எரிந்த மரம் கரியாகிறது. அந்தக் கரியும் முதிர்ந்தால் பளிங்காக, வைரமாக ஆகிறது. உலகம் இருந்தபோதிலும் அதன் மாயை நம்மைத் தொடாமல் எல்லாம் விஷ்ணுமயமாகத் தெரிகிறபோது, நம் அஞ்ஞானம் எரிந்து கரியாகப் போன நிலையில் இருக்கிறோம். திருமாலும் இதனாலேயே கருமாலாக இருக்கிறார். கரி வைரமாகிறது போன்ற நிலைக்கு - ஸ்படிகமாகிற நிலைக்கு சுத்த ஸ்படிக சங்காசமான பரமேசுவரன் தெய்வமாக இருக்கிறார்.
கரியும் வைரமும் வேறு வேறு அல்ல. இதுவேதான் அதுவாயிருக்கிறது. மகாவிஷ்ணுவும் பரமேசுவரனும் ஒருத்தரேதான். உலகத்தின் ஆசாபாசங்கள், இவற்றுக்குக் காரணமான மாயை ஆகியவற்றின் நானாவிதமான வர்ண ஆட்டங்கள் இருவரிடத்திலும் இல்லை. மகாவிஷ்ணுவின் கறுப்பு, சிவனின் வெளுப்பு இரண்டுமே சயன்ஸ்படி ஏழு வர்ணங்களில் சேரவில்லை. சத்தியமான தத்துவம் மாயையால் வேறு விதமாக மாறித் தெரிகிறபோதுதான் வர்ணங்கள் உண்டாகின்றன.
இருப்பதைப் பொய்யாக மாற்றிச் சொல்வதை இங்கிலீஷில் Coloured Version என்றே சொல்கிறார்கள் அல்லவா? கலர் வந்துவிட்டால் பொய்க்கு வந்துவிட்டோம் என்று அர்த்தம். கலர்களில் சேராத கறுப்பு விஷ்ணுவிடம் வெள்ளை சிவனிடமும் மனத்தை வைக்கிற வரையில் சத்தியத்தோடேயே ஒட்டிக் கொண்டிக்கொண்டிருக்கிறோம்.
இறுதியான வெண்மைக்கு அடையாளமாகவே கரியையும் எரித்த பின் கிடைக்கிற விபூதிச் சாம்பலைச் சைவர்கள் தரிக்கிறார்கள். என்றும் நிற்பது எதுவோ அதுவே நீறு, திருநீறு. விஷ்ணு மயமான உலகத்துக்கு அடையாளம் மண், மரம், செடி, கொடி எல்லாமே மண்ணிலே பிறந்து மண்ணிலே வளர்ந்து முடிவில் மட்கி மடிகிறபோது மண்ணே ஆகின்றன.
எனவே மண்ணும் முடிவான நிலைக்கு அடையாளமாக இருக்கிறது. இதனால்தான் வைஷ்ணவர்கள் திருமண் இட்டுக்கொள்கிறார்கள். திருநீறும் திருமண்ணும் ஒரே தத்துவத்தைத்தான் காட்டுகின்றன. ஹரிஹர பேதம் இல்லாதது போல், அவர்களுக்குரிய சின்னங்களிலும் பேதமில்லை. ஜகத்தில் இருந்துகொண்டே மேல் நோக்கிப் போட்டுக்கொள்கிறார்கள். எல்லாம் சமமாகி விட்ட சிவயோக நிலையில், விபூதியை உயரவாட்டில் போடாமல் நெற்றியில் குறுக்கே தரித்துக்கொள்கிறார்கள்.
சிவனுக்கும் திருமாலுக்குமிடையே பேதம் கற்பிப்பது கொஞ்சம்கூடச் சரியில்லை. வைஷ்ணவ ஆழ்வார்களும், சைவ நாயன்மார்களும் உயர்ந்த பக்தி நிலையில் இரண்டையும் ஒரே ஸ்வரூபமாகக் கண்டு பாடியிருக்கிறார்கள். "பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து" என்று ஆழ்வார் பாடினால், அதை அப்படியே எதிரொலிக்கிற மாதிரி, "குடமாடியை இடத்தே கொண்டு" என்று சைவத் திருமுறை பாடுகிறது (கோபிகைகளோடு குடத்தை வைத்துக்கொண்டு நர்த்தனம் செய்த கிருஷ்ண பரமாத்மாத்தான் குடமாடி).
தமிழ்நாட்டில் ஆதிகாலம் முதற்கொண்டு இந்த சமரச பாவம் இருந்து வந்திருக்கிறது. அதனால்தான் இருபத்தேழு நக்ஷத்திரங்களுக்குள் சிவனுக்குரிய ஆதிரை, விஷ்ணுவுக்குரிய ஓணம் ஆகிய இரண்டுக்கு மட்டும் ‘திரு' என்ற கௌரவ அடைமொழி சேர்த்துத் திருவாதிரை, திருவோணம் என்று சொல்கிறோம். குழந்தையாக இருந்தபோதே இந்த சமரச உணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதால்தான் அவ்வைப்பாட்டி ஆத்திச்சூடியில் ‘அரனை மறவேல்' என்றும், ‘திருமாலுக்கு அடிமை செய்' என்றும் உபதேசம் செய்கிறாள்.
ஒரே தெய்வத்தை இஷ்ட மூர்த்தியாகக் கொண்டு வழிபடுவதே சித்த ஒருமைப்பாட்டுக்கு உதவுவதாகத் தோன்றலாம். இதில் நியாயம் உண்டு. இதனால் ஒவ்வொரு மூர்த்தியைத் தாழ்வாக எண்ணக் கூடாது. தங்கள் இஷ்ட தெய்வத்தையே, பரம்பரையாக வந்த குலதெய்வத்தையே உபாசிக்கலாம். ஆனால் அப்போதும், ரூபமற்ற பரமாத்மாவையே நாம் இந்த ரூபத்தில் வழிபடுகிறோம். எனவே இந்த மூர்த்தி பரமாத்மாதான்.
அந்த பரமாத்மா மற்ற ரூபங்களும் எடுத்துக் கொள்ள முடியும்; அதாவது ‘நம் தெய்வமேதான் மற்றவர்கள் வழிபடுகிற ஏனைய மற்ற தெய்வங்களாகவும் உருவம் கொண்டிருக்கிறது' என்ற அறிவும் ஏற்படவேண்டும். நம் தெய்வமே தான் மற்ற தெய்வங்களாகவும் உள்ளது என்று நினைத்துவிட்டால், நமக்கு அந்த ரூபங்களில் பிடிப்பு உண்டாகாவிட்டாலும்கூட, அவை நம் தெய்வத்தை விடத் தாழ்ந்தது என்ற எண்ணம் வரவே வராது. சமயச் சண்டைகளும் உண்டாகாது.
எல்லோரும் ஒரே பரமாத்மாவின் குழந்தைகளாக அன்போடு ஐக்கியப்படுவதற்காக ஏற்பட்ட மதத்தில், தெய்வங்களின் பெயராலேயே சண்டையும், துவேஷமும் உண்டாகிற நிலை மறைந்து, செளஜன்யமும், சாந்தியும் நிலவும்.
- தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago