே தனது இல்லத்தில் அவதரிக்கப் போவதாகப் பேரானந்தம் கொண்டார் சுப்பிரமணியன். விடிந்தும் விடியாததுமாய் ஊரார் சிலரோடு கொசஸ்தலை ஆற்றுக்கு ஓடினார். ஆற்றில் இக்கரைக்கும் அக்கரைக்குமாய் அலையடித்தது வெள்ளம். அதில் இறங்கி, பாலாவைத் தேடினார் சுப்பிரமணியன். வெகுநேரமாகியும் பாலா வரவில்லை. சோர்ந்து போய் நின்றவரை ஊரார் சமாதானம் செய்தார்கள். மறுநாள், தான் மட்டும் ஆற்றுக்கு ஓடினார் சுப்பிரமணியன். இம்முறையும் பாலா பிரசன்னமாகவில்லை. அப்படியும் முயற்சியைக் கைவிடாதவர் மூன்றாம் நாளும் ஆற்றில் இறங்கித் தேடினார்.

அப்போதும் கிடைக்கவில்லை. இறுதியாக, பாலாவை நினைத்தபடி ஆற்றில் ஒருமுறை மூழ்கி எழுந்தார். வலைவீசித் தேடியும் கிடைக்காத பாலா, சுப்பிரமணியனின் கையில் வாகாய் வந்தமர்ந்தாள் என்று சொல்லப்படுகிறது.

விரல் அளவிலான பாலாவைப் பார்த்துப் பரவசம் கொண்டவர் பாலா விக்கிரகத்துடன் வீடுவந்து சேர்ந்தார். நவராத்திரிக்கு சில தினங்களே இருந்த நிலையில் குழந்தை பாலா, சுப்பிரமணிய அய்யரின் இல்லத்தில் குடியேறிய செய்தி கேட்டு நெமிலியே திரண்டுவந்தது. அந்த ஆண்டு நவராத்திரிக் கொண்டாட்டங்களின் நாயகி ஆனாள் பாலா. ஒன்பது நாட்களும் ஹோமம், அபிஷேகம், பூஜைகள், அன்னதானம், வஸ்திரதானம் என அமர்க்களப்பட்டது பாலா குடில். தான் குடிகொண்ட கிராமத்தையும் தன்னை வணங்கிச் சென்ற மக்களையும் செல்வச் செழிப்பாக்கினாள் பாலா. இப்படித்தான் சுப்பிரமணிய அய்யரின் இல்லம் பாலா பீடமானது.

அவளே அழைப்பாள்

காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் 23-ம் கிலோமீட்டரில் இருக்கிறது நெமிலி. இங்குதான் பாலா பீடம் அமைந்திருக்கிறது. “காஞ்சி காமாட்சியாக, மதுரை மீனாட்சியாக இருப்பதெல்லாமே பாலா தான். இது கோயில் அல்ல.. பாலாவின் இல்லம். யாரும் நினைத்த மாத்திரத்தில் இங்கு வந்து இவளை எளிதில் பார்த்துவிட முடியாது. ஆனால், யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அவர்களை அவளே நேரம் கொடுத்து அழைப்பாள். அப்படி அவளால் அழைக்கப்படுகிறவர்கள் இங்குவந்து வைக்கும் வேண்டுதல்களை அவள் நிறைவேற்றிக் கொடுப்பாள்.

எக்காரணம் கொண்டும் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றித் தந்தால், ‘நான் உனக்கு இதைச் செய்கிறேன்’ என்று வேண்டிக்கொள்ளாதீர்கள். ஏனென்றால் பாலா யாரிடமும் யாசகம் கேட்க மாட்டாள். அதனால்தான் இங்கே உண்டியல்கூட வைப்பதில்லை” என்கிறார் ஸ்ரீபாலா பீடாதிபதி நெமிலி எழில்மணி காஞ்சி மகாபெரியவர், திருமுருக கிருபானந்த வாரியார், பரமஹம்ச புவனேஸ்வரி சுவாமிகள் உள்ளிட்ட மகான்கள் பலரும் பாலா பீடம் வந்து பாலாவை தரிசித்துள்ளனர். பாலா பீட இல்லத்தின் மையத்தில் பாலா வீற்றிருக்கிறாள். பக்தர்களுக்கு இங்கே சாக்லேட்தான் பிரசாதம். விரும்பினால் நாமும் சாக்லேட் வாங்கி பாலாவுக்குக் கொடுக்கலாம்.

நவராத்திரி நாயகி பாலா

நவராத்திரி சமயத்தில் நலம்பயக்க நாடிவந்தவள் என்பதால் ஆண்டுதோறும் பாலா சன்னிதியில் நவராத்திரி உற்சவம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த பதினோரு நாள் வைபவத்தில் மலைமகள், அலைமகள், கலைமகள் என நித்தம் ஒரு அவதாரத்தில் அன்னை பாலா அருள்பாலிக்கிறாள். நவமி அந்தியத்தில் நடைபெறும் மகிஷாசுர வதம் வைபவத்தைக் காண பக்தர்கள் திரளாக வந்து குவிகிறார்கள்.

புத்தாண்டு தினங்கள், மாதத்தின் முதல் ஞாயிறு, தை மற்றும் ஆடி வெள்ளி தினங்களில் பாலாவுக்குச் சிறப்பு வழிபாடுகள் உண்டு. திருமணத் தடை நீக்குவதிலும் குழந்தை வரம் தருவதிலும் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளைச் சரி செய்வதிலும் அன்னை பாலா அருட்கொடை தெய்வமாக திகழ்கிறாள்.

பாலாவைத் தரிசிக்கும் நேரம்

தினமும் காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து இரவு 7 மணி வரையிலும் பாலா பீடம் பக்தர்களுக்காகத் திறந்திருக்கும். எனினும், பாலா பீட நிர்வாகிகள் அடிக்கடி ஆன்மிக யாத்திரை செல்பவர்கள் என்பதால் அன்பர்கள் 04177 247216 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை தெரிவித்துவிட்டு பாலாவை தரிசிக்கக் கிளம்புவது நலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்