விவிலிய வழிகாட்டி: எது சிறந்த உறவு? எது தேர்ந்த பதவி?

By அனிதா அசிசி

தாய்வழிச் சமூகம் மறைந்து ஆணாதிக்கச் சமூகம் நிலைபெற்றபோது ஆண்மையின் முக்கிய பண்புகளின் ஒன்றாகவே மாறியது அதிகாரம். அதிகாரம் பெறுவதையும் அதைக்கொண்டு மற்றவர்களை அடக்கியாள்வதும் வீடு முதல் நாடுவரை ஒரு பண்பாட்டுக் கூறாக மாறிப்போனது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய யூதக் கலாச்சாரமும் ஆண்களையே அதிகார மையமாக முன்னிறுத்தியது.

இயேசுவின் சீடர்களும் அவருக்கு நெருக்கமான குடும்பங்களை சேர்ந்தவர்களும் அவரைச் சகல அதிகாரம் பொருந்திய அரசனாக யூதேயா தேசத்தை ஆளப்போகிறவர் என்று குருட்டுத்தனமாக நம்பினார்கள். அதன் வெளிப்பாடு தான் செபதேயுவின் மனைவி தன்னிரு மகன்களுக்கு இயேசு ஆட்சிக் கட்டிலில் அமரும்போது பதவிகள் வேண்டி நின்றதும்.

ஒரு யூதத்தாய் இயேசுவைக் காணத்திரளும் மக்கள் கூட்டத்தையும் மக்கள் மத்தியில் அவருக்குப் பெருகும் செல்வாக்கையும் கண்டு அவர் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்பார் என்ற முடிவுக்கு வருகிறார். தன் கணவர் தன் மகன்களுக்காக இயேவிடம் பரிந்து பேசுவாரா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் அவரே துணிவுடன் தன் மகன்களுக்கு அவரது தர்பாரில் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறாள்.

அவள் கேட்டதில் தவறில்லை. ஆனால் பதவி என்றால் என்ன என்பதை செபதேயுவின் மனைவி மட்டுமல்ல; அவரது சீடர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்த மக்கள் என யாருமே சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் இயேசுவின் ஆதங்கம். இதை இயேசுவின் வார்த்தைகள் வழியாகவே மத்தேயு நற்செய்தி அதிகாரம் 20-ல் இறைவார்த்தைகள் 17 முதல் 28 வரை நாம் கற்றறியலாம்.

நான் அருந்துவது துன்பக் கிண்ணம்

இயேசு எருசலேம் நகரை நோக்கிச் செல்லும் வழியில் தமது பன்னிரண்டு சீடர்களையும் தன்னருகில் அழைத்துக் கூறினார், “இப்பொழுது நாம் எருசலேம் நகருக்குச் செல்கிறோம். மானிடமகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள். அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்”என்று அவர்களிடம் கூறினார்.

பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். “உமக்கு என்ன வேண்டும்?”என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்'' என்று வேண்டினார். அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார்.

அவர்கள் “எங்களால் இயலும்”என்றார்கள். அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்குக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்கள் அச்சகோதரர் இருவர்மீதும் கோபங்கொண்டனர். இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்”என்று (மத்தேயு 20:17-28)கூறினார்.

பதவி என்பது என்ன?

பதவி என்பது, பணிசெய்யவும் தொண்டு செய்யவும் என்கிறார் இயேசு. பணம் சேர்ப்பதற்கும் சுகம் அனுபவிப்பதும் பதவியை தக்க வைப்பதும் வேண்டியவர்களுக்கு வரம்பு மீறி சலுகை செய்வதும் வேண்டாதவனைத் தனது பதவியின் மூலம் கிடைக்கும் அதிகாரத்தைக் கொண்டு வாட்டி வதைப்பதும்தான் இன்றைக்குப் பதவி என்று ஆகிவிட்டது. உண்மைக்குச் சான்று பகர்ந்து, நல்லதைச் செய்து, அதனால் பதவி இழந்து, துன்பக் கிண்ணத்தில் குடிக்க முன்வருவோருக்கு நாம் வாக்களிக்கவும் ஆதரவளிக்கவும் மறந்துவிடுகிறோம்.

“நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்கிறார் இயேசு. யூதர்களின் நம்பிக்கையின்படி, அப்பத்தைப் பகிர்வது ஆசீர்வாதங்களைப் பகிர்வதற்கு இணையானது. கிண்ணத்தைப் பகிர்வது என்பது துன்பங்களைப் பகிர்வதற்கு இணையானது. இயேசு தம் சீடர்களிடம் தமது பாடுகளைப் பகிர்வதற்கு அவர்கள் ஆயத்தமா என்று கேட்கிறார். தாங்கள் சொல்வது என்னவென்று உணராமலே அவர்களும் “ஆம்” என்கின்றார்கள். இயேசுவோ அவர்களின் எதிர்கால பணிவாழ்வை மனதில் கொண்டு, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்” என்கிறார்.

யாக்கோபும், யோவானும் இயேசுவின் தலைசிறந்த சீடர்களாக உயர்ந்துவிடுகிறார்கள். அவர்கள் இயேசுவுடன் அப்பத்தையும் பகிர்ந்தனர். துன்பக் கிண்ணத்தையும் பகிர்ந்தனர். அவரது அன்பையும், ஆசீர்வாதங்களையும் பகிர்ந்து கொண்டனர். அதுபோல, அவரது பாடுகளிலும், துன்பங்களிலும் பங்கெடுத்தனர். உண்மையான உறவுகள் அப்படித்தான் இருக்க வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்வதுதான் நல்ல உறவு. தொண்டு செய்வதுதான் பதவி. விவிலியம் காட்டும் பாதை இதுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்