புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, திருமயம் என்னும் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஊர். திருமெய்யம் என்கிற சொல்லே திருமயம் என இன்றைக்கு மருவி அழைக்கப்படுகிறது.
திருமெய்யம் என்றால் உண்மையின் இருப்பிடம் என்று அர்த்தம். இந்த ஊரின் சிறப்புக்குப் பெருமை சேர்ப்பவை ஊரின் நடு நாயகமாக உள்ள மலைக்கோட்டையும் மலையின் தெற்குச் சரிவில் அருகருகே அமைந்துள்ள சிவன், விஷ்ணு குகைக்கோயில்களும் ஆகும்.
இவை பொ.ஆ.(கி.பி.) 7-8ஆம் நூற்றாண்டில் மிக மிக நுட்பமான கலைச் சிறப்போடு உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்களாகும். சிவபெருமானுக்கு சத்தியகிரீஸ்வரர் என்பதும் விஷ்ணுவுக்கு சத்தியமூர்த்தி என்பதும் பெயராகும். இந்த விஷ்ணு கோயில் திருமங்கை ஆழ்வாரின் பாடல் பெற்ற தலம் (பெரிய திருமொழி).
திருமயத்தில் குடிகொண்டிருக்கும் சத்தியமூர்த்தித்தலம் வைணவர்களின் முக்கியமான கோயிலாகும். இக்கோயிலே ஆதிரங்கம் என அழைக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலைவிடக் காலத்தால் முந்தையது. தென்பாண்டி மண்டலத்துப் பதினெட்டுப் பதிகளுள் ஒன்று.
கதை சொல்லும் சிற்பங்கள்:
விஷ்ணு குகைக்கோயிலில் அவர் அனந்தசயன மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அனந்தசயன மூர்த்தி மலையோடு சேர்ந்து பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கிறார். அவர் ஆதிசேஷன் என்கிற ஐந்து தலை அரவத்தின் மீது சயனித்திருக்கிறார். அனந்தசயன மூர்த்திக்குப் பின்னால் உள்ள சுவரில் ஒரு கல்லில் ஒரு கதை நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.
குகைச் சுவரில் இடமிருந்து வலமாக கருடன், சித்திரகுப்தன், மார்க்கண்டேயன், பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், கின்னரர்கள் ஆகியோரது உருவங்களும் வலது கோடியில் மது, கைத்தபு எனப்படும் இரு அசுரர்கள் கொடூரப் பார்வையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
விஷ்ணுவின் காலடியில் பூதேவி திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது. பெருமாளின் மார்பில் தஞ்சம் கொண்டுள்ள திருமகளை அவரது இடதுகை அணைக்க, வலது கை ஆதிசேஷனைத் தட்டிக்கொடுக்கும் பாவனையில் உள்ளது. இவை வெறும் சிற்பங்கள் மட்டுமல்ல.
இதில், உயிரோட்ட முள்ள ஒரு கதையைச் சித்தரித்திருக்கிறார் சிற்பி. தேவியர் அருகில் இருக்க ஏகாந்தமாகப் பள்ளிகொண்டிருக்கிறார் சத்தியமூர்த்திப் பெருமாள்.
நல்லிணக்கம் காத்த நாட்டாமை கூட்டம்:
சத்தியகிரீஸ்வரர் மூலவராக உள்ள சிவன் கோயிலைப் பார்க்கலாம். வரலாற்று ஆவணமான, சுவாரசியமான ஒரு நாட்டாமைக் கூட்டம் பொ.ஆ.1224இல் திருமயம் கோயிலில் நடைபெற்றதற்கான கல்வெட்டைக் காண முடிகிறது. சத்தியகிரீஸ்வரம் என்னும் சிவன் கோயில், குன்றின் தெற்குச் சரிவில் உள்ள குகைக் கோயில் ஆகும்.
மூலவர் லிங்கமாக எழுந்தருளியுள்ளார். இது கிழக்கு நோக்கி உள்ளது. குகைக் கோயிலின் வாயிலில் உள்ள துவாரபாலகர் சிற்பங்கள், குடுமியான் மலைச் சிற்பங்களைப் போல் எழிலானவை. மண்டபத்தின் சுவர்களிலும், மேல் விதானத்திலும் ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.
சைவ, வைணவ பக்தர்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்கும், அதைத் தீர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்டாமைக் கூட்டமும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கட்டப்பட்ட ஓர் உறுதியான கருங்கல் தடுப்புச் சுவர் இன்றைக்கும் மாறாத வரலாற்றுச் சான்றாய், கம்பீரமாய் நிற்பதைக் காண முடிகிறது. அக்கால வேளைகளில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்றைக்கும் சிவன், விஷ்ணு கோயில்களில் எந்தக் கருத்து வேற்றுமையும் பூசல்களும் இன்றி நாளும் பூசைகளும், விழாக்களும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றன.
> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago