ஸ்நானத்தில் ஐந்து தினுசு சொல்லியிருக்கிறது. இவற்றில் 'ஸ்நானம்' என்றவுடன் நாம் நினைக்கிறபடி ஜலத்தை மட்டும் கொண்டு குளிப்பது 'வாருணம்'- வருண பகவான் சம்பந்தமுள்ளது.
இதை 'அவகாஹ'மாக, அதாவது நாம் ஜலத்திக்குள் இறங்கி, முழுகிப் பண்ணினால் தான் 'முக்ய' ஸ்நானம் பண்ணினதாக ஆகும். பாத்திரத்தில் வைத்துக்கொண்டு மொண்டு தலையில் விட்டுக் கொள்வது கூட இரண்டாம் பக்ஷம்தான்.
அதற்கப்புறந்தான் 'கௌண' மாக கழுத்துவரை, இடுப்புவரை என்பதெல்லாம். ஆக ஐந்து ஸ்நானங்களில் ஜலத்தால் செய்கிற வாருணம் ஒன்று.
விபூதி ஸ்நானம் என்று இப்போது சொன்னதற்கு 'ஆக்நேயம்' என்று பேர். அக்னி சம்பந்தமுடையது என்று அர்த்தம். அக்னியில் பஸ்மமாக்கித்தான் விபூதி கிடைப்பதால் அதற்கு பஸ்மா என்றே பெயரிருக்கிறது. ஜலம் விட்டுக் குழைக்காமல் விபூதியை வாரிப் பூசிக் கொள்வதை 'பஸ்மோத்தூளனம்' என்றே சொல்கிறோம்.
பசுக்கள் செல்கிறபோது கிளம்புகிற அவற்றின் குளம்படி மண்ணை ரொம்பவும் புனிதமாகச் சொல்லியிருக்கிறது. அதற்கு 'கோ தூளி' என்று பெயர். பாலகிருஷ்ணனே இப்படித்தான் நீல மேக சியாமள காத்திரத்தில் பசுக்களின் தூள் சந்தனப் பொடி தூவினாற் போலப் படிந்து “கோதூளீ தூஸரித” னாக இருந்தானாம்.
ஒரு பசு மந்தை போகிறபோது, அவை கூட்டமாகப் போவதாலேயே காற்றின் சலனம் அங்கே ஜாஸ்தியாகி, குளம்படி மண் நிறையக் கிளம்பும். இந்த கோதூளி நம்மை அபிஷேகம் பண்ணும்படியாக அங்கே போய் நின்று கொண்டால் அதுவும் ஐந்தில் ஒருவகை ஸ்நானமாகும். இதற்கு 'வாயவ்யம்' என்று பெயர் - வாயு என்கிற காற்றின் சம்பந்தமுடையது என்று அர்த்தம். காற்றால்தானே தூளி பறக்கிறது?
அபூர்வமாக வெய்யில் அடிக்கும்போதே மழையும் பெய்வதுண்டல்லவா?அந்த மழை ஜலம் தேவலோகத்திலிருந்து வருகிற தீர்த்தத்துக்கே சமானம். அதனால் அந்த ஜலத்தில் குளிப்பதற்கு 'திவ்யஸ்நானம்' என்று பெயர். எப்போதாவது இப்படி வெய்யிலோடு மழை பெய்துவிட்டால் உடனே நாம் அதில் போய் நின்றுவிட வேண்டும்.
மந்திர ஜலத்தைப் புரோக்ஷித்துக் கொள்கிறோம். தலையோடு கால் விட்டுக் கொள்ளாமல் அதை விரலால்தான் தெளித்துக் கொள்கிறோம். “ஆபோ ஹிஷ்டா” என்று சந்த்யா வந்தனத்தின்போது, அதாவது முக்கிய ஸ்நானமாக நன்றாகக் குளித்துவிட்டே செய்கிற சந்த்யாவந்தனத்தின்போது, இப்படி மந்திரஜல ப்ரரோக்ஷணமும் செய்து கொள்கிறோம்.
பூஜை, ஹோமம், யாகம் முதலானவற்றிலும் கலசம் வைத்து அதிலுள்ள ஜலத்தை அபிமந்திரித்துக் கடைசியில் வாத்தியார் (புரோஹிதர்) தர்ப்பைக் கட்டால் அதை எல்லாருக்கும் தெளிக்கிறார். இதுவும் ஐந்து ஸ்நானங்களில் ஒன்று. இதற்கு 'ப்ராஹ்மம்' என்று பெயர்.
“ப்ரம்மம்” என்றால் வேதம், வேத மந்திரம் என்பது ஒரு அர்த்தம். அதனால் அபிமந்திரிக்கப்பட்ட தீர்த்தப் புரோக்ஷணத்துக்கு “ப்ராஹ்ம ஸ்நானம்” என்று பெயர் கொடுத்திருக்கிறது. மந்திரம் சொல்லக் கூடாதவர்களுக்கு பகவந்நாமா இருக்கிறது என்று முன்னேயே சொன்னேன். நாமமெல்லாமே மந்திரந்தான்.பார்க்கப்போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம்தான்.
எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல் அதோடு மந்திரத்தையும் சேர்த்து ஈஸ்வர ஸ்மரணையோடு, ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகத்தானே அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன? அவற்றிலே சிறப்பாக வருணனையோ, வேறு ஒரு தேவதையையோ மந்திரபூர்வமாக ஒரு கும்பத்தில் ஆவாஹனம் பண்ணிப் பிறகு அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்வது 'ப்ராஹ்மம்' என்று பெயர் பெற்றிருக்கிறது.
உடம்பு அசக்தமாய் எந்த விதத்திலும் வாருண ஸ்நானம் செய்ய முடியாதவர்களுக்கு இந்த மந்திர தீர்த்த ப்ரோக்ஷணமே அதனிடத்தில் 'கௌண' ஸ்நானமாகிறது.
பஞ்சபூதங்கள் என்னும் ஐம்பூதங்கள் - ஐந்து ஸ்நானங்கள் என்று பார்க்கிறபோது, வாருணம்தான் அப்பு. ஆக்நேயம் (விபூதி) என்பது தேயு. கோதூளி என்கிற வாயவ்யம் வாயு. இவை தவிர ப்ராஹமம், திவ்யம் என்று இரண்டு சொன்னேன். பஞ்ச பூதங்களில் பிருத்வியும் ஆகாசமும் விட்டுப் போயிருக்கின்றன.
மந்தரங்களெல்லாம் ஆகாசத்தில்தான் சப்த தன்மாத்ரையாக வியாபித்திருக்கின்றன. அவற்றையே ரிஷிகள், யோக சக்தியால் நமக்குப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தங்களை பஞ்சபூதங்களில் ஒவ்வொன்று ஆச்சிரயித்திருப்பதாகச் சொல்லும்போது சப்தத்துக்குத்தான் ஆகாசம். இங்கே சப்தம் என்பது வேத மந்திரமே. ஆனதால் மந்திர தீர்த்தப் புரோக்ஷணமான 'ப்ராஹ்ம ஸ்நானம்'ஆகாச சம்பந்தமானது எனலாம்.
வெய்யிலின்போது பெய்யும் மழையான 'திவ்ய'மும் வானுலகிலிருந்து - தேவலோகத்திலிருந்து - வருவதாகக் கருதப்படுவதால் ஒருவகையில் ஆகாச பூதத்தின் சம்பந்தமுடையதே. பிருத்வி பாக்கி இருக்கிறது. 'வாயவ்யம்` என்று சொன்னதில் கோதூளியில் தானே நிற்கிறோம்? காற்றினால் எழுப்பப்பட்டு அந்தத் தூளி நம்மேல் படிவதால் அதற்கு 'வாயவ்யம்' என்று பேர் இருந்தாலும். வாஸ்தவத்தில் நம்மை அபிஷேகிக்கிற வஸ்துவான குளம்படி மண் என்பது பிருத்விதான்.
ஜெனரல் ரூலான வாருண ஸ்நானத்திலும் சுத்திக்காகத் தேய்த்துக் கொள்ளும் மிருத்திகை (புற்றுமண்) பிருத்விதான். இப்படியாக ஐம்பூதங்களுக்காக ஐந்து ஸ்நான வகைகள். முடிவில் எதுவானாலும் ஆத்மாவைப் பாபம் போகக் குளிப்பாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago