சமணத் திருத்தலங்கள்: திகாம்பர் லால் ஆலயம் - தலைநகரில் ஒரு செங்கோயில்

By விஜி சக்கரவர்த்தி

நம் நாட்டின் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் டெல்லி செங்கோட்டையின் எதிரில் அமைந்துள்ளது லால் சமண ஆலயம். இது சிவப்பு நிற மணற்கற்களால் கட்டப்பட்டதால் இந்த ஆலயத்தை செங்கோயில் என்றும் அழைப்பர்.

இது முகலாய பேரரசுக் காலத்தில் கி.பி.1656-ம் ஆண்டில் எழுப்பப்பட்டது. டெல்லியில் உள்ள சமண ஆலயங்களில் மிகவும் மகிமையும் தொன்மையும் கொண்ட ஆலயம் இதுதான். முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் டெல்லியில் வாழ்ந்த சமணர்களுக்கெல்லாம் ஷாஜகான்பாத் என்னுமிடத்தில் இலவசமாக வீட்டு மனைகள் வழங்கி அங்கு வாழ வைத்துள்ளார். சமணர்கள் வழிபட அங்கேயே ஒரு கோயில் கட்டிக்கொள்ளவும் அனுமதி வழங்க, கோயில் கட்டப்பட்டது.

பாம்பின் படநிழலில் பார்சுவநாதர்

கோயில் மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கண்களைக் கவருகின்றது. இங்குள்ள ஓவியங்கள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இதமாகவும் மனதுக்கு விருந்தளிக்கின்றன.

கோயிலில் தூமணிகள் சுடரெரிக்கும் துணை பாம்பின் படநிழலில் தவம் புரியும் எம்மான்  பார்சுவநாதக் கடவுள் கருவறையில் காட்சி அளிக்கின்றார். பகவான் பார்சுவநாதரின் சிலை ஜினேந்திர பட்டாரகர் என்பவரால் நிறுவப்பட்டது. அருகிலேயே பத்மாவதி அம்மனின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் கோபுரம் சுதந்திர இந்தியாவில்தான் கட்டப்பட்டது. கோயிலின் அருகிலேயே ராஜா ஹர்சுக்ராய் என்பவரால் கி.பி.1800-ல் ஒரு கோயில் உருவாக்கப்பட்டது. இது புதிய கோயில் என்று அழைக்கப்படுகின்றது.

தானே ஒலித்த இசை

ஒருமுறை லால் ஆலயத்தில் ஒலிக்கும் இசைக்கருவிகளின் ஓசை, மன்னர் ஔரங்கசீப்புக்குத் தொந்தரவாக இருக்க, ஏவலர்களை அனுப்பி ஓசையை நிறுத்தக் கூறினாராம். ஏவலர்கள் சென்று பார்த்தபொழுது கருவிகள் தாமாகவே ஒலித்துக் கொண்டிருந்தனவாம்.

கோயிலின் நுழைவுவாயிலில் அழகிய மனத்தூய்மைக் கம்பம் கம்பீரமாக நிற்கிறது. கோயிலில் அகிம்சை அறம் ஆற்ற வேண்டி அறிவுறுத்திய முதல் தீர்த்தங்கரப் பெருமான் ஆதிபகவன் அருள் அளிக்கிறார். நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்க நடை பயின்று வாழ வழிகாட்டிய வர்த்தமான மகாவீரர், கோயிலில் சிலையாக வீற்றிருந்து அறப்பாதை காட்டுகிறார். ஆலயத்தின் முதல் தளத்தில் தியானம் முதலானவை செய்யும் விசாலமான அமைதியானக் கூடம் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு சமணர்களால் பெரிதும் போற்றக்கூடிய சாந்தி சாகரர் எனும் மாமுனிவர் வருகை தந்துள்ளார். அந்த நன்நிகழ்வுக்காக ஒரு நினைவு மண்டபம் கி.பி.1931-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. எழில்மிக்க இவ்வாலயத்தைத் தரிசிக்க வருபவர்களும் பக்தர்களும் தோல் பொருட்களுடன் உள்ளே நுழையத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தில் பறவைகள் மருத்துவமனை

கோயிலின் வளாகத்திலேயே பறவைகளுக்கான இலவச மருத்துவமனை ஒன்று இயங்குகிறது. சமணம் வற்புறுத்தும் மருத்துவதானம் இங்கு அனைத்து பறவைகளுக்கும் செய்யப்படுகிறது. லால் சமணக்கோயில் தெய்வீகமும் உயிர்களின் நேயமும் இணைந்து விளங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்