அறுபத்து நான்கு வாதங்களை கங்கேச மிச்ரோபாத்யாயர் என்பவர் தமது 'தத்வ சிந்தாமணி'யில் சொல்லியிருக்கிறார். இதுவரை தத்வ விஷயங்களில் மண்டையைக் குழப்பிக்கொண்டதால் இப்போது கொஞ்சம் கதை சொல்கிறேன். கங்கேசருடைய கதைதான்.
கங்கேசர் பூர்வத்தில் மகா அசடாக இருந்தார். அவர் வங்காளத்தில் இருந்தவர். குலீன குலத்தைச் சேர்ந்தவர். குலீனர் என்றால் நல்ல குலத்தில் உண்டானவர்கள் என்று அர்த்தம். குலீனர் ஒருவர் ஐம்பது பேருக்கு மேல் கல்யாணம் பண்ணிக் கொள்வதுமுண்டு. கங்கேச மிச்ரர் ஒரு பெண்ணை மட்டும் கல்யாணம் பண்ணிக்கொண்டு மாமனார் வீட்டிலேயே இருந்தார்.
வங்காளிகள் மத்ஸ்யம் சாப்பிடுவார்கள். வங்காளத்தில் ஆறு மாசம் தேசம் முழுவதும் பிரவாகமாகவே இருக்கும். கறிகாய் போட இடமிருக்காது. அதனால் இந்த மாசங்களில் மத்ஸ்யத்தை அவர்கள் உபயோகப்படுத்துவார்கள். கிழக்கு வங்காள தேசத்தார் அதை ‘ஜல புஷ்பம்' என்றே சொல்லுவார்கள். அதாவது அது வெஜிடேரியன் உணவு என்று அர்த்தம்.
கங்கேசருடைய மாமனார் வீட்டில் அந்த சாமான் சமைப்பது வழக்கம். “மாப்பிள்ளை” என்று மரியாதையாகக் கூப்பிடாமல் கங்கேசரை “கங்கா” என்று எல்லோரும் கூப்பிடுவார்கள். அவர் அசடு என்பதால் அவர் இலையில் எலும்பை மட்டும் பரிமாறுவார்கள். மற்றவர்கள் இலையில் சத்தைப் பரிமாறுவார்கள். பிறகு அவரை எல்லோரும் பரிகாசம் செய்வார்கள்.
அது அவருக்குப் பொறுக்கவில்லை. ஒரு நாள் ஒருவரிடமும் சொல்லாமல் காசிக்குப் போய்விட்டார். அங்கே போய்ப் பத்து வருஷம் படித்தார். வீட்டிலுள்ளவர்கள், அசடு எங்கேயோ போய்விட்டதென்று பேசாமல் இருந்து விட்டார்கள்.
அவர் படித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். எங்கேயோ சுற்றி அலைந்து வந்திருக்கிறது, இன்னமும் அசடாகவே இருக்கும் என்று எல்லோரும் நினைத்தார்கள். வழக்கப்படி அஸ்தியை [மீன் எலும்பை பரிமாறினார்கள். அப்பொழுது அவர் சொன்னார்:
“நாஹம் கங்கா: கிம்து கங்கேச மிச்ர:”
‘நான் கங்கா அல்ல; கங்கேச மிச்ரனாக்கும்' என்று அர்த்தம். ‘அசட்டு கங்காவாக இருந்தால், கங்கையிலேதான் அஸ்தியைக் கரைக்கிறதாலே, எனக்கும் அஸ்திபோடுவது நியாயந்தான். ஆனால் இப்போது அந்த கங்கா பேருக்குப் பின்னாடி ‘மிச்ரா' போட்டுக்கொள்கிற யோக்யதையோடு, படித்துப் பண்டிதனாகவும் வந்திருக்கிறேன்.' என்று ரத்தினச் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டார். வேட்டகத்துக்காரர்களுக்கு அவர் பெருமை தெரிந்தது.
கிளிகளின் ஞானம்
மனுஷப் பெண்கள் மட்டுமல்ல. கிளியிலேகூட பெண்களாக இருக்கப்பட்ட ‘கீராங்கனா'க்களும் சாஸ்திர ஆராய்ச்சி பண்ணினவாம்.
ஒரு வஸ்துவைப் பார்த்தால் அதைப் பற்றிய ஞானம் உண்டாகிறது. சில ஞானங்கள் சரியாய் இருக்கின்றன. சில தப்பாய் இருக்கின்றன. ஸ்படிகத்தைக் கற்கண்டு என்று நினைக்கிறோம். அது தப்பான ஞானம். கற்கண்டைக் கற்கண்டாக நினைப்பது சரியான ஞானம்.
சரியான ஞானத்தை ப்ரமா (prama) என்பார்கள். தப்பான ஞானத்தை ப்ரமா (bhrama) என்று சொல்லுவார்கள். சம்சய ஞானம் என்றும், நிச்சய ஞானம் என்றும் இரண்டு விதம். இது சரியான அறிவா என்ற ஐயத்துடன் கூடியது சம்சய ஞானம். ஐயமில்லாமல் உறுதியுடன் அறிவது நிச்சய ஞானம். சில சமயங்களில் ஒன்று தப்பாக தோன்றினாலும் அப்போதைக்கு நிஜமாகத்தான் தோன்றுகிறது. அப்பொழுது இந்த ஞானம் பிரமாணம்தான் என்று தோன்றும்.
ஸ்படிகக் கற்கண்டு மாதிரி. சில ஞானங்கள் தோன்றும்பொழுதே பொய்யாகத் தோன்றுகின்றன. குளத்திற்குள் தலைகீழாகத் தெரிகிற மரத்தின் பிரதி பிம்பத்தை அறியும்பொழுதே அது நிஜமல்ல, அப்ரமாணம் என்றும் தோன்றுகிறது. ஞானம் வரும்பொழுதே பிரமாணம் என்று தோன்றுவதும் அப்ரமாணம் என்று தோன்றுவதும் ஆக இரண்டு வகை. இந்த இரண்டில் எது சரி என்றுதான் மண்டனர் வீட்டுப் பெண் கிளிகள் வாதம் செய்தனவாம்.
“வாதம்” என்றாலே இந்தக் காலத்தில், தான் சொன்னதே சரியென்று பிடிவாதம் பண்ணுவது என்று தப்பாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வாஸ்தவத்தில் வாதமென்பது நாமும் பேசி எதிராளியையும் பேசவிட்டு இரண்டையும் ஆலோசித்துச் சீர்தூக்கி உண்மையை அறிவதுதான். அநேக இடங்களுக்குப் போய் மண்டனமிச்ரர் போன்றவர்களிடம் ஆசாரியாள் வாதம் செய்தார் என்பது இப்படித்தான்.
மற்றவன் சொல்கிறதையும் கேட்டே அவர் அத்வைதம்தான் சத்தியம் என்று முடிவு பண்ணினார். ஆகையால் வாதம் என்பது exchange of thoughts - பரஸ்பரக் கருத்துப் பரிவர்த்தனைதான், பிடிவாதம் இல்லை. நாம் சொல்வதே சரி என்று முதலிலேயே தீர்மானம் பண்ணிக்கொண்டு அதற்காகவே கட்சி கட்டிக்கொண்டு பேசுவதற்கு “ஜல்பம்” என்று பெயர். “வாதம்” என்று இல்லை.
மூன்றாவதாக இன்னொன்று இருக்கிறது: ஜல்பத்தில் உள்ள மாதிரி தனக்கென்று ஒரு கட்சி இல்லாமல், ஆனாலும் மற்றவர் எந்தக் கட்சியைச் சொன்னாலும் அதை ஆக்ஷேபித்து சண்டை போடுவதுதான் அது. அதற்கு ‘விதண்டை' என்று பெயர். ‘விதண்டாவாதம்' என்று இதிலிருந்துதான் வந்தது.
- தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago