அத்தி வரதரை வழிபட்டார் குடியரசுத் தலைவர்

By செய்திப்பிரிவு

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 12-ம் நாளில் அத்தி வரதர் காவிப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் அத்தி வரதரை தரிசனம் செய்தார். அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா உடன் வந்தனர்.

குடியரசுத் தலைவர் பன்வாரிலால் புரோஹித் காஞ்சிபுரம் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்ய இருப்பதாக மாவட்ட நிர்வாகம் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இதன்படி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானம் மூலம் புதுதில்லியில் இருந்து சென்னை வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வந்தார். இவரது ஹெலிகாப்டர் வரதராஜபெருமாள் கோயில் அருகே உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் உள்ள இறங்கு தளத்தில் இறக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குண்டு துளைக்காத காரில் ராம்நாத் கோவிந்த் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்தார். மாலை 3.10 மணிக்கு வந்த அவரை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புஹோஹித், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடன் வந்தனர்.

இவர் மேற்கு கோபுரம் வழியாக அத்தி வரதர் இருக்கும் வசந்த மண்டபத்துக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். வழியில் கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் வசந்த மண்டபத்தில் சயனக் கோலத்தில் இருந்த அத்தி வரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும் உடன் வந்து பிரார்த்தனை செய்தனர். சுமார் 30 நிமிடங்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 3.40 மணி அளவில் ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து புறப்பட்டார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்றார்.

இவரது வருகையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் முழுவதும் போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முக்கிய அதிகாரிகள் உட்பட பலரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. சம்பந்தம் இல்லாத நபர்கள் இடையில் நுழைகிறார்களா என்பதை கண்காணிக்க வீடுகளின் மாடியிலும் போலீஸார் நிறுத்தப்பட்டனர். இவர் வருகையின்போது காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் வரதராஜ பெருமாள் கோயில் அருகே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வசந்த மண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரமாக காட்சி அளித்தன. பக்தர்கள் செல்லும் வழிகள் தெரியாமலிருக்க வெண்ணிற துணிகள் மூலம் மூடப்பட்டன. பல்வேறு இடங்களில் கொசு புழுக்களை ஒழிக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன. தீ பாதுகாப்பு கருவிகள் கொண்டு வந்து வைக்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்தர ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சார் ஆட்சியர் சரவணன் உட்பட பலர் உடன் சென்றனர். ஐ.ஜி. தாமரைக் கண்ணன், டி.ஐ.ஜி.தேன்மொழி, எஸ்.பி.கண்ணன் ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

போலி அனுமதி சீட்டுகள்

முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டுகளைப் போல் போலி அனுமதி சீட்டுகளை பலர் வைத்துக் கொண்டு அத்தி வரதரை தரிசனம் செய்ய வந்தனர். வெளிநாட்டில் இருந்து வந்த தந்தை மகன் கொண்டு வந்த அனுமதிச் சீட்டுகள் போலி என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து அவர்களுக்கு யாரோ சில நபர்கள் ஏமாற்றி அந்த அனுமதிச் சீட்டை வழங்கியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை அனுமதித்த அதிகாரிகள் மற்றும் போலீஸார் அவர்களுக்கு அந்த அனுமதிச் சீட்டை வழங்கியது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதுபோல் ஏற்கெனவே கர்நாடகத்தில் இருந்து போலி அனுமதிச் சீட்டை எடுத்துக் கொண்டு 6 பேர் வந்தனர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து இதுபோல் போலி அனுமதி சீட்டை சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கூறும்போது “சிலர் முக்கிய பிரமுகர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் வழங்கும் அனுமதிச் சீட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்து வரும் பக்தர்களை இவர்கள் இதுபோல் ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்யப்படுவார்கள். இந்த அனுமதிச் சீட்டு நன்கொடையாளர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. வெளியில் விற்கும் இதுபோன்ற அனுமதிச் சீட்டுகளை யாரும் பணம் கொடுத்து வாங்க வேண்டாம். அவை ஸ்கேன் செய்யப்படும்போது போலி என்பது தெரிந்துவிடும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

12 days ago

மேலும்