இஸ்லாம் வாழ்வியல்: அரியணைக்கான தகுதிகள்

By இக்வான் அமீர்

ஆட்சியாளர்களுக்கு தேவை யான மிக முக்கிய தகுதி ஒழுக்கம். ஒழுக்கத்துடன் எளிமையும், மனித நேயமும் சேர்ந்து கொண்டால் தலைமைத்துவத்துக்கான பண்பை பெற்றுவிடுவார். இத்தகைய பண்பாளர்கள்தான் மக்களை ஆளத் தகுந்தவர்கள். தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள்.

ஆளுநர் பொறுப்புக்காக இத்தகைய ஒருவரை தேர்ந்தெடுக்க இருவரை எதிர் நோக்கி ஜனாதிபதி உமர், மதீனாவில் தமது இல்லத்தில் காத்திருந்தார்.

அந்த இருவரும் சிறப்பு மிக்க இருவேறு கோத்திரத்தின் சிறந்த தலைவர்களாக போற்றப்பட்டவர்கள். இவர்களில் ஒருவரை ஆளுநராக தேர்வு செய்ய வேண்டிய சற்று கடினமான பணி அது.

“உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டா வதாக!” என்று சலாம் சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்த முதலாவது நபர், மிகவும் மிடுக்கான, எடுப்பான தோற்றம் கொண்டிருந்தார். அழகிய குரலில், நளினமாக பிசிறில் லாமல் அவர் மொழியைக் கையாண்டு சலாம் சொன்ன விதம் யாரையும் வசீகரித்துவிடும். அவருடைய உடைகளோ ஆடம்பரமானவையாக இருந்தன. தலையில் கட்டியிருந்த டாம்பீகமான தலைப்பாகை இன்னும் அவரை எடுப்பாக காட்டியது.

முதாலாவது நபரை வரவேற்று அமர வைத்த ஜனாதிபதி உமர், பேரீச்சம் பழங்களை பரிமாறினார். அந்தக் குறுகிய உரையாடல் அவர் சிறந்த புத்திசாலி, மதிநுட்பம் மிக்கவர், ஆளுநர் பொறுப்புக்கு ஏற்புடையவர் என்பதை வெளிப் படுத்தின.

அப்போது, இவர்களின் உரையாடலில் குறுக்கிடுவதுபோல, முகமன் சொல்லிக் கொண்டே இரண்டாவது நபர் அங்கு வந்தார். அவசரமும், பதட்டமுமாய் அவர் காணப்பட்டார். ஆடையில் படிந்திருந்த தூசை தட்டிவிட்டவாறு, தலையில் சரிந்து கண்களை மறைத்து கொண்டிருந்த தலைப்பாகையை சீர் செய்தவாறு அவர் இருந்தார்.

“ஜனாதிபதி அவர்களே! என்னை மன்னிக்க வேண்டும். தங்களை சந்திப்பதற்காக வந்துகொண்டிருந்த வழியில் ஒரு வயதான மூதாட்டி தனது கழுதையுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். பாதையில், இரு பாறைகளுக்கு நடுவே எதிர்பாராமல் கழுதையின் கால்கள் சிக்கிக் கொண்டன. அந்த வாயில்லா ஜீவனை மீட்பது அவ்வளவு எளிதான செயலாக இல்லை. எப்படியோ ஒருவழியாய் போராடி கழுதையைக் காப்பாற்றிவிட்டேன். இதன் காரணமாகதான் சற்று தாமதமாகிவிட்டது. இதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.!” என்றார் அவர் பதட்டம் குறையாமல்.

ஜனாதிபதி உமர் மெல்லிய புன்னகையுடன் அவரை அருகில் அழைத்து அமர வைத்து அமைதிப்படுத்தினார்.

இந்தப் பேச்சைக் கேட்டு முதலாவது நபர் சிரித்துக் கொண்டே, “உமக்கு கவர்னர் பதவியைவிட கழுதை முக்கியமாகிவிட்டது. நல்ல வேடிக்கை!” என்றார் கிண்டலாக.

இந்த நேரத்தில், ஜனாதிபதி உமரின் குழந்தைகளில் ஒன்று ஓடி வந்து அவரது மடியில் அமர்ந்து கொண்டது. அதை வாரி அணைத்துக் கொண்ட உமர் அதன் நெற்றியில் முத்தமிட்டவாறு கொஞ்ச ஆரம்பித்தார்.

இதைக் கண்டு ஆச்சரியமடைந்த முதலாவது நபர், “ஓ..! இப்படி ஒருமுறைகூட எனது குழந்தைகளிடம் நான் நடந்து கொண்டதில்லை. இன்னும் கேட்டால் என்னைக் கண்டாலே எனது குழந்தைகள் பயத்தால், ஓடி ஒளிந்து கொள்வார்கள்!”என்றார் பெருமையுடன்.

இதைக் கேட்ட ஜனாதிபதி உமர், “இறைவன் உமது உள்ளத்தில் கருணை சுரக்காமல் செய்ததற்கு நான் என்ன செய்ய முடியும் சகோதரரே! ஒன்றை நினைவில் வையுங்கள். இறைவனின் அருள்மாரி அவனுடைய படைப்பினங்களை நேசிப்பவர்கள் மீதுதான் பொழியும்!” என்றார் சற்று கடுமையாக.

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த இரண்டாவது நபர், சிறிது நாணத்துடன் நெளிந்தார்.

“என்ன விஷயம் சகோதரரே!” என்று உமர் அவரிடம் விசாரித்தார்.

“ஒன்றுமில்லை ஜனாதிபதி அவர்களே! எனக்கு இந்த குழந்தைகள் செய்யும் குறும்புகளை எப்படி விளக்குவதென்றே தெரியவில்லை. இறைவனின் பேரருளால் எனக்கு ஐந்து குழந்தைகள். அவை எப்போதும், என் மீது குதிப்பதும், தாடியைப் பிடித்து இழுப்பதும் என்று சேட்டைகள் செய்தவாறே இருக்கும். இதோ..! பாருங்கள்.. கசங்கிபோன எனது சட்டையை! தங்களை சந்திப்பதற்கு நான் புறப்பட்டபோது எனது கடைக்குட்டி லைலா என்னைப் போகவிடாமல் சட்டையைப் பிடித்துக் கொண்டாள். அவளை சமாதானப்படுத்தி சட்டையை விடுவித்துக் கொள்வதற்குள் போதும்… போதுமென்றாகிவிட்டது!” என்றார் கூச்சத்துடன்.

இதைக் கேட்டு மென்மையாக புன்முறுவல் பூத்த ஜனாதிபதி உமர், தனது உதவியாளரை அழைத்தார். ஆளுநருக்கான உத்திரவை எழுதி இரண்டாவது நபரிடம் தர ஆணையிட்டார்.

திகைத்து நின்ற முதலாவது நபரிடம் ஜனாதிபதி உமர் சொன்னார். “சகோதரரே! தலைமைத்துவத்திற்கு வெறும் பகட்டும், மிடுக்கும், திறமைகளும், உடல் மொழிகளும் மட்டும் போதாது. மக்களுக்கான ஆளுநராக தேர்வு செய்யப்படும் நபர் மிகவும் எளிமையானவராகவும், மக்களை நேசிப்பவராகவும், உயிரினங்கள் மீது நேயம் கொள்பவராகவும் இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் உம்மைவிட இதோ இந்த நபரிடம் இருப்பதை நான் காண்கிறேன்!”.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்