முருகனுக்கு ஒரு பஞ்சரத்னம்!

By வா.ரவிக்குமார்

அமெரிக்காவின் ஏபிசி நெட்வொர்க்கில் நிகழ்ச்சி இயக்குனராக, தயாரிப்பாளராக பல பொறுப்புகளை 29 ஆண்டுகளாக வகித்தவர் டி.என். பாலா. கலாச்சாரப் பரிவர்த்தனை திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் “வாய்ஸ் ஆப் அமெரிக்கா’வுக்காக, அமெரிக்காவுக்குச் சென்றவர் டி.என். பாலா.

வந்த வேலை முடிந்ததும், பலநாட்டவரும் தங்களின் சொந்த ஊருக்கு மூட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள். மூட்டைகட்டிய கூட்டத்தில் பாலாவும் இருந்தார். ஆனால் கட்டிய மூட்டையை உடனே மீண்டும் பிரிக்கவேண்டியிருக்கும் என்று அவர் எண்ணிக் கூடப் பார்க்கவில்லை.

“நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்களேன்…உங்களின் சேவை..அமெரிக்க வானொலிக்குத் தேவை..” என்று பாலாவுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஒருவருக்கு குடியுரிமை கிடைப்பதற்கு அவர் தங்கியிருக்கும் மாகாணத் தலைவர் பரிந்துரை கடிதம் வழங்கவேண்டும் என்பதில் தொடங்கி, ஏகப்பட்ட சட்ட, திட்டங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நடைமுறைகளை எல்லாம் ஒரே நாளில் நடத்தி, உச்சகட்டமாக சட்டமன்றத்தில் அந்தத் தமிழரை அமெரிக்கப் பிரஜையாக்க மசோதாவே இயற்றப்பட்டு, எத்தகைய எதிர்ப்பும் இல்லாமல் பாலாவை அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவராக அறிவித்தனர். டி.என். பாலா, அமெரிக்காவிலேயே தங்கவேண்டும் என்று விரும்பியவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடி!

பாலா, மதுரை மணி அய்யரின் சீடர். மிருதங்கம், கஞ்சிரா போன்ற வாத்தியங்களை வாசிப்பதும் பாலாவுக்குக் கைவந்த கலை. சாகித்யங்களை எழுதும் திறமையும் பெற்றவர். கர்னாடக இசைத் துறையில் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைக்காக 1994-ம் ஆண்டில் கிளீவ்லேண்ட் தியாகராஜ உத்ஸவத்தில் இவர் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்க சாகித்யகர்த்தாக்கள் மன்றம் (American Composers Forum) என்னும் அமைப்பின் சார்பாக சிறந்த சாகித்யகர்த்தாவுக்கான விருதும் 2004-ம் ஆண்டு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர். தமிழர் டி.என். பாலாதான். இந்த விருதை இவருக்குப் பெற்றுத் தந்தது, தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனையின் இசையை அடியொட்டி முருகனின் மீது இவர் பாடியிருக்கும் “முருக பஞ்சரத்னம்’ பாடல்களின் தொகுப்புதான்.

“முருக பஞ்சரத்னத்தில் வரும், “முருகானந்தஸாகரா திருமாமயூரா க்ருபாகரா…’ என்ற பாடலை மாணவிகள் வகுப்பில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, புறா ஒன்று எங்கோ அடிப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக வகுப்பிற்குள் வந்து விழுந்தது. அதற்கு மாணவிகள் சிறிது தண்ணீர் தந்ததோடு சரி. முருகனின் அனுக்ரகம் இருந்தால் அது பிழைத்துக் கொள்ளும் என்று இருந்துவிட்டனர்.

இரண்டொரு நாளில் அந்தப் புறா பழைய நிலைமைக்கு திரும்பியதோடு, ஒவ்வொரு மாணவியையும் ஆசிர்வாதம் செய்வது போல, அவர்களின் அருகே பறந்தபடியும், அமர்ந்தபடியும் சிறிது நேரம் செலவழித்துப் பின் பறந்து சென்றது. இது ஏதோ புராண காலச் சம்பவம் அல்ல. எங்கள் கல்லூரி வகுப்பில் நடந்த சம்பவம். முருக பஞ்சரத்னத்தில் ஒலிக்கும் வார்த்தைகளின் வலிமைதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்” என்று இந்த நூலைக் குறிப்பிட்டு ஒரு முறை பேசியிருக்கிறார் தமிழ்நாடு இசைக் கல்லூரியின் முதல்வராக இருந்த பக்கிரிசாமி பாரதி.

“தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தியாகராஜர் அந்நியமாகத் தெரியாமல், அவர்களையும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான முயற்சியாகத்தான் இதைச் செய்திருக்கிறேன். தமிழின் கண்கொண்டு தியாகராஜ சுவாமிகளைப் பார்க்கும் முயற்சிதான் இது. தமிழையும் முருகனையும் பிரிக்கமுடியாது அல்லவா? அதனால்தான், என் அப்பனைப் பாடியிருக்கிறேன்” என்று அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார் டி.என். பாலா.

டி.என்.பாலா இன்றைக்கு நம்மிடையே இல்லை. ஆனால் அருளைத் தருவதற்கு அவரின் முருக பஞ்சரத்னம் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்