சக மனிதர்களை விமர்சிப்பதிலும் அவர்களுக்குத் தீர்ப்பு எழுதுவதிலும் தீராத இன்பம் காண்கிறான் மனிதன். பல நேரங்களில் இது சரியான அணுகுமுறை போலவும் சில சமயங்களில் இது தவறு என்பதுபோலவும் நாம் உணர்கிறோம். ஆனால் கடவுள் விரும்புவது என்ன என்பது பற்றி நாம் எண்ணிப்பார்த்தது கூட இல்லை. இந்தத் தவக்கால நாட்களில் நாம் கடைபிடிக்கத் தொடங்கி வாழ்நாள் இறுதிவரையிலும் பின்பற்ற வேண்டிய உலகளாவிய வாழ்வியல் நெறியாக இதை நாம் கொள்ளவேண்டும். “யாரையும் தீர்ப்பளிக்க மாட்டேன், யாரையும் கண்டனம் செய்ய மாட்டேன்” என்னும் ஒரு தீர்மானத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
உண்மையை அறிந்தவர் அவர் மட்டுமே
நமது பணியிடங்களில், பொழுதுபோக்கும் வேளைகளில் அடுத்தவரைப் பற்றிப் பேசுகின்ற பழக்கம் பரவலாக அனைவரிடமும் இருக்கிறது. குறிப்பாக மற்றவர்களது தனிப்பட்ட வாழ்வு, அதில் உள்ள நிறைகுறைகளைப் பற்றிப் பேசும் போக்கு நம் மத்தியில் தொடரவே செய்கிறது. இப்படிப் பேசும் சமயங்களில் நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடுகிறோம், கண்டனம் செய்கிறோம். இப்படிப் பேசுவது இறை வார்த்தைக்கு எதிரானது என்பதையும் உணர வேண்டும். “அவரது தலைமை சரியில்லை” என்றோ, “அவருக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறது” என்றோ, “ இந்தப் பணம் எப்படி வந்ததோ தெரியவில்லை” என்றோ நாம் பேசிவிடுகிறோம்.
ஆதாரமில்லாமல் பேசுகிற பேச்சுகள் அனைத்துமே சக மனிதர்கள்மீது நாம் சுமத்துகின்ற தீர்ப்புகளாகவும், மற்றவர்களை அவமதிப்பதாகவும் அமைகின்றன. இறைவன் ஒருவரே உண்மையை அறிவார். மனித மனங்களின் ஆழத்தை அறிந்தவர் அவரே. வேறு யாருக்கும் தீர்ப்பிடவோ, கண்டனம் செய்யவோ உரிமையில்லை. இதை உணர்ந்து, “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள். அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்” என்னும் என்ற உன்னதமான வாழ்வியல் உண்மையை இயேசு எடுத்துக்காட்டினார்.
அதே அளவையால் அளக்கப்படும்
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது; “உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் (லூக்கா 6:36-38).''
நீதிபதி அவர் மட்டுமே
தீர்ப்பிடாதீர்கள், தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள் என்பது இயேசு சொல்கிற முதல் செய்தி. ஏன் தீர்ப்பிடக் கூடாது? ஏனெனில் தீர்ப்பிடுதல் என்பது கடவுளுடைய பணி. அது நமது பணி அல்ல. இந்த உலகத்தைப் படைத்தவர் கடவுள். இந்த உலகத்துக்குப் படியளக்கிறவர் கடவுள். இந்த உலகத்தின் சொந்தக்காரர் கடவுள். நமக்கு வாழ்வு என்கிற கொடையைக் கொடுத்தவர் கடவுள். எனவே நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடுவது வாழ்வியல் அறம் அல்ல.
ஏனெனில் நாம் தீர்ப்பிட்டால், தேவையில்லாமல் கடவுள் செய்ய வேண்டிய செயலைச் செய்கிறோம். இரண்டாவது, தீர்ப்பிடுவதற்கான தகுதிக்கும் நாம் ஏற்புடையவர்கள் அல்ல. மனிதர்களாகிய நாம் ஒருவரின் செயல்களை அடிப்படையாக வைத்துத் தீர்ப்பு சொல்கிறோம். ஆனால், ஒருவரின் செயல்களை அடிப்படையாக வைத்துத் தீர்ப்பிடுவது, உண்மையான தீர்ப்பாக இருக்க முடியாது. காரணம், செயலும், எண்ணமும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும் என்பதற்குச் சான்று ஏதும் இல்லை.
ஒருவர் உள்ளத்தில் வஞ்சக எண்ணம் வைத்துக்கொண்டு, வெளியே நல்லது செய்வதுபோல நடிக்கலாம். மனிதர்களாகிய நமக்கு ஒருவரின் உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் குறைவாகவே உள்ளது. ஆனால், கடவுளால் எல்லாம் இயலும். கடவுள் ஒருவரின் செயலை வைத்து மட்டும் எடைபோடுவதில்லை; அவர் உள்ளத்தையும் பார்க்கிறார். அதன் அடிப்படையில் அவர் ஒருவரைத் தீர்ப்பிடுகிறார். இதுதான் முழுமையான, நியாயமான தீர்ப்பாக இருக்க முடியும். ஒருவேளை நாம் அதைப் பொருட்படுத்தாமல் மற்றவர் களைத் தீர்ப்பிட்டால், கடவுளின் தீர்ப்புக்கு நாம் உள்ளாக நேரிடும்.
மற்றவர்கள், கடவுளுக்கேற்ற வாழ்வு வாழ நாம் உதவி செய்ய வேண்டுமே தவிர, அவர்களைக் கண்டனத்திற்கு உள்ளாக்கக்கூடாது. ஏனெனில் என்னைப்போலத்தான் மற்றவர்களும். நான் நிறை, குறைகளோடு வாழ்வதுபோலத்தான் மற்றவர்களும். என்னுடைய குறைகளை மற்றவர்கள் புரிந்து கொண்டு என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுகிற நாம், மற்றவர் குறைகளையும் ஏற்றுக்கொண்டு, அவர்களைத் தீர்ப்பிடாமல், அவர் அந்தக் குறைபாட்டிலிருந்து மீண்டு வர உதவி செய்வதுதான் சிறந்த வாழ்வாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago