முன்னெல்லாம் வீட்டுக்கு வீடு நிறைய ஓலைச்சுவடிகள் இருக்கும். இதிகாச புராணங்களும் ஸ்தல புராணங்களும் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் அவற்றில் இருக்கும். சுவடி பழுதாக ஆரம்பித்தால் மறுபடி புது ஓலைகளில் அவற்றை எழுத்தாணியால் ‘காப்பி' பண்ணுவார்கள். பழுதான சுவடிகளை ஒரு பக்கம் சேர்த்து வைப்பார்கள். இப்படிச் சேர்ந்ததை எல்லாம் ‘பதினெட்டாம் பேர்' அன்றைக்குக் காவேரியிலோ வேறு புண்ய தீர்த்தங்களிலோ கொண்டு போய்ப் போட்டுவிடுவார்கள்.
கை ஒடிய இப்படி எழுத்தாணியால் ஓலை நறுக்குகளில் எழுதி எழுதி, எழுதினதைக் காப்பி பண்ணி நம் முன்னோர் நம் தாத்தா காலம் வரைக்கும் கொண்டுவந்து கொடுத்ததைப் பிற்பாடு காப்பி எடுக்காமலே காவேரியில் போட்டுவிட்டு அதற்கும் சேர்ந்து “ஸ்நானம்” பண்ணிவிட்டார்கள்.
இதனால் இப்போதே அநேக புராணங்கள் மறுபடி நமக்குக் கிடைக்குமா என்ற ரீதியில் நஷ்டமாகிவிட்டன. புராணங்கள் மட்டுமில்லை. இதர சாஸ்திரச் சுவடிகளும்தான். சேகரிக்க முடிந்த சுவடிகளையெல்லாம் எத்தனையோ சிரமப்பட்டு அலைந்து திரிந்து சேகரித்து சில லைப்ரரிகளில் சேர்த்து வைத்திருக்கிறது.
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் லைப்ரரி, மெட்ராஸில் ஓரியன்டல் மானுஸ்க்ரிப்ட்ஸ் லைப்ரரி, அடையாறு லைப்ரரி, இவற்றில் இப்படி நிறையச் சுவடிகளைச் சேர்த்து வைத்திருக்கிறது. அடையாற்றிலே தியாஸாஃபிகல் ஸொஸைடிகாரர்கள் இதிலே செய்திருக்கிற பணி ரொம்பவும் உயர்ந்தது. தஞ்சாவூர் சரஸ்வதி மகாலிலும் இப்படியே சரபோஜி முதலான ராஜாக்கள் அரும்பாடுபட்டு ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்து வைத்தார்கள்.
ஏடு என்றால் நடுவிலே நரம்பும் அதற்கு இரண்டு பக்கம் இலையுமாக இருக்கிறதில் ஒரு பக்கம் என்று அர்த்தம். வாழையிலையை இப்படிக் குறுக்காகப் பிளந்து ஒவ்வொரு பாதியையும் ஏடு என்கிறோம். பனை மட்டையில் இருக்கிறதை இப்படியே நடு நரம்பை எடுத்து விட்டு ஒவ்வொரு பக்கத்தையும் எடுத்து ஏடு என்பதுதான் ஏட்டுச் சுவடி.
அதுதான் நீண்ட நாளானாலும் பழுத்துப் போகாத, பழுதாகாத nature -ன் paper - இயற்கையின் காகிதம்.. அதில் எழுத்தாணியை வைத்துக் கொண்டு செதுக்கி எழுத வேண்டும். ஞானசம்பந்தரின் தேவார ஏடு வைகையை எதிர்த்துக்கொண்டு கரையேறிய இடம் இன்றைக்கும் பாண்டிய நாட்டில் திருவேடகம் - திரு ஏடு அகம் என்ற ஸ்தலமாக விளங்குகிறது.
அங்கே ஈச்வரனுக்குப் ‘பத்ரிகா பரமேச்வரர்' என்று பெயர். இப்போது ‘பேப்பர்' என்றால் காகிதம் என்பது ஒரு அர்த்தம்; “மாகஸின்” (ஸஞ்சிகை) என்றும் அர்த்தம். “மாகஸின்” என்பதை “பத்திரிகை” என்கிறோம். நேச்சரின் பேப்பரான இயற்கை பத்திரிகை கரையேறின ஊரில் ஸ்வாமியே ‘பத்திரிகா பரமேச்வரன்' என்று ஜர்னலிஸ்ட் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்.
‘பத்ரம்', ‘பத்ரிக' என்றாலும் இலை என்றே அர்த்தம். இலையிலிருந்து வந்தது தானே ஏடு? அதனால் ஏட்டுக்குப் பத்திரிகை என்று பெயர். இது தான் அந்த நாள் காகிதமாக இருந்ததால் கடிதாசும் இதிலேதான் எழுதுவார்கள். அதனால் கடிதாசுக்குப் ‘பத்ரம்' என்றே பேர் வந்து விட்டது. இதெல்லாம் இருக்கட்டும். ஸரஸ்வதி மஹாலைப் பற்றிச் சொன்னேன். இதைப் பற்றி ஸ்வாரஸ்யமான ஒரு விஷயம் நினைவு வருகிறது.
பழைய காலத்தில் வெளிதேசத்திலிருந்து படையெடுக்கிறவர்கள் ஒரு தேசத்திற்கு விளைவிக்கிற மிகப் பெரிய ஹானி, அந்த தேசத்தின் லைப்ரரியைக் கொளுத்திவிடுவதுதான் என்று வைத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் ஒரு தேசத்தின் பொருளாதாரத்துக்கு கஜானா எப்படியோ அப்படி அதன் அறிவுக்குக் கஜானாவாக இருந்தது இந்த லைப்ரரிதான். கலாசார கஜானா என்று சொல்லலாம்.
இப்போது போல் அப்போது பிரிண்டிங் பிரஸ் இல்லாததால் பல பிரதிகள் கிடையாது. சில நூல்களில் ஒரே பிரதிதான் இருக்கும். இப்படிப்பட்ட சுவடிகள் கொண்ட லைப்ரரியைக் கொளுத்திவிட்டால் அது அந்த தேசத்தின் கஜானாவைக் கொள்ளையடிப்பதற்கு மேலே, அந்த தேசத்தின் பெண்களை மானபங்கபடுத்துவதற்கு மேலே என்று இதர தேசத்தார் நினைத்தார்கள்.
எதிரி தேசத்து அறிவுச் செல்வங்களான புஸ்தகங்களைக் கொளுத்துவது, அவர்களுடைய கோயில்களை இடிப்பது, அந்த தேசத்து ஸ்திரீகளை மானபங்கப்படுத்துவது முதலானவற்றுக்கு நம்முடைய ராஜநீதி சாஸ்திரங்களில் இடமே கிடையாது என்பதைப் பெருமையோடு சொல்லிக்கொள்ள வேண்டும். ஜைனம் போன்ற ஒரு எதிராளி மதத்தைச் சேர்ந்த அமரசிம்ஹன் மாதிரியானவர்கள் ஹிந்து சமயாசாரியர்களிடம் வாதத்தில் தோற்றவுடன் தாங்களாகவே தங்கள் சுவடிகளை நெருப்பிலே போட்டாலும் நம் ஆசாரியாளைப் போன்றவர்கள், “கூடாது, கூடாது! எந்த தத்வத்தைச் சேர்ந்ததானாலும் சரி; ஒரு புஸ்தகத்தை இல்லாமல் பண்ணக் கூடாது” என்று எதிராளியின் கையைப் பிடித்துத் தடுத்திருக்கிறார்கள்.
இதர தேசத்தவர்களுக்கோ பண்பாட்டில் சிறந்த இன்னொரு ராஜ்யத்தைப் பிடிக்கிறபோது அங்கேயுள்ள லைப்ரரியை கொளுத்துவது பெரிய சொக்கப்பானை போன்ற உத்சாக விளையாட்டு. ‘அறிவுச் செல்வம் எல்லாருக்கும் பொது; எதிரியுடைய ஊரைச் சேர்ந்ததானாலும் அதை நாமும் எடுத்துக் கொண்டு பயனடையலாம்' என்ற விவேகமில்லாமல், தங்களைவிட அறிவாளிகளாக உள்ள சத்ருக்களின் புஸ்தகங்களை பஸ்மம் பண்ணி அவர்களை வயிறெரியச் செய்ய வேண்டும் என்று நினைத்து இப்படிப்பட்ட பெரிய அக்கிரமத்தைச் செய்தார்கள்.
சாஸ்திரங்கள், மற்ற வித்யைகள், நம்முடைய மருத்துவம், விஞ்ஞானம் எல்லாவாற்றுக்கும் பழைய சுவடிகள் இருக்கின்றன. புராணங்களும் இவற்றில் இருக்கின்றன. இவைகளில் ஸ்தல புராணங்கள் மற்றவற்றை விடவும் ரொம்ப நஷ்டப்பட்டிருக்கின்றன. எஞ்சியதை நாம் காப்பாற்ற வேண்டும். தேடித் தேடிப் புதுசாகக் கிடைப்பதைச் சேகரம் செய்ய வேண்டும்.
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago