இஸ்லாம் வாழ்வியல்: இரண்டு கவளம் உணவு கூடவா தர மாட்டான்?
கூட்டத்திலிருந்து யாரோ, “ஹாரூன்! ஹாரூன்!” என்று அழைக்கும் குரல் கேட்டது.
‘இப்படி அநாகரிகமான முறையில் ஜனாதிபதியைப் பெயர் சொல்லி அழைப்பது யார்?' என்று எல்லோரும் பார்த்தார்கள். அங்கே, இறைநேசர் ஷா பஹ்லூல் சோகமாய் நிற்பதைக் கண்டார்கள்.
“அய்யா, பெரியவரே என்ன வேணும்?” என்று ஹாரூன் ரஷீத் அவரிடம் பணிவுடன் கேட்டார்.
“ஹாரூன்! இறைவன் மீது ஆணையாக! இறைத்தூதர் முஹம்மது நபிகளாரின் ஹஜ் பயணம் இப்படி ஆடம்பரமாக, டாம்பீகமானதாக இருந்ததில்லை. அதனால், எளிமையைக் கடைப்பிடித்து இறையில்லத்தைத் தரிசிக்க செல்வதே நல்லது!” இறைநேசரின் அறிவுரையைக் கேட்டு ஜனாதிபதி அழ ஆரம்பித்தார். அதன்பின் அப்பெரியவருக்கு பரிசுப் பொருளைத் தர முயன்றார். ஆனால், பஹ்லூலோ அதை ஏற்க மறுத்தார்.
கடைசியில், “அய்யா! இன்று என்னுடன் அமர்ந்து ஒருவேளை உணவாவது உண்ண வேண்டும்!” என்று ஹாரூன் ரஷீத் கேட்டுக் கொண்டார்.
ஷா பஹ்லூலோ வானத்தின் பக்கம் தலையை உயர்த்தி, “ஹாரூன்! நானும் நீயும் இறைவனின் அடியார்கள். உனக்கு இவ்வளவு பெரிய ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தவன் எனக்கு இரண்டு கவளம் உணவு கூடவா தராமல் போய்விடுவான்?” என்று கூறியவாறு அங்கிருந்து சென்றுவிட்டார்.