வாராணசியில் அந்தக் காலத்தில் யசன் என்ற செல்வந்த இளைஞன் இருந்தான். அவனுக்கு வாழ்க்கை பிடிக்காமல் போய், ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியேறி மனம் போன போக்கில் போய்க்கொண்டிருந்தான். அதிர்ஷ்டவசமாக அவன் புத்தரைச் சந்தித்தான். புத்தரைப் பார்த்தவுடன் அவரது சக்தியால் கவரப்பட்டான். பௌத்த மார்க்கத்தைக் கடைப்பிடிக்க புத்தர் அவனிடம் அறிவுறுத்தினார். துறவியாகி பௌத்த சங்கத்தில் அவன் சேர்ந்தான்.
அவனைத் தேடி வந்த அவனது தந்தையும் புத்தரைச் சந்தித்துச் சீடராக மாறினார். ஆனால், அவர் வீட்டையும் குடும்பத்தையும் துறந்துவிடவில்லை. பின்னர் அவர்களுடைய வீட்டுக்குச் சென்ற புத்தரின் போதனையைக் கேட்டு, அவரது மனைவியும் யசனின் மனைவியும்கூடப் புத்தரின் சீடர்கள் ஆகினர்.
தனது சீடர்கள் அனைவரும் துறவிகளாகவும், சந்நியாசினிகளாகவும் ஆக வேண்டும் என்று புத்தர் வலியுறுத்தவில்லை. அதற்கான ஆர்வமும் பக்குவமும் சிலருக்கே இருக்கும் என்று அவர் நம்பினார். தான் கற்பித்த நெறிமுறைகளின்படி வாழ்ந்தாலே போதும் என்று புத்தர் எதிர்பார்த்தார். அப்படிப்பட்டவர்கள் புத்தரின் சாதாரணச் சீடர்கள் என்றழைக்கப்பட்டார்கள். இந்தச் சீடர்களும் பௌத்தம், தம்மம், சங்கம் ஆகியவற்றை மதித்து நடந்தனர்.
சங்கமும் சீடர்களும்
பௌத்தச் சங்கம் வளர வேண்டும் என்று புத்தர் நினைத்தார். தனது போதனைகளை உலகம் முழுவதும் விளக்கவும் பரப்பவும் பயிற்சி பெற்ற, கட்டுப்பாடான அமைப்பாக பௌத்த சங்கத்தை அவர் உருவாக்கினார். பல துறவிகளைச் சந்தித்துப் பேசி, பௌத்தச் சங்கத்தில் அவர்களைச் சேர்த்தார்.
அவர்களில் ஒருவர்தான் அக்னியை வழிபட்டு வந்த காசியபர். பின்னாளில் மகாகாசியபர் என்று பெயர் பெற்று, புத்தரை அடுத்துப் பௌத்தச் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றவர் அவரே. காசியபருடன் அவரது 500 சீடர்களும் சங்கத்தில் சேர்ந்தனர். பின் காசியபரின் இரண்டு சகோதரர்களும் 300, 200 பேருடன் சங்கத்தில் சேர்ந்தனர்.
ராஜகிரகம்
இப்படிச் சேர்ந்த தன் தொண்டர்களான பிட்சுகளுடன் மகத நாட்டுத் தலைநகரான ராஜகிரகத்தை புத்தர் சென்றடைந்தார். அப்போது மகத நாட்டை ஆண்டவர் பிம்பிசாரர். தனது சபையுடன் எதிர்கொண்டு புத்தருக்கு பிம்பிசாரர் மரியாதை செய்தார்.
அவர்களுக்குப் புத்தர் உபதேசம் செய்தார். பிம்பிசாரரும் அவருடன் வந்தவர்களும் புத்தரின் மாணவர்கள் ஆகினர். நீங்களும் உங்கள் சீடர்களும் என் அரண்மனைக்கு விருந்துக்கு வர வேண்டும் என்று புத்தரை அழைத்தார் பிம்பிசாரர். அந்த அழைப்பை ஏற்று சென்ற புத்தரை உயர்ந்த மேடையில் அமர்த்தி, தானே உணவும் பரிமாறினார்.
பிறகு "என் அர்ப்பணிப்புக்கு அடையாளமாக வேணுவனப் பூங்காவைத் தர விரும்புகிறேன்" என்று புத்தரிடம் பிம்பிசாரர் சொன்னார். புத்தர் அதை ஏற்றுக்கொண்டார். தனது முதல் மடத்தை அங்கே அமைத்தார். புத்த மடங்களுக்கு விகாரம் என்று பெயர். புத்தருக்கும் அவரது சீடர்களுக்கும் தியானம், ஞானம் பெறும் இடங்களாக விகாரங்கள் அமைந்தன.
பொதுவாக மழைக்காலத்தில் துறவிகள் பயணம் செல்லாமல் மூன்று மாதங்களுக்குக் கோயில் களிலோ, ஆசிரமங்களிலோ தங்குவது வழக்கமாக இருந்தது. அந்த ஓய்வு காலத்துக்குப் பௌத்தப் பிட்சுகள் விகாரங் களைப் பயன்படுத்தினர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago