காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வீசி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா இன்று (ஜூன் 24) மிகவும் எளிமையாக கோயில் பிரகாரத்தின் உள்ளேயே நடைபெற்றது.
அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டவரும், தேவாரத்திற்கு முன்பு திருவந்தாதி படைத்த பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்குக் காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது.
அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் விமரிசையான வகையில் நடத்தப்படும் இவ்விழா கரோனா பரவல் சூழலால் கடந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்தப்பட்டது. நிகழாண்டு முக்கிய நிகழ்வுகளில் மட்டும் உரிய கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி விழா கடந்த 21-ம் தேதி மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு வைபவத்துடன் தொடங்கியது. 22-ம் தேதி காலை கைலாசநாதர் கோயிலில் புனிதவதியார்- பரமதத்தர் திருக்கல்யாணம், மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு நடைபெற்றது. நேற்று (ஜூன் 23) மாலை பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மாங்கனித் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா இன்று நடைபெற்றது.
இதனையொட்டி காலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பிச்சாண்டவர் வீதியுலா மங்கள வாத்தியங்கள் முழங்க கைலாசநாதர் கோயில் பிரகாரத்துக்குள்ளேயே நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்றோர் மாங்கனிகளை இறைவனுக்குப் படைத்தனர். இறைவனுக்கு வேண்டிக்கொண்டு மாங்கனிகளை வீசியெறிந்து பக்தர்கள் பிடித்துச் செல்லும் நிகழ்வு சம்பிரதாய முறையில் நடத்தப்பட்டது.
பிரகார உலாவின் நிறைவில் பிச்சாண்டவரை புனிதவதி அம்மையார் எதிர்கொண்டு அழைத்துச் சென்று மாங்கனியுடன் தயிர் சாதம் வைத்து அமுது படையல் செய்யும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், சந்திரபிரியங்கா, எம்.நாக தியாகராஜன், சிவசங்கர், ஆறுமுகம், ரமேஷ், ஸ்ரீனிவாஸ் அசோக், அசோக் பாபு, மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், கோயில் நிர்வாக அதிகாரி (பொ) காசிநாதன், தேவஸ்தான அறங்காவல் வாரியத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கேசவன், துணைத் தலைவர் பி.ஏ.டி.ஆறுமுகம், செயலாளர் எம்.பக்கிரிசாமி, பொருளாளர் டி.ரஞ்சன் கார்த்திகேயன், உபயதாரர்கள், சிவாச்சார்யார்கள் கலந்துகொண்டனர். அமுது படையல் நிகழ்வுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இரவு பரமதத்தர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. நாளை (ஜூன் 25) அதிகாலை அம்மையாருக்கு சிவபெருமான் காட்சி தரும் நிகழ்வு நடைபெறுகிறது.
விழா நிகழ்வுகள் அனைத்தும் கோயில் இணையதளம், யூ டியூப், உள்ளூர் தொலைக்காட்சி மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிலையில் பக்தர்கள் அதனைக் கண்டு ரசித்தனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago