வரும் ஞாயிறு திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு. அன்று கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழாவைக் கொண்டாடவிருக்கிறோம்.
வானத்தூதர் கபிரியேல் அன்னை மரியாள் முன்பு தோன்றி, “கடவுளின் அருளைப் பெற்ற பெண்மணியே... பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவரே… நீர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார்” என்று இயேசுவின் பிறப்பை முன் அறிவித்த நன்னாளையே, அறிவிப்புப் பெருவிழாவாக நாம் கொண்டாடுகிறோம்.
மனிதனாகப் பிறக்கும் கடவுளை பூவுலகுக்குத் தரத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னை மரியாவும் நற்பேறு பெற்றவர். அவர் வழியாகத்தான் இந்த உலகின் மீட்பர் பிறக்கவுள்ளார்.
இந்த விண்ணக அறிவிப்பைப் பெறும் பேற்றைப் பெற்ற மரியா கூறிய மறுமொழி அக்காலகட்டத்தின் ஆச்சரியகரமான தெய்வ பயத்தையும் ஞானத்தைம் நமக்குப் புலப்படுத்துகிறது. “நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று சொல்லித் தம்மைக் கடவுளின் திருவுளத்துக்குக் கையளித்தார்.
கடவுளைத் தம் கர்ப்பத்தில் சுமக்க அன்னை மரியா ஒப்புக்கொண்ட அந்த விசுவாச நிகழ்வைப் பதிவு செய்திருக்கிறார் இயேசுவின் சீடர்களில் ஒருவரான லூக்கா.
இறங்கி வந்த இறைவன்
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானத்தூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு திருமண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார்.
வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூய்மையானது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு மறைந்தார் (லூக்கா1:26-38).
விசுவாசத்தின் தாய்
லூக்காவின் நற்செய்தி நமக்குத் திட்டவட்டமாக இரண்டு செய்திகளைக் கூறுகிறது. கடவுள் தன் மகனாகிய இயேசுவை பூமிக்கு அனுப்ப தெய்வ பயமும் விசுவாசமும் மிக்கப் பெண்மணியைத் தேர்ந்தெடுக்கிறார். இரண்டாவது இறைதூதர் வழியாக மரியாளுக்கு அறிவிக்கப்பட்டபோது அவரது விசுவாசம் எத்தனை திடமாக இருந்தது என்பதையும் பார்க்கிறோம்.
அன்னை மரியாவை விசுவாசத்தின் தாய் என்று சொல்வது இதனால்தான். பழமைவாதமும் பிற்போக்குவாதமும் மூடநம்பிக்கைகளும் நிறைந்திருந்த ஒரு சமூகத்தில் வாழும் அன்னை மரியாள் கடவுளின் சித்தத்தை ஏற்றுக்கொள்ளும் நிபந்தனையற்ற விசுவாசம் அவரது ஒவ்வொரு வார்த்தையிலும், வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வெளிப்படுவதைப் பார்த்தீர்கள். இயேசு “உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார்”என்ற செய்தி வானதூதரால் முன்னறிவிக்கப்படுகிறது. ஆனால், நடந்தது என்ன? இயேசுவை அன்னை மரியாள் காதுபடவே இழிவாகவும், குறையாகவும் பேசினர். ஆனால், அன்னை மரியாள் தனது விசுவாசத்தைச் சிறிதும் இழக்கவில்லை.
யார் மீது நம்பிக்கை வைத்திருந்தாரோ அவர் சிலுவையில் அறையப்பட்டுத் தனது உயிருக்காகத் துடித்துக்கொண்டிருந்தபோதிலும், இறுதியாக இறந்தபோதிலும் அன்னை மரியாள் தனது விசுவாசத்தை இழக்கவில்லை. கடவுளின் வார்த்தை நிறைவேறும் என்று உறுதியாக நம்புகிறாள். ஒன்றுமற்றதிலிருந்து இந்த உலகத்தைப் படைத்த கடவுளால், இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்க முடிந்த கடவுளின் ஆற்றலால் அனைத்துமே நடக்கும் என்று அன்னை மரியாள் நம்பினாள். அதனால்தான் விசுவாசத்தின் தாயாக இன்று உயர்ந்து நிற்கிறாள்.
அவரது வழியில்
ஆண்டவரை நமக்காகச் சுமந்து அளித்த அன்னையிடத்தில் இருந்த அந்த விசுவாசம் அப்படியே நம்மிடமும் இருக்க வேண்டும். அவளது அடிச்சுவட்டில் அவளது விசுவாசப் பண்பை நாமும் நமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்வில் நம்பிக்கை இழந்த சூழ்நிலையையும் மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர் என்று கடவுள் மீது நமக்குள்ள விசுவாசத்தை இன்னும் ஆழப்படுத்துவோம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago