மலையைத் தகர்த்த வேல்!

By பூசை ஆட்சிலிங்கம்

சூரபத்மன் அரசோச்சிய காலத்துக்கும் நெடுங்காலத்துக்கு முன்பாகவே தோன்றியவன் கிரௌஞ்சன். அவன் கிரௌஞ்சப் பறவையாக வடிவெடுத்து வாழ்ந்ததால் அந்தப் பெயர் பெற்றான். அவன் கொடியவன், பற்பல மாயங்களைச் செய்வதில் வல்லவன். தனது மாயத்தால் எல்லோரையும் துன்புறுத்தி அலைக்கழிப்பவன். அவன் செய்த மாயத்தால் மலைத்து மாண்டவர்கள் பலர்.

ஒரு சமயம் மாமுனிவர் அகத்தியர் தன் வழியில் வந்தபோது மலை வடிவில் இருந்து மாயம் செய்து அவரைத் துன்புறுத்தினான். கோபம் கொண்ட அகத்தியர், அவனை மலையாகவே எப்போதும் இருக்கும்படிச் சபித்துவிட்டார். அந்தச் சாபத்தால் அவன் நெடுமலையாகிக் கிடந்தான். மலையாகிவிட்ட போதிலும் அவனது கொடுஞ்செயல் புரியும் புத்தி மாறவில்லை. தம்மிடம் வருகிறவர்களை அழித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

அவன் சூரபத்மனின் தம்பியாகியாகத் தாரகனிடம் நட்பு பூண்டிருந்தான். தாரகன் கிரௌஞ்ச மலையில் அரண்மனை கட்டிக்கொண்டு தனது பெரும் படை வீரர்களுடன் வாழ்ந்து வந்தான். கிரௌஞ்சகிரி, கடலோரத்தில் அமைந்திருந்தது. அதைத் தாண்டி கடலுக்குள் இருக்கும் தீவில் இருந்த மகேந்திர மலையில் சூரபத்மன் மாளிகை கட்டிக்கொண்டு வாழ்ந்தான். அதனால் சூரபத்மனின் மாளிகைக்குக் கிரௌஞ்சன் காவல் கோட்டையாகவும் இருந்தான்.

முருகன், சூரன் மீது படையெடுத்து வருவதை அறிந்த தாரகன், அவரை எதிர்த்து வந்தான். முருகன் வீரபாகுவைத் தூதாக அனுப்பினார். அவர் தனது தம்பிகளுடன் கிரௌஞ்ச மலையை அடைந்தார்.

கிரௌஞ்சன் பல குகைகளை உருவாக்கி வீரபாகுவையும் அவனுடைய தம்பிகளையும், வீரர்களையும் அவற்றின் உள்ளே புகும்படிச் செய்தான். அவர்கள் உள்ளே சென்றதும் குகைகளை மூடிவிட்டான். இருளிலும் காற்றின்மையாலும் எல்லோரும் திசையறியாது மயங்கி விழுந்தனர்.

செய்தியை அறிந்த முருகப் பெருமான், தனது வேலாயுதத்தைக் கிரௌஞ்சகிரி மீது செலுத்தினார். அது அந்த மலையைத் தவிடுபொடியாக்கிவிட்டது. தாரகன் மாண்டு ஒழிந்தான். அதனுள் சிக்கியிருந்த நவவீரர்களும் போர் வீரர்களும் வெளிப்பட்டுப் புத்துணர்ச்சி பெற்றனர்.

முருகன் அந்த மலையில் வீற்றிருந்து அரசு செலுத்திய ஆனைமுக அசுரனான தாரகனையும் அழித்தார். முருகன் கைவேலின் முதல் வெற்றி, தடங்கிரியான கிரௌஞ்ச மலையை அழித்ததும் அதில் வசித்திருந்த தாரகாசுரனை அழித்ததுமேயாகும். தேவர்கள் பொருட்டு கிரௌஞ்ச மலையை அழித்ததைப் போலவே புலவர் ஒருவருக்காகவும் வேலாயுதம் மலையைத் தவிடுபொடியாக்கிய கதை வரலாற்றில் இருக்கிறது.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE