சென்னையில் திருத்தொண்டர் உலா

By என்.ராஜேஸ்வரி

மார்ச் 21: அறுபத்து மூவர் பெருவிழா

அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில், சென்னையில் மட்டுமின்றி உலகலாவிய அளவில் புகழ் பெற்ற திருக்கோயில் ஆகும். தன் மணாளனான சிவனைக் குறித்தே கலியுகத்தில் தவம் இருந்தாள் அன்னை கற்பகாம்பாள். மயில்கள் நிறைந்த ஊரான மயிலாப்பூரில், அன்னை மயிலாகவே தோன்றி, லிங்க உருவில் அடர்காட்டில் இருந்த, லிங்க வடிவ ஆதி கபாலீஸ்வரரை பூஜித்து வந்தாள். அவளது அருட்பூஜையில் அகமகிழ்ந்த சிவன், தானே அவள் முன் தோன்றினார். அன்னையை மணந்தார். மயிலையிலேயே பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருவரும் கோயில் கொண்டனர். இங்கு மயிலாகப் பூஜிக்கும் அன்னைக்கும், லிங்க சொரூபத்திற்கும் தனிச் சன்னதி கோசாலையை ஒட்டி அமைந்துள்ளது.



கோயிலுக்குள் உலா

கோயிலின் உள்ளே நுழைந்ததும் எதிரே காணப்படுபவர் நர்த்தன விநாயகர். முன்னதாக கோபுர வாயிலில் இடப்பக்கம் நர்த்தன விநாயகரும், தில்லைக் காளியும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர். சந்நிதி விநாயகரை அடுத்து அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மையும் தனித்தனி சந்நிதியில் காட்சி அளிக்கின்றனர். தொடர்ந்து பிரதட்சணமாக வந்தால், தெய்வயானை, வள்ளி சமேதராக ஆறுமுகக் கடவுள் தனிக் கொடிமரத்துடன் கோயில் கொண்டுள்ளார். எதிரே அருணகிரிநாதருக்குத் தனிச் சந்நிதி.

பக்கவாட்டில் உள்ள மண்டபத்தில் பழனியாண்டவரும், எண்ணெய் கிடைகாததால் தனது குருதியால் சிவனுக்கு விளக்கேற்றி வழிபட்ட வாயிலார் நாயினாரும் தனிச் சந்நிதிகளில் கோயில் கொண்டுள்ளனர். இதனை சுற்றி வந்து மண்டபப்படிகளில் ஏறினால், சரபேஸ்வரர், லட்சுமி, சரஸ்வதி ஆகிய திருமூர்த்தங்கள் புடைப்புச் சித்திரங்களாக நின்ற திருக்கோலத்தில் தூண்களில் காட்சி அளிக்கின்றனர்.

இம்மண்டபத்தை ஒட்டி உள்ள காட்சி மண்டபத்தில் நின்றுகொண்டு நேரே பார்த்தால், சந்நிதியில் கற்பகாம்பாளின் நின்ற திருக்கோலக் காட்சியைக் காணலாம். துவஜஸ்தம்பம், அதனடியில் நந்திகேஸ்வரர். எதிரே சுவாமி சந்நிதி. கபாலீஸ்வரர் லிங்க சொரூபக் காட்சி. உள்பிரகாரத்தில், தெய்வயானை, வள்ளி சமேதராக சுப்பிரமணியர், சிவகாமி நடராஜர், அறுபத்து மூவர் ஆகிய திருமூர்த்தங்கள் உற்சவர்களாக காட்சி அளிக்கின்றனர். இந்த உற்சவ மூர்த்தங்களான அறுபத்து மூவர்தான், விழாவன்று நான்கு மாடவீதிகளிலும் உலா வருவர்.

உட்பிரகாரத்தில் துர்கை, மகிஷாசுரமர்த்தினியாக மாடக்கோயில் கொண்டுள்ளாள். இடப்புறம், சரஸ்வதி, துர்கா, லட்சுமி ஆகிய மூவரும் ஒரே மேடையில் இணைந்து அமர்ந்த திருக்கோலக் காட்சி. காலபைரவர், வீரபத்திரர், பொள்ளாப் பிள்ளையார், லிங்கோத்பவர், சிவ சூரியன், அறுபத்து மூன்று நாயன்மார்கள். தட்சிணாமூர்த்தி, செல்வ விநாயகர் ஆகிய மூலவர்கள் கோயில் கொண்டுள்ளனர்.

சோமாஸ்கந்தர், கற்பகாம்பாள், நர்த்தன விநாயகர் ஆகியோர் உற்சவர்களாக உள்ளனர். சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு வெளியே பூம்பாவை சந்நிதி உள்ளது.

ஸ்தல விருட்சம் புன்னை மரம், வெளி பிரகாரத்தில் செழிப்பாக உள்ளது. சனீஸ்வரன் தனிச் சந்நிதியும், நவகிரக சந்நிதியும் கொண்டுள்ளனர். இதனையடுத்து, சுந்தரரேஸ்வரரும், ஜகதீஸ்வரரும் தனிச் சந்நிதி கொண்டுள்ளனர். தற்போது பிரம்மோற்சவத்தையடுத்து இத்திருக்கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.



அறுபத்து மூவர்

சைவம் போற்றும் அடியவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்கள். இவர்கள் காலம் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடங்கி ஆயிரமாவது நூற்றாண்டு வரை எனக் கணக்கிட்டு உள்ளனர். சில நூறு ஆண்டுகளில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் தோன்றி ஈசன் புகழ் பாடியுள்ளனர்.

சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. இவர் இந்த வரிசையில், அடக்கம் கருதித் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. ஆனால் சேக்கிழார், திருத்தொண்ட தொகையில் குறிப்பிட்ட அறுபத்து இருவருடன் இதனைத் தொகுத்த சுந்தரமூர்த்தி நாயனாரையும் சேர்த்து அறுபத்து மூவர் ஆக்கினார். இவர்களின் வரலாறு திருத்தொண்டர் புராணம் என்று வகைப்படுத்தப்பட்டு, பெரிய புராணத்தில் உள்ளது.

இந்த நாயன்மார்கள் பொதுவாக சிவன் ஆலயங்களில் மூலவராக பிரகாரத்தில் வரிசையாக வீற்றிருப்பர். சிவன் ராஜாவாகவும், அவரது அவையில் அமர்ந்துள்ள மதி மந்திரிகள் போலும் நாயன்மார்கள் விளங்குவர். இவர்களது ஜன்ம நட்சத்திர நாட்களில், சிவாசாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்வர். சில திருத்தலங்களில் கோயிலுக்கு உள்ளேயே பிரகாரத்தில் குறிப்பிட்ட நாயன்மார் வலமும் வருவார். நால்வரை சமயக் குரவர்கள் - அறிவு புகட்டுபவர்கள் என்ற பொருளில் குறிப்பிடுவார்கள்.



குரவர் நால்வர்

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகியோரை நால்வர் எனச் சிறப்பித்துக் கூறுவார்கள். இவர்களும் அறுபத்து மூவரில் அடக்கம்.

பன்னிரு திருமுறைகள் கொண்டது சைவத் திருமுறைகள். முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், அதற்கடுத்த மூன்று திருமுறைகள் திருநாவுக்கரசராலும், ஏழாம் திருமுறை சுந்தரராலும் இயற்றப்பட்டது. இவை இசையோடு கூடிய பண் அமைந்தது. சிறந்த பக்திமான்களாக இருந்து அறுபத்து மூவரில் ஒருவராக இடம் பெற்றவர்கள் பலர். பக்தியே இறைவனை அடையும் வழி என்று வாழ்ந்து காட்டியவர்கள் இவர்கள்.



பெண் மூவர்

பெண்பாற் சிவனடியார்களும் அறுபத்து மூவர் பட்டியலில் உண்டு. அறுபத்து மூவரில், மூவர் பெண்கள். இவர்களில் காரைக்கால் அம்மையார் காலத்தால் மூத்தவர். இவரது இயற் பெயர் புனிதவதி. மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் மனைவி மங்கையர்கரசி மற்றொரு பெண்பாற் நாயனார். திருநாவலூரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர் சுந்தரரின் தாய்.

மயிலையில் அறுபத்து மூவர் விழாவுக்கு பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துவிடுவது ஆண்டுதோறும் தவறாமல் நிகழும் அற்புதம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்