தெய்வத்தின் குரல்: பக்தி செய்ய காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு காரணத்திற்கும் ஒரு விளைவு இருக்கிறது. பௌதிக விஞ்ஞானம் முழுவதும் இந்தக் காரணம் - விளைவு (cause & effect) பற்றிய விதிகளைக் குறித்ததேயாகும். மாற்ற முடியாத இந்த விதிகளாலேயே உலகம் ஒழுங்குடன் இயங்குகிறது.

ஏதோ ஒரு பேரறிவு இருப்பதால்தான் இப்படிப்பட்ட விதிகள் உண்டாகி, அவை எல்லாம் ஒழுங்காக இணைந்து, உலக வாழ்வு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

பௌதிக உலகில் காரணம் - விளைவு என்கிற தவிர்க்க முடியாத சங்கிலி இருந்ததால் மனித வாழ்க்கையிலும் அது இருந்துதானே ஆக வேண்டும்? நாம் செய்கிற சகல காரியங்களுக்கும் விளைவு இருந்துதான் ஆக வேண்டும்.

நல்ல காரியங்கள் செய்தால் அதற்குச் சமமான நல்ல விளைவுகளைப் பெறுவோம். கெட்டதைச் செய்தால் அதற்கு சமமான கெட்ட பலன்களைப் பெறுவோம்.

இப்படிப் பலன்களைத் தருகிற ‘பலதாதா' தான் பிரபஞ்சத்தை நடத்தி வைக்கிற மகா சக்தி, ஈஸ்வரன், பகவான், ஸ்வாமி, கடவுள், பரமாத்மா எனப்பட்டவன்.

மனசு இருக்கிற வரையில் அது சஞ்சலித்துக்கொண்டேதான் இருக்கும். நல்லதோடு கெட்டதையும் நினைக்கத்தான் செய்யும். புண்ணியத்தோடு பாபத்தையும் செய்துகொண்டேயிருக்கும். இந்தப் பாபத்துக்கு விளைவாகக் கஷ்டங்ளைப் போக்கடிப்பதற்காகவே பொதுவில் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இதைத்தான் பக்தி என்று நினைக்கிறார்கள். ஈசுவரன் மனசு வைத்தால் நம் பாபத்துக்குப் பிரதியான கஷ்டத்தைத் தராமலும் இருக்கலாம். ஆனால் அவன் கஷ்டத்தைப் போக்கத்தான் வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ய நமக்கு யோக்கியதை இல்லை.

ஏனென்றால் நம் கர்மாவுக்குப் பலனாக இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருப்பவனே அவன்தான். ஆகையினால் கஷ்டம் வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் இருக்கிற மனோபாவத்தைப் பிரார்த்திப்பதே இதைவிட உத்தமமாகும். ஆனால் இந்தப் பிரார்த்தனைகூட நிஜமான பக்தி அல்ல.

நம் கஷ்டத்தை ஈசுவரனிடம் சொல்கிறபோதே அவனுக்கு அது தெரியாது என்று நாம் நினைப்பதாக ஆகிறது. அதாவது ஈஸ்வரனுடைய எல்லாம் அறிந்த சர்வஞானத்துக்குக் குறை உண்டாக்குகிறோம்.

'இந்தக் கஷ்டத்தைப் போக்கு; அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்துகிற மனப்பான்மையை மாற்று' என்கிறபோது நாம் கேட்டுத்தான் அவன் ஒன்றைச் செய்கிறான் என்று ஆகிறது. அதாவது தானாகப் பெருகும் அவனது காருண்யத்துக்குக் குறை உண்டாக்கிவிடுகிறோம்.

இப்படி ஞான சமுத்திரமாக, கிருபா சமுத்திரமாக இருக்கிற ஈஸ்வரனுடைய ஞானம், கிருபை இரண்டுக்கும் தோஷம் கற்பிக்கிற பிரார்த்தனை உண்மையான பக்தி இல்லை.

‘நீ எப்படி விட்டாயோ அப்படி ஆகட்டும்' என்று சரணாகதி செய்வதுதான் பக்தி. தனக்கு என்று எதுவுமே இல்லாவிட்டால் மனசின் அழுக்குகள் நீங்கி, அது கண்ணாடி மாதிரி சுத்தமாக இருக்கும். அப்போது நிறைந்த ஆனந்தமாக இருக்கலாம். ‘எனக்கு என்று ஒன்றுமில்லை' என்று யாரிடம் சரணாகதி செய்துவிட்டாலும் ஒரு பதியிடம் பத்தினி சரணாகதி செய்தாலும் (அவன் தூர்த்தனான பதியாகக்கூட இருக்கலாம்), ஒரு குருவிடம் சிஷ்யன் சரணாகதி செய்தாலும் (அந்த குரு போலியாக இருந்தாலும்கூடச் சரி) அப்புறம் நிச்சிந்தைதான்.

நாம் சரணாகதி பண்ண லாயக்குள்ளவன் என்று தோன்றுகிற குரு கிடைத்து, அவனிடம் சரணாகதி செய்துவிட்டால் அப்புறம் ஸ்வாமிகூட வேண்டாம்தான். ஆனால் வாஸ்தவத்தில், நிஜமாகவே திரிபுவனங்களுக்கும் யஜமானனாக, எல்லாம் தன் சொத்தாகக் கொண்டுள்ள ஸ்வாமியிடம்தான், நம்மால் கொஞ்சத்தில் கொஞ்சமாவது, ‘எல்லாம் உன் உடைமையே, எனக்கென்று ஒன்றுமில்லை' என்று சரணாகதி செய்து, அதனால் நிம்மதி பெற முடிகிறது.

பக்தி செய்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அன்பு செலுத்தாமல் வாழ்ந்தால் ஆனந்தமே இல்லை, அன்பிலே உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை என்று அனுபவத்தில் தெரிகிறது.

நம்மை விட்டுப் பிரியாத ஒரே சாசுவதமான வஸ்து ஈஸ்வரன்தான். அவனிடம் அன்பு வைத்துவிட்டால், இந்த அன்பு என்றும் சாசுவதமாக ஆனந்தம் தந்துகொண்டே இருக்கும். இந்த அன்பு முற்றுகிறபோது யாவுமே அவனாகத் தெரியும்.

எல்லாம் அவனானதால் எல்லாவற்றிடமும் ஏற்றத் தாழ்வில்லாமல் அன்பாக இருப்போம். அன்பற்ற வாழ்வு வாழ்ந்து மனுஷ்ய ஜன்மாவை விருதாவாக்கிக்கொள்ளாமல் இருக்க பக்தியே உதவுகிறது.

பக்தியால் படிப்படியாக லௌகிக கஷ்டங்களைப் போக்கடித்துக் கொள்ளலாம். அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்தாத நிலைக்கு மனோபாவத்தை உயர்த்திக் கொள்ளலாம்.

மனத்தின் அழுக்கைப் போக்கிக் கொள்ளலாம். அலைகிற மனசை ஒருமுகப்படுத்தலாம். ஈஸ்வரனின் கல்யாண குணங்களை நாமும் பெறலாம். என்றும் அழிவில்லாத சாசுவதமான அன்பைப் பெற்று ஆனந்திக்கலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாகக் கர்ம பலனைத் தருகிறவனைத் தஞ்சம் புகுந்தால்தான் அவன் கர்ம கதிக்குக் கட்டுப்பட்ட சம்சாரத்திலிருந்து நம்மை விடுவித்து முடிவில் முக்தி தருவான்.

அதாவது அவனேதான் நாமாகியிருப்பது, எல்லாமுமாகி இருப்பது என்று அனுபவத்தில் அறிந்துகொண்டு, அப்படியே இருக்கச் செய்வான். இந்த அத்வைத ஞானத்தையும் முக்தியையும் அவன் கிருபையாலேயே பெறலாம். பக்தி செலுத்துவதற்கு இத்தனை காரணம் இருக்கிறது.

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்