ராமானுஜரின் 1000-வது பிறந்த ஆண்டு தொடக் கத்தைக் கொண்டாடும் வகையில்
ராமானுஜர் தரிசனம் என்னும் நான்கு நாள் விழாவை, சென்னை, நாரத கான சபாவில் கவுஸ்துபா மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும், பக்திசாகரம் இணைய நிறுவனமும் ஏற்பாடு செய்திருந்தன.
இயல், இசை, நாட்டிய நாடகம், நாமசங்கீர்த்தனம் ஆகிய கலை வடிவங்களின் மூலம் ராமானுஜர் வாழ்வில் நடந்த முக்கிய தருணங்களை மேடையில் பல கலைஞர்கள் வெளிப்படுத்தினர்.
பக்தியைப் பரப்பிய தரிசனங்கள்
நிகழ்ச்சி நடந்த நான்கு நாட்களிலும் திருவல்லிக்கேணி, காஞ்சிபுரம், திருப்பதி, ரங்கம் கோயில்களில் பெருமாள் காட்சி தரும் மாதிரிகளை, தத்ரூபமாக மேடையிலேயே உருவாக்கியிருந்தது, அந்தந்த நாட்களுக்கு உரிய நிகழ்ச்சிகளின் சூழலோடு பக்தர்களை உணர்வுபூர்வமாக ஒன்றவைத்தது.
முதல் நாள் நிகழ்ச்சியில் ராமானுஜரின் சிலையையே பல்லக்கில் எடுத்து வந்து மேடையில் வைத்ததோடு, திருவரங்கத்தமுதனாரின் நூற்றந்தாதியிலிருந்து சில பாசுரங்களை பாடியது, பக்தர்களை பக்திக் கடலில் ஆழ்த்தியது.
முதல் நாள் நிகழ்ச்சியில், ‘பிறந்தவாரும் வளர்ந்தவாரும்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றிய தாமல் கிருஷ்ணன், பெரும்பூதூரில் வாழ்ந்த கேசவ சோமயாஜும் காந்திமதியும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்திய பின்பே, `கலியும் கெடுமுன்’ என்று நம்மாழ்வார் சுட்டிய ராமானுஜரின் அவதாரம் நிகழ்ந்தது என்றார்.
இரண்டாம் நாள் உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன், மூன்றாம் நாள் உ.வே. கருணாகராச்சாரியார் ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினர்.
இதில் வேளுக்குடி கிருஷ்ணன் அத்வைதச் சித்தாந்தத்தில் இருந்து விசிஷ்டாத்வைத சித்தாந்தம் எவ்வாறு வேறுபட்டது என்பதைப் பாம்பு, கயிறு ஆகிய உவமைகளை வைத்து எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கினார்.
உ.வே. கருணாகராச்சாரியார் தன் சொற்பொழிவில், ராமானுஜரின் வாழ்வில் நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவத்தைக் கூறினார்.
சலவைத் தொழிலாளருக்கு அருளிய அரங்கன்
சலவைத் தொழிலாளி ஒருவர் உடையவரை அணுகினார். தன் முன்னோர் கிருஷ்ணனுக்கு ஆடை தராத குறை நீங்க, இதோ அர்ச்சையில் இருக்கிறாரே அரங்கன், அவருக்கு கைங்கரியம் செய்ய வேண்டும் என்ற தன் விருப்பதைத் தெரிவித்தார்.
ராமானுஜரும், அரங்கனின் ஆடையை வெளுத்துத் தரும் பணியை அவருக்குத் தந்தார். ஒவ்வொரு நாளும் மிக நன்றாய் துவைத்துக் கொடுத்தார் அந்தச் சலவைக்காரர். அதனை ராமானுஜரிடம் காண்பிக்கவும் தவறுவதில்லை. ராமானுஜரும், நன்றாக இருக்கிறது என்று நாள்தோறும் சொல்லிவந்தார்.
ஒரு நாள் அந்தச் சலவைக்காரர், துவைத்து வெளுத்ததெல்லாம் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் மட்டும் சொன்னால் போதுமா? இதனை உடுத்திக்கொள்ளும் அரங்கன் அல்லவா சொல்ல வேண்டும்? தாங்கள் அரங்கனிடம் பேசும் பாக்கியம் பெற்றவர்.
அரங்கன் வாயால் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அல்லவா எனக்குத் திருப்தி என்றான். ராமானுஜரும் அரங்கனிடம் அழைத்துச் சென்றார்.
அரங்கா, துவைத்து வெளுத்த உம் ஆடையெல்லாம் எப்படி இருக்கிறது என்று உம் வாக்கால் அறிய ஆசைப்படுகிறார் அந்த சலவைக்காரர் என்றார். அரங்கனும் “அருமையாக இருக்கிறது… என்ன வரம் வேண்டும் என்று கேள், தந்தோம்” என்றாராம்.
உடனே சலவைக்காரரும், கிருஷ்ணாவதாரத்தில் என் முன்னோர் ஆடை தராத குற்றத்தை மன்னித்து அருள வேண்டும் என்று வரம் கேட்டாராம்.
“மன்னித்தோம்” என்று அரங்கனும் கூறிவிட்டான்.
மோட்சம் தர வல்லார்
இருவரும் சன்னிதியை விட்டு வெளியே வந்தனர். ராமானுஜர் கேட்டாராம், “ஏனப்பா, அரங்கனோ வரமருளுகிறேன் என்கிறான், நீ மோட்சம் கேட்டு இருக்கலாமே” என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த சலவைக்காரர், “ மோட்சம் அளிக்க அவர் எதற்கு? அதற்குத்தான் நீங்கள் இருக்கிறீர்களே” என்று பதில் கூறினாராம். ராமானுஜர் அவன் தெளிவு கண்டு வியந்தார்.
ஷீலா உன்னிக்கிருஷ்ணன் தலைமையில் நடனக் குழுவினர் ராமானுஜர் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை அருமையாக நடித்துக்காட்டினர். ஸ்பூர்த்தி, ப்ரகதி ஆகியோர் அபங் பாணி பாடல்களைப் பாடினர். சட்டநாத பாகவதரின் பஜனை நிகழ்ச்சியும் நடந்தது.
ஆன்மிக உலகுக்கு ராமானுஜரின் கைங்கர்யம்
ராமானுஜர் தரிசனத்தின் இறுதி நாளில் அனந்தபத்மநாபன், ராமானுஜர் ஆன்மிக உலகுக்கு அளித்திருக்கும் மிகப் பெரிய கைங்கர்யமான பாஷ்யத்தை எழுதுவதற்கு அவருக்கு ஏற்பட்ட தடைகளையும் அவற்றை எதிர்கொண்டதையும் விளக்கினார். அக்காரகனியும் டாக்டர் வெங்கடேஷும் கேள்வி, பதில் வடிவில் ராமானுஜரின் பெருமையை விளக்கினர்.
இதில் ராமானுஜரின் அவதாரம் நிகழ்ந்த பெரும்புதூரின் சிறப்பு, ராமானுஜரின் அவதார நோக்கம், ராமானுஜர் உறவுகளை விட்டாரா என்பன போன்ற பல கேள்விகளுக்கு உரிய பதில்களை அளித்தனர்.
பரிபூரணமான பக்தியும் சரணாகதியுமே இறைவனை அடைவதற்கான எளிய உபாயம் என்பதே ராமானுஜரின் வாழ்க்கை நமக்குத் தெரிவிக்கும் செய்தியாகும்.
இந்தச் செய்தியைக் கலை வடிவங்களின் மூலமாக நான்கு நாட்களுக்கும் தெவிட்டாமல் வழங்கியது ராமானுஜர் தரிசனம் நிகழ்ச்சி.
டாக்டர் வெங்கடேஷ் - அக்காரகனி
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago