பொதுப்பலன்
நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 15-ம் தேதி வியாழக்கிழமை, கிருஷ்ண பட்சத்து சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம், சிம்ம ராசி, கன்னி லக்னம் மற்றும் ரிஷபம் நவாம்சத்தில், சௌபாக்கியம் நாம யோகத்தில், பத்தரை நாமகரணத்தில் நேத்திரம் நிறைந்த மந்த யோக நன்னாளில் 2016-ம் ஆண்டு பிறக்கிறது. (2+0+1+6=9) எண் ஜோதிடப்டி 2016-ம் ஆண்டின் கூட்டு எண்ணாக அங்காரகனாகிய செவ்வாயின் ஆதிக்க எண்ணாகிய ஒன்பது வருவதால் இந்த ஆண்டு மிகப் பரபரப்பாக இருக்கும். மக்கள் சின்னச் சின்ன ஆசைகளில் நாட்டம் கொள்வார்கள். சட்டங்கள் கடுமையாகும். கருப்புப் பணத்திற்கு வழி பிறக்கும். ஆகஸ்ட் மாதம் முதல் தங்கம் விலை உயரும்.
அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும். பெண் குழந்தை பிறப்பு அதிகரிக்கும். லக்னாதிபதியாகிய புதன் குரு பகவான் வீட்டிலும் குரு பகவான் புதன் வீட்டிலும் பரிவர்த்தனா யோகம் பெற்று அமர்ந்திருப்பதால் பள்ளிக், கல்லுரிகளில் புதிய பாடத்திட்டம் அமலாகும். கல்விக் கடன் பெறும் முறை எளிதாகும். மத்திய மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் திருக்குறள் கட்டாயமாக்கப்படும். செவ்வாயும் சுக்கிரனும் பரஸ்பரம் மாறி அமர்ந்த நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகள் சூடுபிடிக்கும். மக்களிடையே கண், காது, மூக்கு தொடர்பான நோய்கள் அதிகரிக்கும். 27.2.2016 முதல் 9.9.2016 வரை எதிரெதிர் கிரகங்களான செவ்வாயும் சனியும் செவ்வாயின் வீட்டில் சேர்ந்து காணப்படுவதால் தீவிரவாதிகளால் இளைஞர்கள் சீரழிவார்கள்.
குண்டுவெடிப்பு, நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, ஆட்சி கவிழ்தல், தலைவர்களின் உயிருக்கு ஆபத்து, பருவம் தவறி மழை, கனிம, கரிம வளங்கள் கொள்ளை போகுதல் என்றெல்லாம் நிகழும். சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் வக்கிரமாவதால் ராமர் கோயில், பாபர் மசூதிப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். மதக் கலவரங்களால் நாட்டின் பெருமையும் பொருளாதாரமும் பின்னோக்கித் தள்ளப்படும். அரசியலில் ஆள்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருக்கும். மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாட்டால் போராட்டத்தில் குதிப்பார்கள். கம்ப்யூட்டர் துறை மீண்டும் புத்துயிர் பெறும். சாப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
துலாம்
எப்போதும் லட்சியத்தை நோக்கிப் பயணிப்பவர்களே! உங்கள் ராசிக்குப் பதினோராவது வீட்டில் இந்த 2016-ம் ஆண்டு பிறப்பதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வி.ஐ.பி-கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்படுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். வருங்காலத்திற்காகச் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீனரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். 08.01.2016 முதல் ராகு லாப வீட்டிலும், கேது 5-ம் வீட்டிலும் அமர்வதால் சவாலான காரியங்களைக் கூட சர்வசாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். பொருளாதார வசதியும் பெருகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் சொத்துப் பிரச்சினைகள் தீரும். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு. மகனின் உயர் கல்வி, உத்தியோகத்திற்காகச் சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். இந்த வருடம் முழுக்க ஏழரைச் சனியில் பாதச் சனி தொடர்வதால் பித்தப் பையில் கல் வர வாய்ப்பிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் காலில் அடிப்படும்.
சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள் இருக்கும், நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் அளவாகப் பழகுவது நல்லது. இந்தப் புத்தாண்டின் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சுக்ரன் சனியுடன் சேர்ந்து நிற்பதால் சளித் தொந்தரவு, சிறுசிறு விபத்துகள் வந்து செல்லும். செல்போன், லேப்டாப், ஃப்ரிட்ஜ் போன்ற மின்சார சாதனங்கள் பழுதாகும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு 12-ம் வீட்டில் மறைவதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தர வேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் அதிகரிக்கும்.
வாகனத்தை எடுக்கும்முன் எரிபொருள் மற்றும் பிரேக்கைச் சரி பார்த்துச் செல்வது நல்லது. கோயில் கும்பாபிஷேகத்திற்குத் தலைமைத் தாங்குவீர்கள். 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 26.02.2016 வரை உங்களின் சப்தமாதிபதி செவ்வாய் ராசிக்குள் நிற்பதாலும் மற்றும் 27.02.2016 முதல் 09.09.2016 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து பலவீனமடைவதாலும் உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் வரும். திருமண முயற்சிகள் சற்றுத் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் புதிதாக முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் வருடமிது.
விருச்சிகம்
தன்னலமற்ற போக்கும், வழிநடத்திச் செல்லும் குணமும் கொண்டவர்களே! உங்களுடைய ராசியிலேயே சனி அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வேலைச் சுமை அதிகமாகிக்கொண்டே போகும். ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை காட்டுவது நல்லது. எளிய உடற்பயிற்சிகளும் இந்த வருடம் முழுக்கத் தேவைப்படும். வாய்வுப் பதார்த்தங்கள், அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மே மாதத்தில் சிறு விபத்து வந்து நீங்கும். வருடம் பிறக்கும்போது சூரியனும், புதனும் 2-ல் நிற்பதால் கம்பீரமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைக்காவிட்டாலும் அவர்கள் மத்தியில் கவுரவம் ஒரு படி உயரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். 01.01.2016 முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள்.
தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த சொந்தபந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும். கடன் அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமையையும் உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 12-ல் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சகோதர வகையில் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.
எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். 08.01.2016 முதல் ராகு 10-ம் வீட்டிலும், கேது 4-ம் வீட்டிலும் அமர்வதால் வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி பலிதமாகும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். சிலர் சொந்தமாகத் தொழில் செய்யத் தொடங்குவீர்கள். தாயாருக்குச் சிறிய அளவில் அறுவை சிகிச்சை, கணுக்கால் வலி, நெஞ்சு வலி வந்து போகும். அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டாம். 27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டுப் பலவீனமடைவதால் பணப் பற்றாக்குறை, சொத்துச் சிக்கல்கள், பழைய கடன் பற்றிய கவலைகள், தூக்கமின்மை வந்து செல்லும். சாலைகளைக் கவனமாகக் கடக்கவும். வியாபாரத்தில் லாபம் உயரும். இந்த வருடம் தீர்வு காண்பதாகவும், ஒரளவு நிம்மதி தருவதாகவும் அமையும்.
தனுசு
சிதறிக் கிடக்கும் சக்தியைத் திரட்டிச் சேர்ப்பதில் வல்லவர்களே! செவ்வாய் லாப வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்களின் மனோபலம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் உள்ள திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ஏழரைச் சனி இருப்பதால் உங்களின் நெருங்கிய நண்பர்களைப் புதியவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டாம். திடீர் சிநேகிதர்களை வீட்டிற்குள் அழைத்துவர வேண்டாம். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். ராசிக்குள்ளேயே சூரியனும், புதனும் நிற்பதால் வி.ஐ.பி.-களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.
நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் 10-ம் வீட்டில் நிற்பதால் இடைவிடாமல் உழைத்தும் கையில் எதுவும் தங்கவில்லையே என்ற ஏக்கம் வந்து போகும். சிறிய ஏமாற்றங்கள், எதிலும் ஈடுபாடற்ற நிலை வரும். வீட்டில் வர்ணம் பூசுவது, விரிவுபடுத்துவது, கழிவு நீர், குடிநீர் குழாய் அடைப்பு போன்ற பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். 8.01.2016 முதல் ராகு பகவான் 9-ம் வீட்டிலும், கேது 3-ம் வீட்டிலும் அமர்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.
பாகப்பிரிவினைப் பிரச்சினையில் தலையிட வேண்டாம். இளைய சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணம், ரத்தினங்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் பிள்ளைகளால் செலவு, அலைச்சல், சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். குடும்பத்தினர் அனைவரும் வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணத்தையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்துவிட்டுச் செல்வது நல்லது. வியாபாரம் சூடுபிடிக்கும். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதால் ஆதாயமடைவீர்கள். மேலதிகாரிகளிடம் பணிந்துபோங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பளம் சற்று தாமதமாகிக் கிடைக்கும். இந்தப் புத்தாண்டு விவேகமான முடிவுகளால் வெற்றி பெற வைக்கும்.
மகரம்
எந்தச் சூழ்நிலையிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காதவர்களே! எட்டாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் வீட்டில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் திருமணம், கிரகப் பிரவேசத்தையெல்லாம் எடுத்து நடத்த வேண்டிவரும். புராதனமான ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். இடையிடையே பணப் பற்றாக்குறையையும் சமாளிக்க வேண்டிவரும். அநாவசிய உறுதிமொழிகளைத் தவிர்ப்பது நல்லது. தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். உடன்பிறந்தவர்களுக்காகப் பரிந்து பேசுவதால் மனைவியுடன் இடைவெளி அதிகமாகும். பிள்ளைகளால் புகழடைவீர்கள். மகளின் திருமணத்தை உற்றார், உறவினர் வியக்கும்படி நடத்துவீர்கள். இந்த ஆண்டு முழுக்க ராசிநாதன் சனி பகவான் லாப ஸ்தானத்திலேயே வலுவாக அமர்ந்திருப்பதால் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமை கூடும்.
தள்ளிப்போன பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பொதுநலத் தொண்டுகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். 08.01.2016 முதல் ராகு 8-ம் வீட்டிலும், கேது 2-ம் வீட்டிலும் அமர்வதால் சாணக்கியத்தனமாகப் பேசிச் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். பிதுர்வழிச் சொத்தில் இருந்த சிக்கல் தீரும். உறவினர், நண்பர்களிடம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள். பல் வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும். அநாவசியமாகப் பிறர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் மகளுக்குத் திருமணம் கூடிவரும், வேலை கிடைக்கும். சிலர் வீடு வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் உயர்வீர்கள். ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ல் மறைந்திருப்பதால் அலைச்சலுடன் ஆதாயத்தைத் தருவார்.
பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் துரத்தும். 27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்கள் ராசிநாதன் சனியுடன் செவ்வாய் சேர்ந்து நிற்பதால் உங்களுடைய தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்குப் பண உதவிகள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. உங்களின் கோரிக்கையை நேரடி மூத்த அதிகாரி ஏற்றுக்கொள்வார். இந்தப் புத்தாண்டு உங்கள் புதிய அணுகுமுறையால் வி.ஐ.பிகளால் இனங்கண்டறியப்படுவதாக அமையும்.
கும்பம்
உலகில் திரும்பக் கிடைக்காத ஒரே சிம்மாசனம் தாயின் மடிதான் என்பதை அறிந்தவர்கள் நீங்கள்! இந்த வருடம் பிறக்கும் போது சூரியனும், புதனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் தங்களது தவறை உணருவார்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நல்ல இடத்தில் மணப்பெண்ணும் அமையும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். இந்த வருடம் முழுக்க உங்கள் ராசிநாதன் சனி பகவான் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் முதிர்ச்சியான பேச்சில் அறிவு வெளிப்படும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதிக்குச் சென்று வருவீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். சில இடங்களில் சில நேரங்களில் ஆழமான உறவுகளைவிடப் பணத்திற்குத்தான் மரியாதை கிடைக்கிறது என்ற உண்மையைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள். சில சமயங்களில் தனிமைப்படுத்தப்பட்டதைப் போல் உணர்வீர்கள். ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை 7-ம் வீட்டில் அமர்ந்து குரு, உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் சுருங்கியிருந்த முகம் மலரும். தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும்.
08.01.2016 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்குள் கேதுவும், 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் முன்கோபம் அதிகமாகும். நேரம் கிடைக்கும்போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள். குடும்பத்திலும் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. திடீரென்று அறிமுகமாகி உங்களை அதிகம் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் புது நண்பர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். 27.02.2016 முதல் 9.09.2016 வரை உங்கள் ராசிநாதன் சனியுடன் செவ்வாய் சேர்வதால் அலர்ஜி, நோய்த் தொற்று, ஆரோக்கியக் குறைவு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கொஞ்சம் முரண்டுபிடிக்கத்தான் செய்வார்கள். பங்குதாரர்களால் விரயங்கள் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சக ஊழியர்களில் ஒரு சிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய வருடமிது.
மீனம்
கொடுக்கும் குணம் கொண்ட நீங்கள் விளம்பரத்தை ஒருபோதும் விரும்ப மாட்டீர்கள். உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் இந்த 2016-ம் ஆண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். நெடு நாட்களாகத் திட்டமிட்ட சில காரியங்கள் இப்போது முடியும். 08.01.2016 முதல் ராகு 6-ம் வீட்டில் அமர்வதால் சாணக்கியத்தனமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். மனைவி மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவார். அவரின் ஆரோக்கியம் சீராகும். ஷேர் மூலமாகப் பணம் வரும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப்போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். கேது 12-ம் வீட்டில் மறைவதால் செலவுகள் அதிகமாகும். ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் 8-ல் நிற்பதால் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பு உணர்வு, சலிப்பு வந்து செல்லும். சகோதரர்கள் கோபப்படுவார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். ஆகஸ்ட் மாதத்தில் சிறிய விபத்துகள் வந்து நீங்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
மனைவிக்கு வேலை கிடைக்கும். தாய்வழிச் சொத்தைப் பெறுவதில் இருந்த வந்த தடைகளும் நீங்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் அடுத்தடுத்த வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். இந்தாண்டு முழுக்க சனி பகவான் 9-ம் வீட்டிலேயே இருப்பதால் வேற்று மதத்தவர்கள், மொழியினர்களால் ஆதாயம் உண்டாகும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தந்தைக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வந்து நீங்கும். நல்ல பதவியில் இருக்கும் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
27.02.2016 முதல் 09.09.2016 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் சொத்து வாங்குவது, விற்பதில் கவனம் தேவை. மனஇறுக்கம் உண்டாகும். வெளிப்படையாகப் பேசிப் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். எதிர்பார்த்த பதவி உயர்வு தடையின்றிக் கிடைக்கும். முற்பகுதி முள்ளாக இருந்தாலும், பிற்பகுதி தேனாகும் வருடமிது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago