காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இதற்காக, 20 அடி ஆழமும், 2.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட அனந்த சரஸ் புஷ்கரணி தீர்த்த குளத்தில் 40 ஆண்டுகளாக வாசம் செய்து வந்த அத்திவரதரை வெளியே எடுப்பதற்காக, குளத்தில் இருந்த தண்ணீர், மின்மோட்டார்கள் மூலம் கிழக்கு ராஜகோபுரம் அருகே உள்ள பொற்றாமரை குளத்துக்கு மாற்றப்பட்டது. அதில், வளர்ந்த மீன்களும் பாதுகாப்பான முறையில் அக்குளத்துக்கு மாற்றப்பட்டன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் 40 ஆண்டுகளாக நீருக்குள் இருந்த அத்தி வரதர் ஜூன் 28-ம் தேதி வெளியில் எடுக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் உள்ள நீர் வடிவதற்காக வசந்த மண்டபத்தில் வைத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி அதிகாலை அத்தி வரதருக்கு தைலக் காப்பு, லகு சம்ப்ரோக்ஷணம் எனப்படும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் வஸ்திரம் சாத்தப்பட்டு சயன கோலத்தில் பக்தர்கள் காண்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார். சிறப்பு பூஜையின்போது மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மூத்த பட்டாச்சாரியார்கள் உடன் இருந்தனர். பின்னர் ஜூலை 1-ம் தேதி காலை 5 மணி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அத்தி வரதர் வைபவம் தொடர்பான பணிகளை ஆய்வு செய்தார். வைபவத்துக்கு வரும் பக்தர்களுக்கு தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதியும், மாற்றுத் திறனாளிகளுக்குக்காக கோயிலின் கிழக்கு கோபுரத்தில் இருந்து பேட்டரி கார் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்தி வரதர் வைபவத்தில் பொதுமக்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக சுகாதாரத் துறை சார்பில் கோயில் வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் என 46 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. இதில், துணை இயக்குநர் செந்தில்குமார் தலைமையில் 167 மருத்துவர்கள், 654 பாரா மெடிக்கல் பணியாளர்கள், 74 சுகாதார ஆய்வாளர்கள் பணி புரிந்தனர். மேலும், 70 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் தரிசனத்துக்கு வந்த நபர்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர், பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்றனர். ஒருவருக்கு சுகப்பிரசவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 20 துணை கண்காணிப்பாளர்கள், 48 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2,656 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அத்தி வரதர் வைபவத்துக்காக 14 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் பகுதிக்குள் பயணிக்க 20 மினி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ரூ.10 கட்டணம் செலுத்தி பொதுமக்கள் இதில் பயணித்தனர். வெளியூர் வாகனங்கள் தடை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கோயில் இருக்கும் பகுதியில் மட்டுமே வாகனங்கள் தடை செய்யப்பட்டன. மற்றபடி வாகனங்கள் நகருக்குள் பெரும்பாலும் அனுமதிக்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திரரெட்டி, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் நேரில் களம் இறங்கி விழா ஏற்பாட்டு பணிகள், பாதுகாப்பு பணிகளை கவனித்தனர்.
இந்த அத்திவரதர் வைபவத்துக்காக காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி, ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. அங்கிருந்தே இந்த மினி பேருந்துகள் கோயிலுக்கு இயக்கப்பட்டன. கோயிலுக்கும் செல்லும் மக்கள் அங்கு இறங்கி மினி பேருந்தில் பயணம் செய்தனர்.
ஊனமுற்றோர், முதியோர் வரிசையில் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் பேட்டரி கார் மூலம் அழைத்து வரப்பட்டு விஐபி தரிசனம் செல்லும் பகுதியின் அருகே தனியாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் இவர்கள் சிரமமும் இன்றி அத்தி வரதரை தரசித்தனர்.
இந்த வைபவத்தையொட்டி காஞ்சிபுரம் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்ட நிலையில் இருந்தது. பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர் மோர், பானகம் முதலியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. வரதராஜப் பெருமாள் கோயில் அருகே உள்ள பல்வேறு மடங்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
நகராட்சி நிர்வாகம் சார்பில் கோயிலுக்கு வருபவர்களுக்கு குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டன. வரிசையில் வரும் பக்தர்களுக்கும் ஆங்காங்கே குழாய்கள் போடப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. தனியார் வணிக நிறுவனங்களும் தங்கள் கடைகளுக்கு வெளியே குடிநீர் வைத்திருந்தனர். புதிய கழிப்பிடங்களும் பல உருவாக்கப்பட்டன. வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக ஒரு வேனில் மொபைல் ஏடிஎம் வசதி செய்யப்பட்டிருந்தது.
ஜூலை 1-ம் தேதி முதல் 31 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 17 நாட்கள் நின்ற கோலத்திலும் தினம் வண்ண வண்ணப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த 48 நாட்களில் அத்தி வரதரை 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்தனர்.
அத்தி வரதரை பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், அப்போதைய ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி போன்ற முக்கிய பிரமுகர்களும் தரிசித்தனர்.
மொத்தம் 48 நாட்கள் நடைபெற்ற இந்த வைபவத்தில் 47 நாட்கள் பக்தர்கள் தரசினத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நிறைவு நாள் என்பதால் அதிகமான கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பக்தர்கள் வருகை நிறைவு நாள் அன்று சீராகவே இருந்தது. வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்த பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துவிட்டு காஞ்சிபுரம் நகரை விட்டு வெளியேறியதால் நகரிலும் நெரிசல் குறைவாக இருந்தது.
பொது தரிசனத்தில் வந்த பக்தர்கள் 3 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்துக்குள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். அத்தி வரதர் வைபவத்தின் நிறைவு நாளில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்தனர்.நிறைவு நாளுக்கு முதல் நாள் அனந்த சரஸ் குளத்தை ஆட்சியர் பா.பொன்னையா மற்றும் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆய்வு செய்தனர்.
1937-ம் ஆண்டும், 1979-ம் ஆண்டும் சுவாமி பள்ளியறையில் எழுந்தருளிய பின் ஒரு மாதம் அதிக மழை பெய்துள்ளது. அதற்கு முன்பும் பெய்துள்ளதாக பெரியவர்கள் சொல்லக் கேட்டுள்ளோம். அதேபோல் இந்த ஆண்டும் மழை பெய்து தானாகவே இந்த திருக்குளம் நிரம்பும் என்பது பெரியவர்கள் வாக்கு. இந்தக் குளத்தில் சுவாமியின் தலைப் பகுதி மேற்கு பாகத்திலும், திருவடி கிழக்கு பாகத்திலும் உள்ளவாறு வைக்கப்படுவார் என்று பட்டாச்சாரியார் கிட்டு தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூவலர் உட்பட அனைத்து சந்நிதானங்கள் மற்றும் உற்சவங்களின் போது, சுவாமிக்கு அலங்கரிக்கப்படும் மலர் மாலைகளை பரம்பரை பரம்ரையாக ஒரு குடும்பத்தினர் தயாரித்து வருகின்றனர். அத்திவரதருக்கு ஏலக்காய், பாதம், மல்லி, சாமந்தி, அத்திப்பழம் உள்ளிட்டவற்றால் 48 நாட்களும் பல்வேறு வடிவங்களில், மாலை தயாரித்து அலங்கரிக்கப்பட்டது.
இதில், அத்திப்பழம் மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்த அத்திவரதரை காண கண்கோடி வேண்டும் என சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு மீண்டும் அத்திவரதர் அலங்காரத்துக்கு மாலை தயாரிக்க கிடைக்கப் பெற்ற வாய்ப்பு, பெரும் பாக்கியமாக கருதுவதாக அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அத்திவரதருக்கு இரண்டாம் முறையாக மாலை தயாரித்த கமலா (65) கூறியதாவது: "எனது கணவர் மாசிலாமணி, அவரது குடும்பத்தினர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வம்சாவழியாக மாலை தயாரித்து வழங்கி வருகின்றனர். அதன்மூலம், கடந்த 1979-ம் ஆண்டு நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தில் சுவாமிக்கு சூட்டுவதற்காக எனது கையால் மாலை தயாரித்தேன். தற்போது, 40 ஆண்டுகளுக்கு மீண்டும் அத்திவரதருக்கான மாலையை கட்டுவது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.
கடந்த முறை இரண்டு அல்லது மூன்று மாலைகள் மட்டுமே கட்டினோம். ஆனால், இம்முறை நாள் ஒன்றுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான வண்ண, வண்ண மலர்களை கொண்டு பல்வேறு வடிவிலான மாலைகளை கட்டியுள்ளோம். எனது பேரன்கள் சுரேஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் இப்பணிகளை தற்போது செய்து வருகின்றனர். பழமாலைகளை தயாரிக்கும் பணியில் 10 நபர்கள் ஈடுபட்டோம். மாலை தயாரிக்க கூலி மட்டும் 35 ஆயிரம் செலவாகியது. நன்கொடையாளர்கள் மலர்களை வாங்கி தருவர், நாங்கள் மாலையாக தயாரித்து வழங்கியுள்ளோம்" என்றனர்.
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தின் நிறைவு நாளில் ரோஜா நிறப் பட்டாடையில் அத்திவரதர் அருள்பாலித்தார். அவருக்கு 48 வகையான பலகாரங்கள் நைவேத்யம் செய்யப்பட்டன. நிறைவு நாளில் அத்திவரதரை கோயிலில் உள்ள பட்டர்கள், ஸ்தானிகர்கள உள்ளிட்டோர் மட்டும் தரிசித்தனர். அதேபோல் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இதையொட்டி வரதராஜ பெருமாள் கோயிலின் கிழக்கு கோபுரம் மற்றும் மேற்கு கோபுரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த படையல் நிகழ்வுகள் முடிந்து வரதராஜ பெருமாள் கோயில் உற்சவர் அத்திவரதரை தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேத கோஷங்கள், மேள தாளங்கள் முழங்க வந்த உற்சவர் அத்திவரதரை தரிசனம் செய்தார். இத்துடன் இந்த அத்திவரதர் வைபவ நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இதைத் தொடர்ந்து இந்த விழாவுக்காக அமைக்கப்பட்ட பந்தல்கள், மற்றும் தற்காலிக மரப்பாலங்கள் உள்ளிட்டவற்றை பிரிக்கும் பணிகள் நடைபெற்றன.
அனந்தசரஸ் குளத்தில் சயனித்தார் அத்திவரதர்: ஆராதனை நிகழ்வுகளுக்குப் பின் கோயிலில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் சயனிக்க வைக்க ஆகம விதிப்படி செய்யப்பட வேண்டிய பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அத்திவரதருக்கு தைலக்காப்பு நடைபெற்றது.
அத்திவரதரை வைக்க உள்ள அனந்தசரஸ் குளத்தில் நீர் சுரந்தபடி இருந்தது. இந்த நீர் குளத்தில் இருப்பது அத்திவரதரை மண்டபத்துக்குள் வைத்து பூஜை செய்ய இடையூறாக இருக்கும் என்பதால் ராட்சச மோட்டார்கள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திரரெட்டி இந்த குளத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் அத்திவரதருக்கு செய்யப்பட்ட அலங்காரம் கலைக்கப்பட்டு வஸ்திரம் மட்டும் சாற்றப்பட்டு அனந்த சரஸ் குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அப்போது கோயில் பட்டர்கள், மற்றும் ஸ்தானிகர்கள் மட்டும் குளத்துக்குள் இருந்தனர். அங்கு அத்திவரதரின் தலைப் பகுதி மேற்கிலும், திருவடிப் பகுதி கிழக்கிலும் இருக்குமாறு சயனக்கோலத்தில் அங்குள்ள கருங்கல் கட்டிலில் வைத்தனர். அவரது தலைப் பகுதி கருங்கல் கட்டிலில் உள்ள திண்டில் வைக்கப்பட்டது. அவரை சுற்றி 16 நாக பாஷங்கள் வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து பட்டர்கள், ஸ்தானிகர்கள் உள்ளிட்டோரால் ஆகம விதிப்படி செய்யப்பட வேண்டிய பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பள்ளியறை பாசுரங்கள் பாடப்பட்டு அத்திவரதர் சயனிக்க வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த குளம் நீரால் நிரப்பப்பட்டது. அத்திவரதர் சயனிக்க வைக்கப்பட்ட பின் அந்த மண்டபத்தை நோக்கி அங்கிருந்தவர்கள் வணங்கினர்.
அடுத்த விழா 2059-ல்
கடந்த 48 நாட்களாக பக்தர்களுக்கு நேரில் அருள்பாலித்த அத்திவரதர் இதன் பின்னர் 40 ஆண்டுகள் கழித்து 2059-ம் ஆண்டு மீண்டும் குளத்தில் இருந்து எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதுவரை அனந்த சரஸ் குளத்துக்குள் சயனக்கோலத்தில் இருந்தவாறே பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அத்திவரதர் இருப்பதால், அனந்த சரஸ் குளத்துக்கு வர வாய்ப்புள்ளது. எனவே அனந்த சரஸ் குளத்தைச் சுற்றி ஒரு மாதமோ, இரு மாதமோ காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்படும். கோயிலைச் சுற்றியுள்ள கம்பி வேலியின் உயரமும் உயர்த்தப்படும். கண்காணிப்பு கேமராக்களும் அனந்த சரஸ் குளத்தை நோக்கி வைக்கப்பட்டன.
1979-ம் ஆண்டு அத்திவரதர் வைபவத்தில் பங்கேற்ற பட்டாச்சாரியர் ஜே.ரங்கராஜன் கூறியதாவது: "கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர், சரியாக 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு மீண்டும் குளத்துக்குள் வைக்கப்பட்டார். அப்போது, அத்திவரதர் அனந்த சரஸில் சயனித்த இரவு முதல் கனமழை பெய்தது. ஆனால், இம்முறை ஒருநாள் முன்னதாகவே மழை தொடங்கியுள்ளது.
அத்திவரதர் வைபவத்துக்காக அனந்த சரஸ் குளத்தில் இருந்த அத்திவரதர் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அதிகாலை வெளியே வந்தார். அதன்படி, ஒரு மண்டலமான 48 நாட்கள் கணக்கு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி இரவுடன் முடிவடைந்தது. இந்த கணக்கின் அடிப்படையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை பெய்து குளம் முழுவதும் நிரம்பும் என நம்புகிறோம்" என்றார்.
இதுகுறித்து, பட்டாச்சாரியாரின் மனைவி விஜயலட்சுமி கூறியதாவது: "1979-ம் ஆண்டு நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தில், கடைசி மூன்று நாட்களில் அனந்த சரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டத்திலேயே சயன கோலத்தில் அத்திவரதரை, பக்தர்கள் தரிசிக்க அனுமதித்தனர். இதற்காக, 50 பைசா, ரூ.1 என்று கட்டணம் வசூலிக்கப்பட்டது. கடந்த முறையும் அத்திவரதர் குளத்தில் சயனிக்கச் சென்ற நாள் சனிக்கிழமையாக இருந்தது. இம்முறையும் அதே சனிக்கிழமையில் அத்திவரதர் நீராழி மண்டபத்தில் சயனிக்கிறார்" என்றார்.
அத்தி வரதர் வைபவத்தில் பங்கேற்று, பெண்கள், குழந்தைகள் என 1 கோடியே 7 ஆயிரத்து 500 பேர் அத்தி வரதரை தரிசித்துள்ளனர். அத்திவரதர் வைபவம் நிறைவடைந்ததால் அனந்த சரஸ் குளத்தின் நீராழி மண்டபத்தில் அத்திவரதர் சயனம் கொண்ட நிலையில், தொடர்மழையால் அனந்த சரஸ் குளத்துக்கு நீர் வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது.
அத்திவரதர் குடிகொண்டதும் மழைபொழிவு ஏற்பட்டு குளம் இயற்கையாக நிரம்பும் என உள்ளூர் மக்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்நிலையில், அத்திவரதர் அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டதும் கனமழை பெய்தது. மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மாசுச: விளக்கம்
நின்ற திருக்கோலத்தில் உள்ள அத்தி வரதர் கையில் எழுதப்பட்டிருக்கும் இந்த “மாசுச” வுக்கு என்ன விரிவாக்கம்?
இங்கு உனக்குள்ளது என்று நீ நினைக்கும் எல்லாவிதமான பந்தங்களைப் பற்றிய பாசங்களை விட்டுவிட்டு என்னையே சரணடைவாய். நான் உன்னை எல்லாவிதமான பாவங்களில் இருந்தும் விடுவிக்கிறேன் என்றான் பரந்தாமன்.
பகவத் கீதை 18 - 66:
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:
40 ஆண்டுகளுக்கு பின் எழுந்தருளினார் அத்தி வரதர்
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வழிபட்டனர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் எழுந்தருளும் வைபவம் தொடங்கியது. வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய அத்தி வரதரை முதல்நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளத்தில் அத்தி வரதர் 40 ஆண்டுகளாக நீருக்குள் மூழ்கிய நிலையில் இருந்தார். கடந்த 1979-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி எழுந்தருளும் வைபவம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் எழுந்தருளினார். இவர் எழுந்தருளும் வைபவத்தையொட்டி கடந்த வெள்ளிக்கிழமையே அத்தி வரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டது. அந்த சிலைக்கு சீரமைப்பு பணிகள், தைலக்காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முதல் நாள் இரவிலேயே வந்த பக்தர்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் அத்தி வரதரை காண்பதற்காக முதல் நாள் நள்ளிரவுக்கு மேல் பக்தர்கள் பலர் வரிசையில் வந்து காத்திருந்தனர். ரூ.50 தரிசன டிக்கெட்கள் காலை 5 மணி முதல் வழங்கப்பட்டன. சரியாக காலை 6 மணி அளவில் வசந்த மண்டபத்தின் அறை திறக்கப்பட்டு, மூடியிருந்த திரைகள் விலக்கப்பட்டு மஞ்சள் நிறப்பட்டாடையில் அத்தி வரதர் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற உணர்ச்சி கோஷத்துடன் அத்தி வரதரை வழிபட்டனர்.
சயனக்கோலத்தில் அத்தி வரதர்: தற்போது அத்தி வரதர் சயனக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவர் தொடர்ந்து 24 நாட்கள் இதே கோலத்தில்தான் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்த 24 நாட்கள் நின்றகோலத்தில் காட்சி அளிக்கிறார். ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் அத்தி வரதரை அன்று இரவு குளத்துக்குள் மீண்டும் வைத்துவிடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
2,656 போலீஸ் பாதுகாப்பு: இந்த அத்தி வரதர் வைபவத்தையொட்டி காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 20 துணை கண்காணிப்பாளர்கள், 48 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2,656 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த வைபவத்துக்காக 14 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 10 சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சிறப்பு பேருந்துகள்: காஞ்சிபுரம் பகுதிக்குள் பயணிக்க 20 மினி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ரூ.10 கட்டணம் செலுத்தி பக்தர்கள் இதில் பயணித்தனர். வெளியூர் வாகனங்கள் தடை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கோயில் இருக்கும் பகுதியில் மட்டுமே வாகனங்கள் தடை செய்யப்பட்டன. மற்றபடி வாகனங்கள் நகருக்குள் பெரும்பாலும் அனுமதிக்கப்பட்டன.
தமிழக ஆளுநர் தரிசனம்: அத்தி வரதரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிகாலை 6 மணி அளவில் வந்து தரிசனம் செய்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் காலையில் வந்து தரிசனம் செய்தார். அவருக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேரில் களம் இறங்கிய அதிகாரிகள்: இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திரரெட்டி, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் நேரில் களம் இறங்கி விழா ஏற்பாட்டு பணிகள், பாதுகாப்பு பணிகளை கவனித்தனர்.
தற்காலிக பேருந்து நிலையங்கள்: இந்த அத்தி வரதர் வைபவத்துக்காக காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி, ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. அங்கிருந்தே இந்த மினி பேருந்துகள் கோயிலுக்கு இயக்கப்பட்டன. கோயிலுக்கும் செல்லும் பக்தர்கள் அங்கு இறங்கி மினி பேருந்தில் பயணம் செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள் முதியோருக்கு பேட்டரி கார்கள்: மாற்றுத்திறனாளிகள், முதியோர் வரிசையில் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் பேட்டரி கார் மூலம் அழைத்து வரப்பட்டு விஐபி தரிசனம் செல்லும் பகுதியின் அருகே தனியாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் இவர்கள் எவ்வித சிரமமும் இன்றி அத்தி வரதரை தரசித்தனர்.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது ஏன்?
பிரம்மா அத்தி வரதரை முன்னிறுத்தி யாகம் செய்யும் போது இந்த தீ, அத்தி வரதர் மீது பட்டு அவர் உஷ்ணமானதாகவும், இதனால் இவரை குளிர்விக்க அதே கோயிலில் உள்ள அனந்த சரஸ் எனும் குளத்தில் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த திருக்குளத்தில் எப்போதும் நீர் வற்றாது. கோயிலில் இருந்த அத்தி வரதர் குளத்துக்குள் சென்றதால் பழைய சீவரம் பகுதியில் அவரைப் போலவே தோற்றம் கொண்ட தேவராஜ பெருமாள் தான் தற்போது மூலவராக உள்ளார். இந்தக் கோயிலுக்கு உரியவரான அத்தி வரதரை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் கொண்டு வந்து பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கின்றனர்.
விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரம்
இந்த வைபவத்தையொட்டி காஞ்சிபுரம் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்ட நிலையில் உள்ளது. பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர் மோர், பானகம் முதலியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. வரதராஜப் பெருமாள் கோயில் அருகே உள்ள பல்வேறு மடங்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
குடிநீர் வசதி, மொபைல் ஏடிஎம்
நகராட்சி நிர்வாகம் சார்பில் கோயிலுக்கு வருபவர்களுக்கு குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டன. வரிசையில் வரும் பக்தர்களுக்கும் ஆங்காங்கே குழாய்கள் போடப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. தனியார் வணிக நிறுவனங்களும் தங்கள் கடைகளுக்கு வெளியே குடிநீர் வைத்திருந்தனர். புதிய கழிப்பிடங்களும் பல உருவாக்கப்பட்டன. வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக ஒரு வேனில் மொபைல் ஏடிஎம் வசதி செய்யப்பட்டிருந்தது. வெளியூர்களில் இருந்து அத்தி வரதரை பார்க்க வந்த பக்தர்கள் அவரை தரிசத்த பின் மூலவரை தரிசிக்க விரும்பினர். ஆனால் மூலவரை தரிசிக்க அனுமதியில்லை என்று போலீஸார் கூறினர்.
ஆன்-லைன் டிக்கெட்
அத்தி வரதரை தரிசிக்க வருபவர்கள் சகஸ்ரநாம அர்ச்சனை டிக்கெட்களை ஆன்-லைன் மூலம் ஜூலை 2-ம் தேதி பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். காலை 11 மணிக்கு 200 நபர்களும், மாலை 5 மணிக்கு 200 நபர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் இதற்கான முன்பதிவுகளை செய்து கொள்ளலாம். தரிசனம் மற்றும் அர்ச்சனை தேதிக்கு இரு நாட்களுக்கு முன்னர் மட்டுமே முன்பதிவு செய்ய இயலும். இதில் பதிவு செய்பவர்கள் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. இவர்கள் மேற்கு கோபுரத்தின் வழியாகச் செல்ல வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறையினர் அறிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago