ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் அருள்பாளிப்பார்: தரிசனத்துக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 23-ம் நாளில் அத்தி வரதர் இளம் பச்சை நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசித்த பின் முதல்வர் பழனிசாமி பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலர் சண்முகம், காவல்துறை தலைவர் திரிபாதி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திரரெட்டி, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உட்பட பலர் பங்கேற்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள், பாதுகாப்புகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அத்தி வரதர் வைபவம் ஆகஸ்ட் 17-ம் வரை நடைபெற உள்ளது. தற்போது சயன கோலத்தில் இருக்கும் அத்தி வரதர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இந்த விழாவுக்கென 19.4.2019, 4.5.2019, 11.6.2019, 15.6.2019, 27.6.2019 ஆகிய நாட்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பக்தர்களைப் பாதுகாக்க அவர்கள் வரிசையில் நிற்கும் பகுதியில் சுமார் 2,600 மீட்டர் நீளத்துக்கு தற்காலிக நிழற்கூடம் அமைக்கப்பட்டு பக்தர்கள் நிழற்கூடத்தில் அமர்ந்து செல்லக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம்.

அதேபோல் 8,000 நபர்கள் நின்று செல்லக்கூடிய வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற பக்தர்கள் அங்கே இளைப்பாறி மீண்டும் சுவாமி தரிசனம் செய்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிபக்தர்களும், மாற்றுத்திறனாளிகளும் எளிதாக சுவாமி தரிசனம் செய்வதற்கு அவர்களுக்கு தனியாக சிறப்பு வழி அமைக்கப்பட்டு அங்கே கிட்டத்தட்ட 750 சக்கர நாற்காலிகளும், 8 பேட்டரி கார்கள் மற்றும் 2 மோட்டார் வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 22-ம் தேதி வரை சுமார் 30.50 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துள்ளனர்.

இதுவரை இந்த விழாவுக்காக 3,41,982 வாகனங்கள் காஞ்சிபுரத்துக்கு வந்து சென்றுள்ளன. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல் துறைத் தலைவர், 1 காவல் துறை துணைத் தலைவர், 7 காவல் கண்காணிப்பாளர்கள், 8 காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள், 40 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 98 காவல் ஆய்வாளர்கள் 3,300 காவலர்கள் தினந்தோறும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணிகளை கவனித்து வருகின்றனர். மேலும் 9 காவல் உதவி மையங்கள் மற்றும் 46 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

மேலும் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு 40 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளியூரிலிருந்து வருகின்ற பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து பக்தர்களை 40 மினி பஸ்கள் மூலமாக சுவாமி தரிசனம் செய்வதற்கு அழைத்து வருகின்றன. அதேபோல 14 சிறப்பு மருத்துவ முகாம்களும், 20 நடமாடும் மருத்துவ முகாம்களும், 108 ஆம்புலன்ஸ் உடன் கூடிய 10 தற்காலிக மருத்துவ அறைகளும், 10 இருசக்கர ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. 5 தீயணைப்பு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, துணை இயக்குநர் தலைமையில் 250 தீயணைப்பு வீரர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

பக்தர்கள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, ஒரு நாளைக்கு 2,000 சிறப்பு தரிசன டிக்கெட்கள் ரூபாய் 300 மதிப்பில் இணைய வழி முன்பதிவு மூலம் 19.7.2019 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3,000 பக்தர்கள் இருக்கும் அளவுக்கு கூடுதலாக 2 நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 2 பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. கூடுதலாக 500 சக்கர நாற்காலிகள் வசதி செய்யப்பட்டுள்ளது. 615 சுகாதாரப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். 5 அவசரகால வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது தரிசன வரிசையில் புளி சாதம், தயிர் சாதம், பொங்கல் போன்ற பிரசாதங்களும், பிஸ்கெட்டுகளும் மற்றும் தண்ணீர் வழங்கப்படுகின்றன. மேலும் 18 இடங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு தண்ணீர் வழங்கப்படுகிறது. தற்போது காவல் பணியில் 5,118 காவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஏற்பாடுகள் மீது சிறப்பு கவனம் செலுத்த இரு மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் பாஸ்கரன், சுப்பையன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 10 துணை ஆட்சியர்கள் நிலையிலுள்ள அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தி வரதரை தரிசனம் செய்த தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் பழனிசாமி வருகையையொட்டி மேற்கு கோபுர வாசல்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அனுமதி அட்டை இல்லாத யாரும் அந்தப் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. அத்தி வரதரை தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்கள் வெளியேறுவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த தமிழக முதல்வர் பழனிசாமியை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, அதிமுக மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் சிவப்பு கம்பள வரவேற்புடன் மேற்கு கோபுர வாசல் வழியாக அத்தி வரதர் இருக்கும் வசந்த மண்டபத்துக்கு முதலமைச்சர் பழனிசாமியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இவர் வருகையையொட்டி சுமார் 15 நிமிடங்கள் மட்டும் பொது தரிசனம் நிறுத்தப்பட்டது. இவர் வசந்த மண்டபத்துக்குள் சென்றதும் பொது தரிசனம் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டது. அங்கு அத்தி வரதரை தரிசனம் செய்த முதலமைச்சர் பழனிசாமி பின்னர் அங்கு நடைபெற்று வரும் ஏற்பாடுகள் குறித்தும், பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் கோயிலில் இருந்து அவர் செல்லும்வரை போலீஸார் கெடுபிடிகள் அதிகம் இருந்தன. வீட்டின் மாடிகள் மேலிலிருந்தவாறும் போலீஸார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்