ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தீண்டாமையைச் சாடியவர் ராமானுஜர். தீண்டாமை கூடாது என்பதைத் தமது செய்கையின் மூலம் நிகழ்த்திக் காட்டியவர் அவர். உறங்காவில்லி என்ற அரசாங்க ஊழியனின் கதை அதை நன்கு உணர்த்தக்கூடியது.
மனைவிக்குக் குடை பிடித்தவன்
ஸ்ரீரங்கம் அழகிய நகரம். அங்கு வாழ்ந்து வந்தவன் பிள்ளை உறங்காவில்லி என்ற அரசாங்க ஊழியன். உறங்காமல் வில் பிடித்து காவல் காக்க க்கூடியவன் என்பதால் உறங்காவில்லி என்ற பெயர் பெற்றவன். அவனுக்குத் திருமணம் ஆனது.
மனைவியோ பேரழகி. அவளது அழகிற்கு அடிமையான உறங்காவில்லி, தான் எங்கு சென்றாலும், தன் மனைவி பொன்னாச்சியுடனே செல்வான். வெயில் பட்டு அவளது மேனி கருத்துவிடக் கூடாது என்பதற்காக, அவளுக்குக் குடை பிடித்துச் செல்வான்.
இதைப் பார்த்து ஊர் மக்கள் எல்லாம் சிரிப்பார்கள். ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதே போல் செய்துவந்தான் உறங்காவில்லி.
உடையவர் ஒரு நாள் இதைப் பார்த்தார். உறங்காவில்லியை அழைத்து வரச் சொன்னார். தன் மனைவிக்குக் குடை பிடித்தபடியே உடையவர் அருகில் வந்தார் உறங்காவில்லி. ஏன் இப்படி நடந்துகொள்கிறாய் என்று கேட்டார் ராமானுஜர். தனது மனைவியின் கண்கள் பேரழகு கொண்டவை.
அதனால் அவளை ஒரு கணம்கூட என்னால் பிரிந்திருக்க முடியவில்லை என்று பதில் கூறினான். உடனே உடையவர் இதனை விட அழகான கண்களைக் காட்டினால் அதற்கும் அடிமை செய்வாயா என்று கேட்டார். ஒப்புக்கொண்டான் உறங்காவில்லி.
அரங்கனின் அழகிய கண்கள்
அவனை அழைத்துக்கொண்டு போய் ரங்கம் அரங்கனைக் காட்டினார். ராமானுஜர். அழகிய விரிந்த தாமரை இதழ் போன்ற அந்தப் பெரிய கண்களைக் கண்ட உறங்காவில்லி அக மகிழ்ந்தான். அரங்கனுக்கே அடிமையானான். அவனைப் போலவே அவனது மனைவி பொன்னாச்சியும் அரங்கனின் பாதம் பணிந்தாள்.
இவர்கள் அரங்கனுக்கு மட்டுமின்றி ராமானுஜரிடமும் பக்தி கொண்டார்கள். உறங்காவில்லி, அரங்கனின் உற்சவருக்கு வாள் ஏந்திச் சேவகம் செய்யத் தொடங்கினார்.
ராமானுஜரின் காயசுத்தி
ராமானுஜர் காவிரி ஆற்றில் ஸ்நானம் செய்வது வழக்கம். ஆற்றுக்கு நடந்து செல்லும்பொழுது யாரையேனும் பிடித்துக்கொண்டு செல்வது அவரது பழக்கம். ஸ்நானம் செய்வதற்கு முன் முதலியாண்டானைப் பிடித்துக் கொண்டுசெல்வாராம்.
ஸ்நானம் செய்து முடித்து கரை ஏறும்பொழுது, பிள்ளை உறங்காவில்லியின் கரம் பிடித்து கரை ஏறுவராம். பின்னர் அவரது தோளில் கை போட்டுக்கொண்டு நடந்து செல்வாராம்.
இதனை பார்த்த அவரது சீடர் குழாமில் இருந்த பிராமணர்கள், தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த உறங்காவில்லியை ஸ்நானம் செய்த பின்னர் தொடலாமா என்று கேட்டனராம்.
அதற்கு ராமானுஜர் “எத்தனைதான் ஞானம் பெற்றாலும், உயர் குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணம் ஆணவமாக அடிமனதில் அமர்ந்துவிடுகிறது. இதனால் அடியாருக்கு அடிமை என்ற எண்ணம் மனதில் வரவிடாமல் ஆணவம் தடுத்துவிடுகிறது. இந்த ஆணவமற்ற அடியவரைத் தீண்டுதல் மூலம் எனது உடலை சுத்தி செய்துகொள்கிறேன்” என்றாராம். இதனை `காய சுத்தி’ என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் குறிப்பிடுகிறார். `காயம்’ என்றால் உடல். காய சுத்தி என்றால் உடல் சுத்தம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ராமானுஜர் தீண்டாமையை தீர்த்துக் கட்டிய செயல் வீரர் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒன்றே போதுமானது.
திருடனைத் திட்டிய சீடர்கள்
உறங்காவில்லியின் பெருமையைத் தனது மற்ற சீடர்களுக்கு உணர்த்த விரும்பினார் ராமானுஜர்.
அதனால் தன் சீடர்களில் இருவரை அழைத்து, மற்ற சீடர்கள் உலர்த்தியிருந்த வேஷ்டிகளைச் சிறிது கிழித்து எடுத்து வருமாறு கூறினார். அவ்வாறே அவர்களும் செய்து விட்டனர். பின்னர் கிழிந்த வேஷ்டிகளைக் கண்டு, கத்திக் கூச்சலிட்டனர். தகாத வார்த்தைகளைக் கொண்டு திருடனை வசைபாடினர்.
பொன்னாச்சியின் பெருமை
அன்றே ராமானுஜர் பிள்ளை உறங்காவில்லி தாசரை, இரவு வெகு நேரம் வரை தன்னுடனேயே வைத்துக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தமது சீடர்களில் இருவரை உறங்காவில்லி இல்லத்திற்கு அனுப்பி, அவரது மனைவியின் நகைகளைக் கழட்டி எடுத்து வருமாறு கூறினார்.
அவர்கள் இருவரும் அங்கு சென்றபோது, உறங்காவில்லியின் மனைவி பொன்னாச்சி, ஒருக்களித்துப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். சீடர்கள் இருவரும், அவரது ஒரு பக்கத்து காது, கழுத்து, கையில் இருந்த நகைகளை மெதுவாக உருவினார்கள்.
இல்லாமை காரணமாகவே யாரோ திருடுகிறார்கள் என்று நினைத்து மறு பக்கத்தில் இருக்கும் நகைகளையும் திருடிக்கொள்ளட்டுமே என்று படுத்தபடியே மறுபக்கம் திரும்ப முயன்றார் பொன்னாச்சி.
அவர் விழித்துவிட்டார் என்று அஞ்சிய சீடர்கள் துள்ளிக் குதித்து ஓடி வந்துவிட்டனர். ராமானுஜருடன் இருந்த உறங்காவில்லியும் வீடு திரும்பினார். உறங்காவில்லி அறியாமல் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவர் வீட்டருகே ஒளிந்திருந்து என்ன நடக்கிறது என்று பார்க்குமாறு தன் சீடர்களிடம் ராமானுஜர் கூறினார்.
நடந்த கதையைப் பொன்னாச்சியிடமிருந்து அறிந்த உறங்காவில்லி வருத்தமடைந்தார். கட்டைபோல் அசங்காமல் படுத்திருந்தாயானால், அவர்கள் உன்னை புரட்டிப் போட்டு, மறுபக்கம் உள்ள நகைகளையும் எடுத்துக்கொண்டிருப்பார்களே அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் என்று குறை கூறினார் உறங்காவில்லி.
மறுநாள் காலை, உறங்காவில்லி ராமானுஜரிடம், பொன்னாச்சி புரண்டு படுத்து ஸ்ரீவைஷ்ணவர்களை பயமுறுத்திவிட்டதாகக் கூறி அவளுக்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நடந்த கதையை அவ்விரு சீடர்களும் பொன்னாச்சியின் நகைகளை எடுத்து வைத்தபடியே கூறினர். ராமானுஜரும் இது தான் நடத்திய நாடகமே என்றார். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இருக்க வேண்டிய குணநலனை உறங்காவில்லியின் நடத்தை மூலம் இப்படி நிரூபித்தார் ராமானுஜர்.
படம் உதவி: முனைவர் இரா. அரங்கராஜன்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago