சித்ரா பெளர்ணமி: ஏப்ரல் 21
சந்திரனை ஸ்ரீநிவாசன் தனது பாதங்களின் அடியிலும், சிவபெருமான் பிறை நிலவாகத் தன் தலையிலும் கொண்டுள்ளார். அம்பாளோ பக்தனுக்கு இறங்கித் தனது காதுத்தோட்டை எறிந்து வானில் சந்திரனை உருவாக்கியவள். சந்திர சகோதரி எனப் போற்றப்படுபவள் மகாலஷ்மி. பெண் ஜாதகத்தில் சந்திரன் சிறப்பிடம் பெற்றால் அவள் மிக அழகாக இருப்பாள் என்று அப்பெண்ணைப் பார்க்காமலேயே சொல்லிவிடலாம் என்பது நம்பிக்கை. இப்படி பல பெருமைகளைக் கொண்ட சந்திரன் ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களிலும் முழு நிலவாய்த் தோன்றும் நாள் பெளர்ணமி. சித்திரை மாதத்தில் தோன்றும் சந்திரன் அறுபத்துநான்கு கலைகளையும் முழுமையாகக் கொண்டு பிரகாசமாக ஒளி வழங்குவதால் இம்மாதப் பெளர்ணமி, ஆண்டின் அரிதான பெளர்ணமியாகக் கொள்ளப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நன்னாளில் சித்ரகுப்தனைப் பூஜித்தால் ஆண்டு முழுவதும் மட்டுமல்ல ஆயுள் முழுவதும் நன்மையே நிகழும் என்பது ஐதீகம். காஞ்சீபுரத்தில் தனிக்கோயில் கொண்டுள்ள சித்ரகுப்தனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். திருவீதி உலா வரும் உற்சவரை தரிசிக்க மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர்.
அம்பாளின் படைப்பு
பிரம்மனே படைப்புத் தொழிலுக்கு அதிபதி. மூவுலகிலும் அவர் படைத்தவையே காணக் கிடைத்தாலும் விநாயகரும், சித்ரகுப்தனும் பார்வதி தேவியால் உண்டாக்கப்பட்டவர்கள். இதில் சித்ரகுப்தன் உருவான நேரம் பார்வதி ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்ததால், ஓர் மணைப்பலகையில் அழகிய சிறுவனை வரைந்தாள். இந்த ஓவியம் உயிர்பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பார்வதியும் அவளது தோழிகளும் எண்ணினர். சிவனருளால் உயிர்த்தெழுந்தது ஓவியம். அழகிய அச்சிறுவனுக்கு சித்ரகுப்தன் என பார்வதியும், சிவனும் பெயரிட்டனர். எமனுக்கு உதவியாளனாக மனிதர்களின் பாவ புண்ணியங்களை பதிவிடும் பதவியையும் அளித்தார்.
சித்ரகுப்தனை வணங்கினால் சிந்தனையில் தூய்மை ஏற்பட்டு, பாவ புண்ணியம் பற்றிய அறிவு கிடைக்கும் இதனால் மேலும் பாவம் செய்யாமல் இருக்கலாம் என்பது ஐதீகம்.
மாதம்தோறும் முழு நிலவான பெளர்ணமியன்று சத்ய நாராயணப் பெருமாள் பூஜையாகக் கொண்டாடப்படும். சித்திரை மாதம் வரும் பெளர்ணமி, சாஸ்திரப்படி தலை சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நன்னாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை, பிற மாதங்களில் செய்யப்படும் பூஜையை விடப் பல மடங்கு நன்மை அளிக்கக்கூடியது என்பது நம்பிக்கை.
சந்திர பலன்கள்
மனித வாழ்வில் அனைத்து நலனுக்கும் சந்திரனும் முக்கியக் காரணமாகிறான் என்பது நம்பிக்கை. மண், மனை, வாகனம் உட்பட அனைத்து சுகத்தையும் அளிப்பவன். எண்ணம்போல் வாழ்க்கை என்பார்கள். அந்த எண்ணத்தை உருவாக்குபவனும் சந்திர பகவானே. மேலும் தாய்வழிச் சொத்து, வாகன யோகம், சுகமான வாழ்க்கை, நல்ல குண நலன், கலைத் துறையில் சிறந்து விளங்குவது, மன நிம்மதி, மன உறுதி, தன்னம்பிக்கை ஆகியவை சந்திரனால் கிடைக்கும் நன்மைகள். இதனால்தான் சந்திரனின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, பிற மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கு சந்திரமானசம் என்று பெயர். தமிழகத்தில், சந்திரனுக்கு ஒளி அளிக்கும் சூரியனின் காலத்தைக் கொண்டு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கு செளரமானசம் என்பார்கள்.
சத்ய நாராயண பூஜை
ஸ்ரீமந்நாராயணனே சத்ய நாராயணன். வாழ்வும் வளமும் மங்காத செல்வமும் பெற சத்ய நாராயண பூஜை செய்யலாம். எளிதான இந்த பூஜையை இல்லத்திலேயே செய்துவிடலாம். பூஜையை விடியற்காலை செய்வதே நல்லது. ஆனால் சத்ய நாராயண பூஜையை மாலையில் பெளர்ணமி நிலவு எழுந்தபின்னர் தான் செய்வார்கள். சத்ய நாராயணன் படத்தை வைத்து, நெய் விளக்கேற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். பால் பாயசம், கோதுமை அப்பம், ரவா கேசரி ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.
பூஜை தொடங்குவதற்கு முன்பே கலந்துகொள்பவர்கள் வந்துவிட வேண்டும். பின்னர் இறுதிவரை அங்கேயே இருந்து பிரசாதத்தைப் பெற்று அங்கேயே சிறிது உண்டுவிட்டுப் பின்னர் இல்லத்துக்கும் எடுத்து வரலாம்.
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், குடும்பத்தில் கஷ்டங்கள் குறையும், செல்வ வளம் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்கிறது கந்த புராண சுலோகம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago