புண்ணியம் கோடி தரும் - ஏப்ரல் 3: மயிலை அஷ்டபந்தன, ஸ்வர்ணபந்தன மகாகும்பாபிஷேகம்

By என்.ராஜேஸ்வரி

மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பார்வதி தேவி மயில் வடிவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த தலம் என்பதால் மயிலாப்பூர் என இத்தலம் புகழ் பெற்றது.

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான இத்திருக்கோயிலில் கோசாலை அருகே உள்ள ஆதிகபாலீஸ்வரர் சன்னிதியில், இந்த தெய்வத் தம்பதிகளின் திருமணக் காட்சி ஆண்டுதோறும் நிகழ்த்தப்படுகிறது.

தற்போது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கும்பாபிஷேகம் 03.04.16 அன்று காலை 8.45 முதல் 9.50 வரை நடைபெற உள்ளது. முன்னதாக கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் விமானம், சிங்காரவேலர், விநாயகர் ஆகியோர் உட்பட 19 தெய்வத் திருவுருவங்களின் விமானக் கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்படும்.

அன்றைய தினம் காலை 11 மணி அளவில் கபாலீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடத்தப்படும். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஏப்ரல் 3 முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடத்தப்படும். இதில் கலந்துகொண்டாலும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டால் கிடைக்கும் கோடி புண்ணிய பலன்கள் முழுமையாகக் கிடைக்கும் என்பது ஐதீகம். கும்பாபிஷேகத்திற்கு முன் செய்யப்படும் சாஸ்திர சம்பிரதாயங்கள் பல. அவை கும்பாபிஷேகத்தை முழுமையடையச் செய்கின்றன.

ஆவாஹனம்

ஆவாஹனம் என்ற சொல்லுக்கு, இறை சக்தியை அழைத்து அமரச் செய்தல் என்று பொருள். சிறு மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்துப் பூஜை செய்தாலும், அதில் பிள்ளையாரின் சக்தியை அழைத்து உருவேற்றுதலே ஆவாஹனம். அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தின்பொழுது, கும்பத்தில் இவ்வாறு எழுந்தருளச் செய்வார்கள். இதற்கு தர்ப்பையையும், மாவிலையையும் பயன்படுத்துவார்கள். முதலில் தெய்வத் திரு உருவில் உள்ள தெய்வீகத்தை மந்திரங்கள் மூலம் கும்பத்தில் ஏற்றுவார்கள். யாகசாலை பூஜைகள் முடிவடைந்த பின், கும்பத்திலிருந்து தெய்வத் திருவுருவிடம் மீண்டும் அந்த சான்னித்தியத்தை எழுந்தருளச் செய்து விடுவார்கள்.

கும்பம்

அழகிய வெள்ளி அல்லது பித்தளைக் குடம் கும்பமாகத் தயாரிக்கப்படும். அக்குடத்தைச் சுற்றி வெண்ணிற நூல் சுற்றுவார்கள். அப்போது மந்திர ஜபம் செய்வார்கள். பின்னர் அக்குடவாய்ப் பகுதியில் மாவிலைக் கொத்து செருகி வைக்கப்படும். அதன் மீது முழுத் தேங்காயை வைத்து சந்தனம், குங்குமம் இடுவார்கள். ருத்திரம், சமகம், வேதம் மற்றும் மந்திரங்களைச் சிவாச்சாரியார்கள் ஜெபமாகச் செய்வார்கள். இந்தக் கும்பத்தைச் சிவனின் அம்சமாகக் கொண்டு பூக்களால் அர்ச்சிப்பார்கள்.

பாலாலயம்

இக்கும்பத்தில் தெய்வ சான்னித்தியம் ஏற்றப்பட்டு கோயிலின் வேறு ஒரு சன்னிதியில் இதை எழுந்தருளச் செய்வார்கள். இதற்கு பாலாலய பிரவேசம் என்று பெயர்.

கிரியைகள்

அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நிகழ்த்த முற்பட்டால், அறுபத்து நான்கு கிரியைகள் செய்வார்கள். தற்போது அறுபத்து நான்கில், முக்கியமான பதிமூன்று கிரியைகள் மட்டுமே செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆசாரியவர்ணம்

கும்பாபிஷேகப் பொருட்கள் அனைத்திற்கும் பூஜை செய்வது வழக்கம். இதற்கு தன பூஜை என்று பெயர். கும்பாபிஷேகத்திற்கு வரும் பொருட்கள் மற்றும் பண வசூல் பதினோரு பாகங்களாகப் பிரிக்கப்படும். அதில் ஒரு பாகத்தை, பிரதான ஆச்சாரியருக்கு மாலை மரியாதையுடன் அளித்து, கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நிகழ்த்தித் தருமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.

அனுக்ஞை

கும்பாபிஷேகம் நிகழ்த்த நாள் குறித்த பின் முதலில் ஐம்பெரும் தெய்வங்களின் அனுக்ஞை (அனுமதி) பெறுவார்கள். கர்த்தாவை, அதாவது உரிமையானவரை விநாயகர் சன்னிதி முன் அனுமதி கோரும் நிகழ்ச்சியாகவும் இதனை நடத்துவார்கள்.

பிரவேச பலி

கும்பாபிஷேகம் நடக்க உள்ள திருக்கோயிலுக்கு எட்டுத் திசையிலும் தீய சக்திகள் இருந்தால் அவற்றை விலகிச் செல்லப் பணிப்பதே பிரவேச பலி.

வாஸ்து சாந்தி

வாஸ்து புருஷனால் கும்பாபிஷேகத்திற்கு பிரச்சினை ஏதும் ஏற்பட்டுவிடாமல் இருக்க சாந்தி பூஜைகள் செய்வார்கள். இதில் ஹோமம், பூஜை ஆகியவை உண்டு.

காப்புக் கட்டுதல்

சிவாசாரியார்கள், நாகராஜனுக்குப் பூஜை செய்து எடுக்கப்பட்ட மந்திரித்த மஞ்சள் கயிற்றை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள்.

கட ஸ்தாபனம்

கும்பாபிஷேகத்தில் மிக முக்கியமான கட்டம் கட ஸ்தாபனம் என்னும் கும்பம் அல்லது கலசம் அமைத்தல். தங்கம், வெள்ளி, தாமிரம், மண் ஆகிய ஏதேனும் ஒரு மூலப் பொருள் கொண்டு கும்பம் உருவாக்கப்படும். திருக்கோயிலின் இறைவனாகவே கருதி மந்திரம் ஓதி, குடத்திற்குப் பூஜைகள் செய்வார்கள்.

அஷ்டபந்தனம்

கும்பாபிஷேக அழைப்பிதழ்களில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் என்று குறிப்பிட்டிருக்கும். அஷ்ட என்றால் எட்டு; பந்தனம் என்றால் கட்டுதல். எட்டுப் பொருட்களைக் கொண்டு கட்டுதல் எனப்படும். அந்த எட்டுப் பொருட்கள்: கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய். இந்த எட்டு வகைப் பொருட்களைக் கொண்டு சாந்து தயாரிப்பார்கள். இதனைக் கொண்டு சிலாரூபம் அசைந்துவிடாமல் இருக்க சாந்து போல் பூசுவார்கள். இந்தப் பூச்சு, பன்னிரெண்டு ஆண்டு காலம் தாங்கும். இதனை புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்பதால்தான் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்ப்படுகிறது.

மிகுத்சம்கிரஹணம்

பாலிகை என்ற கிண்ணங்களில் மண் இட்டு, நவ தானியங்கள் தூவி முளைப்பாரியாக விளையச் செய்வார்கள். பின்னர் இது நீரில் கரைக்கப்படும். தெய்வத் திருமணங்களிலும், பக்தர்கள் திருமணங்களிலும்கூட இந்த நிகழ்வு உண்டு. வாழ்வு பசுமையாக இருக்கச் செய்யப்படும் பாலிகை கரைத்தல் நிகழ்ச்சி இயற்கையைப் போற்றி வழிபடும் முறையாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்