தெய்வத்தின் குரல்: சீலம் உண்டாக வழி

By செய்திப்பிரிவு

நல்ல சீலம், குணங்கள் வரவேண்டுமென்றால் நம் வேத சாஸ்திரங்களில் சொல்லியுள்ள காரியங்களைச் செய்ய வேண்டும். நல்ல ஆசாரங்கள் இருக்க வேண்டும். நல்ல அநுஷ்டானம் இருக்க வேண்டும். மனசு நன்றாக இருந்தால்தான் சீலம் வரும். எல்லோருக்கும் நல்ல மனசாக இருக்க முடியவில்லை. கெட்டது என்பதே மனசில் புகாதபடி நல்லதே உள்ளம் முழுவதும் நிரம்பியிருந்தால்தான் சீலம் வந்ததாக அர்த்தம்.

எல்லோருக்கும் மனசு மிகவும் நன்றாக இருக்க முடியாது. இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் முடியவில்லை. வீட்டிலே இருக்கிற குழந்தை சதா ஏதோ விஷமம் பண்ணிக் கொண்டிருக்கிறது. கத்தரிக்கோலை எடுத்து நல்ல துணிகளை, முக்கியமான காகிதங்களை நறுக்கிவிடுகிறது. செடிகளை வெட்டிவிடுகிறது. இப்படித் துஷ்டத்தனம் பண்ணுகிறது. அதையே பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டால், ‘இத்தனை மணிக்குள் போக வேண்டும். இன்ன இன்ன பாடங்களை அதற்குள் எழுதிவிட வேண்டும், திரும்ப இத்தனை மணிக்குத்தான் வர முடியும், வந்தால் இதைச் செய்ய வேண்டும்' என்று அதற்கு ஒரு கட்டுப்பாடு வந்துவிடுகிறது.

முன்பு காணப்பட்ட விஷம குணங்கள் எங்கோ போய் விடுகின்றன. பள்ளிக்கூடம் இல்லை, லீவுநாள் என்றால் மறுபடியும் விஷம குணங்கள் தலைகாட்டுகின்றன. அதேபோல் நாம் கெட்ட எண்ணத்திலும் காரியத்திலும் ஈடுபட அவகாசம் இன்றி, நல்ல காரியங்களை ஒரு விதிப்பிரகாரம், ஒழுங்கு தப்பாமல் செய்வதுதான் முக்கியம். இதற்குத்தான் சாஸ்திரங்கள் நமக்கு விதிகள் போட்டிருக்கின்றன.

நல்ல சீலங்கள் உண்டாக வேண்டுமானால் துர்க்குணங்கள் நிவிருத்தியாக வேண்டும். துர்க்குணங்கள் நிவிருத்தியாக நல்ல கர்மாநுஷ்டானங்களைச் செய், பூஜை பண்ணு, (சகல ஜீவராசிகளுக்கும் ஆகாரம் கொடுப்பதான) சைச்வதேவம் பண்ணு, அதிதிகள் வந்தால் ஸத்காரம் (விருந்தோம்பல்) பண்ணு என்று பல விஷயங்களைச் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். இதன்படி செய்துவந்தால் கெட்ட காரியங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும்.

கர்மாநுஷ்டானங்களைப் பண்ணுகிறபோதும் ‘நாம் பண்ணுகிறோம்' என்ற அகம்பாவத்தோடு பண்ணக் கூடாது. பண்ணக்கூடிய சக்தியை நமக்கு ஈஸ்வரன் கொடுத்தான், பண்ண வேண்டும் என்ற புத்தியைக் கொடுத்தான். அதற்கு வசதியும் கொடுத்தான் என்று நினைத்து, ஈசுவரார்ப்பணமாகப் பண்ணு என்று நமது வைதிக மதாசாரியர்கள் விதித்து வழிகாட்டினார்கள். துளி அகம்பாவம் வந்துவிட்டால் போச்சு! அது எத்தனையோ வேஷங்களைப் போட்டுக்கொண்டு, நாம் கொஞ்சம் அசந்து மறந்து இருந்தாலும் வந்து பிடித்துக்கொண்டுவிடும்.

கண்ணாடியில் பார்க்கிறோம். அழுக்காக இருந்தால் பார்க்க முடிகிறதா? சுத்தமாகத் துடைத்துவிட்டுப் பார்த்தால் நன்றாகத் தெரியும். சுத்தமாகத் துடைத்த கண்ணாடிதான் என்றாலும்கூட, அது ஆடிக் கொண்டிருந்தால் பிம்பம் விளங்காது. கண்ணாடி சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆடாமல் நிலையாகவும் இருக்க வேண்டும். சுத்தமான ஆடாத கண்ணாடியாக இருந்தால்தான் உண்மை பிரகாசிக்கும்; சித்தம் என்பது கண்ணாடி போன்றது. பரம்பொருள் ஒன்றே உண்மை. கெட்ட எண்ணம் தோன்றாவிட்டால் சித்தக் கண்ணாடி சுத்தமாகும். ஒன்றிலேயே அதை ஈடுபடுத்தினால் அது ஆடாமல் நிலைத்த கண்ணாடியாகும். அப்போதுதான் பரமாத்மா அதில் பிரதிபலிப்பார்.

இந்த உலகத்தை எல்லாம் படைக்கிறவன் யார்? நமக்கெல்லாம் இவ்வளவு அன்ன, வஸ்திர, சௌக்கியங்களைக் கொடுக்கிறவன் யார்? அருட்கடலாக இருப்பவன் யார்? அவனைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் விரும்பினால் நம்முடைய சித்தத்தை அழுக்கு இல்லாமல் ஆடாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.

தாமிரச் செம்பு கிணற்றில் பத்து வருஷங்கள் கிடந்துவிட்டது என்றால் அதை எத்தனை தேய்த்தாக வேண்டும்? எவ்வளவுக்கு எவ்வளவு தேய்க்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு அது வெளுக்கிறது. சுத்தமாகிறது. இவ்வளவு வருஷ காலம் எத்தனை கெட்ட காரியங்களைச் செய்து நம்முடைய சித்தத்தில் அழுக்கை ஏற்றிக்கொண்டு விட்டோமோ, அந்த அழுக்கைப் போக்க அத்தனை நல்ல காரியங்களைச் செய்து தேய்க்க வேண்டும். நல்ல கர்மாநுஷ்டானங்களைச் செய்ய வேண்டும். அதனால் சித்த சுத்தி வரும். நல்ல சீலங்கள் உண்டாகும்.

சரி, இன்றைக்குச் செம்பைத் தேய்த்து வெள்ளை வெளேர் என்று ஆக்கிவிட்டோம் என்றால் சரியாகிவிட்டதா? நாளைக்கு அதற்கு மறுநாள் என்று மறுபடியும் அதைத் தேய்க்காமலிருந்தால் என்ன ஆகும்? மறுபடியும் அழுக்காகிறது. இதேபோல் நம் சித்தத்தையும் விடாமல் அநுஷ்டானத்தால் சுத்தம் செய்து கொண்டேயிருக்க வேண்டும். அப்புறம் ஒரு நிலை வந்துவிட்ட பின்தான் இந்தச் சித்தம் என்பதே ஓடிப்போய்விடும். ஆத்மா மட்டும் நிற்கும். சித்தமே இல்லாத அப்போதுதான் அதை சுத்தம் செய்கிற காரியமும் இல்லாமல் ஆகும். அதுவரை இந்தச் சுத்தப்படுத்துகிற காரியத்தைச் செய்து சீலங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியதே.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்