நேரத்தை நிர்வகிப்பது எப்படி?

By ஜக்கி வாசுதேவ்

அடிக்கடி டைம் மேனேஜ்மெண்ட் பற்றி என்னிடம் ஒரு கேள்வி எழுப்பப் படும்.‘நேரத்தை நிர்வகிப்பது எப்படி?’நேரத்தை நீங்கள் எதற்காக நிர்வகிக்க வேண்டும்? தன் சுழற்சி, சூரியனை வலம் வரும் பாதை என்று எல்லாவற்றையும் வைத்து நேரத்தை பூமி அல்லவா நிர்வகித்துக்கொண்டு இருக்கிறது? 24 மணி நேரம், 30 நாட்கள், 365 நாட்கள் என்பதை எல்லோருக்கும் பொதுவாக பூமியல்லவா கவனித்துக்கொள்கிறது?எந்த நேரத்தில் எதைச் செய்து முடிப்பது என்று இருக்கும் நேரத்தைப் பங்கிட்டுப் பயன்படுத்தும் எளிதான வேலைதான் உங்களுடையது. தேவையில்லாமல் அதை ஏன் சிக்கலாக்கிக் கொள்கிறீர்கள்?

கவனியுங்கள்

பெரும்பாலான வேலைகளை நீங்களாகத்தான் விரும்பி ஏற்றிருக்கிறீர்கள். யாரும் உங்கள் மீது திணிக்கவில்லை.சிலர், வாரம் ஒருமுறை பார்ட்டிக்குச் செல்வர். வேறு சிலர் தினமும் கோயிலுக்குச் செல்வர். இப்படி ஒவ்வொரு தனி நபரும் எதை அவசியம் என்று கருதுகிறார், எதற்கு முக்கியத்துவம் தர விரும்புகிறார் என்பதை வைத்துத்தான் இருக்கும் நேரத்தைப் பங்கிட முடியும்.

பெரிய நிறுவனங்களின் அதிபர் அவர். வேலைகள் முடிந்து வீடு திரும்ப தினமும் தாமதமாகிவிடும். ஓர் இரவு வீடு திரும்பியபோது, அவருடைய ஆறு வயது மகன் உறங்காமல் அவருக்காக விழித்திருப்பதைக் கண்டார்.

“என்ன மகனே?”

“அப்பா, ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப் பீர்கள்?”சிறு வயதிலேயே வியாபாரத்தில் ஆர்வம் காட்டும் மகனை அதிபர் மகிழ்ச்சியுடன் பார்த்தார். சில கணக்குகள் போட்டார். “பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பேன். ஏன் கண்ணா?”மகன் தன் பிஞ்சுக் கைகளை அவரிடம் நீட்டினான். “எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் கடனாகக் கொடுப்பீர்களா அப்பா? வளர்ந்து வேலைக்குப் போனதும் திருப்பித் தருகிறேன்”.

தந்தை அதிர்ந்தார். “உனக்கு எதற்கு ஐந்தாயிரம் ரூபாய்?”

“உங்களுடைய நேரத்தில் அரை மணி நேரத்தை வாங்கு வதற்காக அப்பா!” என்றான் மகன்.

எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும், எதை இரண்டாம் பட்சமாகக் கருத வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்கிறார்கள்.

நேரத்தை வீணாக்காதீர்கள்

எல்லோருக்கும் ஒரே விதி பொருந்தாது. எல்லோருக்கும் 24 மணி நேரம்தான். கிடைத்த நேரத்தில் உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கு உங்கள் உள்சூழ்நிலை பதற்றமில்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். ஒரு வேலையைச் செய்யும்போது, கவனமின்றி சிந்தனை அலை பாய்ந்துகொண்டிருந்தால், களைப்பு, அமைதியின்மை, மன அழுத்தம் எல்லாம் வரும். உங்கள் செயல்திறன் கணிசமாகக் குறைந்துவிடும். உங்கள் உடலும், மனமும், சக்தியும் எந்த அளவு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதைப் பொறுத்துதான், குறிப்பிட்ட நேரத்தில் உங்களால் எதையும் முழுமையாகச் செய்து முடிக்க இயலும் என்பது தீர்மானமாகும்.ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். வீட்டு வேலையானாலும் சரி, தொழில் நடத்துவதானாலும் சரி, உடற்பயிற்சி செய்வதானாலும் சரி, நேரம் கடந்து செய்யும் பல வேலைகள் அர்த்தமற்றுப் போய்விடுகின்றன. வேறு எதைத் தொலைத்தாலும் திரும்பப் பெற வாய்ப்பு உண்டு. தொலைந்துபோன விநாடிகளை எப்பேர்ப்பட்டவராலும் மீட்க இயலாது.

நேரம் தவறாமை

ஒவ்வொரு கணத்திலும், கரைந்துகொண்டு இருப்பது நேரமல்ல. உங்கள் வாழ்க்கை. இது தத்துவம் அல்ல. வேடிக்கைப் பேச்சும் அல்ல. சத்தியமான உண்மை. நேரத்தின் மதிப்பைப் பற்றித் தெளிவான கவனத்துடன் இருந்தால், வாழ்க்கையைப் பற்றியும் தெளிவாக இருப்பீர்கள். அது கண்ணாடியை விடவும் சுலபமாக நொறுங்கக்கூடியது என்பதை உணர்ந்தால், நேரத்தைக் கவனமாகக் கையாள்வீர்கள்.நேரம் மதிப்பு மிக்கது என்பதால்தான், ஈஷா யோகா வகுப்புகளில் நேரம் தவறாமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இது ஏதோ ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்காக அல்ல. நேரத்தின் மதிப்பை அறிந்திருப்பது அடிப்படையான கண்ணியம் என்று நினைக்கிறேன்.

யாரையாவது காத்திருக்க வைப்பது பெருமை என்று நினைப்பவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்.எனக்கு ஒருபோதும் இதில் சம்மதம் இல்லை. என் நேரம் எப்படி, என் வாழ்க்கையோ. அப்படி அவர்கள் நேரம் அவர்களுடைய வாழ்க்கை. மற்றவர் வாழ்க்கையை வீணடிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சில சமயம் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் இருப்பதற்காக, என் வாழ்க்கையைப் பணயம் வைத்து, வேகமாகப் பயணங்களில் ஈடுபட்டிருக்கிறேன்.

கால இயந்திரம்

என் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்துவிட்டால் மட்டும் நேரம் என்ற பிரக்ஞையே எனக்கு இல்லாது போய்விடுகிறது. இதை விளக்கிச் சொல்வது கடினம். நீங்களே ஒரு கால இயந்திரம்தான். இறந்தகாலமும், எதிர்காலமும் உங்களுக்குள் இக்கணத்தில் பொதிந்திருக்கின்றன. இந்தக் கணத்தில் பிரம்மாண்டத்தை அனுபவிக்கத் தெரியாதபோதுதான், நீங்கள் இல்லாத ஏதோ வேறு ஒரு கணத்தில் இருக்கப் பார்க்கிறீர்கள்.

ஓய்வின் அவசியம்

நேரத்தின் அருமை புரியாதவர்கள்தான், வேலைகளைத் தள்ளிப்போடுவதே சரியான தீர்வு என்று பழக்கமாக்கிக்கொள்வார்கள். அதே சமயம், இடைவெளியே இல்லாமல் உழைப்பதும் தவறு. உடலுக்கும், மனதுக்கும் அவ்வப்போது ஓய்வு கொடுத்தால்தான், முழுமையான திறமை வெளிப்படும். முறையான யோகா இதற்கு உதவும்.யோகாவுக்கு ஏது நேரம் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். யோகாவை முறையாகப் பயிற்சி செய்தால், தூக்கத்தின் தேவை குறைந்துவிடும். விழித்திருக்கும் நேரம் கூடிவிடும். உங்கள் உடலும், மனமும் இன்னும் சிறப்பான ஓர் ஓழுங்கமைப்புக்குள் வந்துவிடும்.நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், உங்கள் உடல் பல தேவையற்ற அசைவுகளைக் கவனமில்லாமல் செய்வதைத் தவிர்த்துவிடும். தேவையற்ற சிந்தனைகள், தேவையற்ற வார்த்தைகள் இவை காணாமல் போகும். ஆறு வாரங்களில் உங்கள் செயல்திறன் கூடும். எட்டு மணி நேரத்தில் செய்யக்கூடியதை மூன்று, நான்கு மணி நேரத்தில் செய்து முடித்துவிடுவீர்கள்.நீங்கள் எவ்வளவு மணிநேரம் செயல்படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதில், நீங்கள் எவ்வளவு நேரம் உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்திச் செயல்படுகிறீர்கள் என்பதுதான் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது.உங்கள் வாழ்க்கையில் எதுவும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதில், நீங்கள் 100 சதவிகிதம் உறுதியாக இருந்தால், அந்தத் தெளிவே அதற்கான நேரத்துக்கு முன்னுரிமை கொடுத்துவிடும். போராட்டம் இருக்காது. பதற்றம் இருக்காது. குழப்பம் வராது. களைப்பு தாக்காது.

நீங்கள் நிர்வகிக்க வேண்டியது நேரத்தை அல்ல... உங்களை!

சத்குருவின் வலைப்பக்கம். - www.anandaalai.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்