தெய்வத்தின் குரல்: படைத் தலைவர் பக்தித் தொண்டரானார்

By செய்திப்பிரிவு

பூர்வாச்ரமப் பரஞ்ஜோதிக்கு ஒரு பக்கம் தநுர்வேதப் பயிற்சி இருந்தாலும் இன்னொரு பக்கம் நல்ல சிவபக்தியும் இருந்தது. பக்தியை உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு வெளியே வீர தீரங்கள் காட்டினார்.

நரசிம்ம வர்மாவின் படையில் சேர்ந்து யானைப் படைத் தலைவராகி அவனுக்காக வாதாபி வரை போய் வெற்றி பெற்றார். அங்கே கவர்ந்த பொன், மணி, யானை, குதிரை முதலானதுகளை ராஜாவுக்கே சமர்ப்பணம் பண்ணிவிட்டு வாதாபி கணபதியை மாத்திரம் தனக்கென்று வைத்துக்கொண்டார்.

சளுக்கியர்களுடைய மகா பெரிய யானைப் படையை ஜெயிக்கும்படியான திறமை உமக்கு எப்படி வந்தது என்று ராஜா ஆச்சரியப்பட்டு அவரைக் கேட்டான்.

அவர் ஒன்றும் சொல்லாமல் அடக்கமாக நின்றுகொண்டிருந்தார். சேனாதிபதியாக இருந்தாலும் தன்னுடைய சொந்த விஷயம் எதையும் அவர் ராஜாவிடம் தெரிவித்ததில்லை. தன் காரியத்தைக் கவனமாகச் செய்வாரே தவிர, காரியம் செய்கிற தன்னைப் பிரகாசப்படுத்திக்கொண்டதில்லை. இப்போது ராஜா அவருடைய வீர சாகசத்துக்குக் காரணம் கேட்டபோதும் பேசாமலே இருந்தார்.

இப்போது அந்தப் பல்லவ ராஜாவின் மந்திரிகள், இந்தப் பரஞ்ஜோதி பெரிய சிவபக்தர். வெளியில் தெரியாமல் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்கிறவர். இப்படிப்பட்டவருக்கு முன்னாடி எந்த எதிரிப் படைதான் நிற்க முடியும்? என்கிறார்கள்.

அவருடைய தநுர்வேத சாதுர்யத்தையோ, புஜ பல, புத்தி பலங்களையோ அவர்கள் வெற்றிக்குக் காரணமாகச் சொல்லாமல் அவருடைய சிவ பக்தியே எதையும், யுத்தத்தில் ஜயத்தையுங்கூட, சாதித்துத் தந்ததாகச் சொன்னதைக் கவனிக்கணும். பரலோகத்துக்குத்தான் பக்தி வழிகாட்டுமென்று இல்லை. இகலோக காரியம் ஒருத்தரால் நடக்க வேண்டியிருக்கும் வரை அதற்கும் பக்தி உபகாரம் பண்ணும்.

மந்திரிகள் சொன்னதுதான் தாமதம், ராஜா அப்படியே நமஸ்காரம் செய்தான். இதிலிருந்து அந்தக் காலத்து அரசர்களின் உயர்ந்த பண்பாடு தெரிகிறது. நானாக ஒன்றும் சொல்லவில்லை. பெரிய புராணக் கதையைத்தான் சொல்கிறேன்.

ராஜா நமஸ்காரம் பண்ணியதும் அவனைத் தடுத்துக்கொண்டு அவனுக்கு நமஸ்காரம் செய்த பரஞ்ஜோதி, நீங்கள் இப்படியெல்லாம் வருத்தப்படக் கூடாது. நாங்கள் குலதர்மமாக உத்தியோக பிராம்மணர்களாகி, அதிலேயும் யானைப் படை சேவகம் செய்வதென்று வைத்துக்கொண்டவர்கள்தான். அந்தக் குல வழக்கப்படி நானேதான் உங்கள் படையில் சேர்ந்தேன். இனிமேலேயும் இந்தப் பாரம்பரியத் தொழில் தாராளமாகத் தொடர்ந்து பண்ணுவதற்கு நான் தயார்தான் என்று சொன்னார்.

நாம் எந்த ஸ்திதியில் இருக்கிறோமென்று நம்மை நாமே அலசிப் பார்த்துக்கொண்டு அப்புறம்தான் சந்நியாசம் அல்லது தெய்வ சம்பந்தமாகவே வாழ்க்கை முழுதையும் ஆக்கிக்கொள்வது என்று முடிவு செய்யணும்.

பரஞ்ஜோதி அப்போதே நல்ல பக்குவம் அடைந்துதான் இருக்கிறார். யுத்தத்தைக்கூட பகவத் ஸ்மரணத்தோடு, பகவானுக்காகச் செய்கிற ஒரு காரியமே என்ற நிலையில்தான் அவர் இருந்தார். அதனால் ராஜாவுக்கு guilty feeling - குற்ற உணர்ச்சி, இருக்க வேண்டாம் என்ற உதாரண எண்ணத்தில், இனியும் தொடர்ந்து சேனாதிபதியாக, கஜபதியாக இருக்கிறேன் என்று சொன்னார். அவருக்கு, சிவனடியார் பணி மேலும் நன்றாக நடப்பதற்காக ஏராளமாகப் பொன்னும் பொருளும் சமர்ப்பணம் பண்ணினான் மன்னன்.

இது ஒரு புது மாதிரி கதை. இவர் கஜபதி. சத்ருவிடமிருந்து ஆர்ஜிதம் பண்ணிய பொன்னையும் பொருளையும், எல்லா கதையும் மாதிரி, ராஜாவுக்கு சமர்ப்பித்தாரென்றால், புதுக் கதையாக ராஜாவும் திரும்ப அதே மாதிரி இவருக்குப் பண்ணியிருக்கிறான்.

அதெல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவர் சொந்த ஊரான திருச்செங்காட்டாங்குடிக்கே வந்தார். அதோடு அவர் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. சிவ பக்தியை உள்ளூர வைத்துக்கொண்டு வெளிக் காரியத்தில் படை எடுப்பது, வெட்டுவது, குத்துவது என்று இருந்தவர், வெளியேயும் பரம சாத்விகராகிவிட்டார். சிறுத்தொண்டர் என்பதே அவர் பெயராக நிலைத்துவிட்டது.

விநயமும் ச்ரத்தையும்

அடக்கம் என்பது விநயம். நம்பிக்கை என்பது ச்ரத்தை. இந்த இரண்டுமே நமக்கு இரண்டு கண் மாதிரி. கீதையில் பகவான் விநயத்தையும் சொல்லியிருக்கிறார், ச்ரத்தையையும் சொல்லியிருக்கிறார்.

முதலில் 'ப்ரணிபாதம்' என்கிற நமஸ்காரம், 'பரிப்ரச்னம்', நன்றாகக் கேட்டுக் கேட்டுத் தெரிந்துகொள்வது, `சேவை' என்பவற்றை சிஷ்ய லட்சணமாகச் சொன்னார். சேவைதான் குருவுக்குச் செய்கிற தொண்டு, பல விதமான பணிவிடைகள். அதுவும் வித்யையை சுவீகரிப்பதற்கு ஜீவாதாரமான அம்சங்களில் ஒன்று. சிரத்தையுள்ளவனே ஞானம் பெறுகிறான் என்றும் சொல்லியிருக்கிறார். முதலில் சொன்ன ப்ரணிபாத -பரிப்ரச்ன - சேவைகள் விநயத்தின் கீழ் வருகிறவையே. ப்ரணிபாதமும், அதாவது நமஸ்காரமும், சேவையும் விநயத்தைக் காட்டுபவை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்