சாயிபாபா அவதரித்த நாளில் சாக்லெட், பிஸ்கட்! நம் சங்கடங்கள் தீர்ப்பார்; கவலைகள் போக்குவார்! 

By வி. ராம்ஜி

பகவான் ஷீர்டி சாயிபாபாவின் அவதார நன்னாளில், சாயிபாபாவுக்கு பிஸ்கட்டுகளும் சாக்லெட்டுகளும் சமர்ப்பிப்போம். பாயசமோ கேசரியோ இனிப்புகள் செய்து அனைவருக்கும் வழங்குவோம். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்துவைப்பார் பாபா. கவலைகளையெல்லாம் போக்கி அருளுவார் சாயிநாதன்.

குருவருள் இருந்தால் திருவருள் நிச்சயம் என்றொரு வாசகம் உண்டு. எந்தவொரு தருணமாக இருந்தாலும் குருவை வழிபடவேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். குருவெனத் திகழ்பவர்களை ஒருபோதும் வணங்காமல் இருக்கக் கூடாது என வலியுறுத்துகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

குருவிடம் வைக்கின்ற கோரிக்கைகள் ஒருபோதும் வீணாகாது என்பது மூத்தோர் வாக்கு. கல்லால மரத்தடியில் அமர்ந்தபடி சனகாதி முனிவர்களுக்கு சிவபெருமானே குருவாக இருந்து அருளினார் என்கிறது புராணம்.

தேவர்களின் குருவான பிரகஸ்பதி, நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, குரு பிரகஸ்பதியாக இருந்து அருள்பாலித்து வருகிறார். நம்மைப் படைத்த பிரம்மாவும் நமக்கு குருவே. ‘குரு பிரம்மா குரு விஷ்ணு’ என்று முதன்மை குருவாக, பிரம்மாவை வணங்குகிறோம்.

இப்படியாகத்தான், பூவுலகில் மகான்களாக எத்தனையோ சித்தபுருஷர்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களை குருவாகவும் ஞானச்சூரியனாகவும் கடவுளின் அவதாரமாகவும் போற்றி வருகிறோம்; வணங்கி வருகிறோம். சதாசர்வ காலமும் அவர்களிடம் பிரார்த்தனை செய்கிறோம். அப்படி கண்கண்ட தெய்வமாக வணங்கப்படுகிறவர்தான் ஷீர்டி சாயிபாபா.

ஷீர்டி சாயிபாபா, மிக உன்னதமான குருநாதர் என்று கொண்டாடிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள். எவருடைய வீட்டில் சாயிபாபாவின் திருநாமம் சொல்லப்படுகிறதோ அந்த வீட்டுக்கு பாபாவின் அருள் கிடைக்கும் என்பது சாயி பக்தர்களின் நம்பிக்கை. கண்கண்ட கடவுளாகவே, சித்த புருஷராகவே, சத்விஷயங்களை அருளும் மகானாகவே வணங்கி அருள் பெறுகிறார்கள் பக்தர்கள்.

குருவுக்கு உகந்த நாள் என்று வியாழக்கிழமையைச் சொல்வார்கள். ஆனாலும் தினமும் குருவை வந்தனம் செய்வது மகோன்னதமானது என்கிறார்கள் சாயி பக்தர்கள். தினமும் சாயிபாபாவை ஒரு பத்துநிமிடம் வணங்கிவிட்டு, அன்றாடப் பணிகளைச் செய்யும் போது, அவர்களின் எல்லா காரியங்களிலும் பாபா உடனிருந்து நிறைவேற்றித் தந்தருள்கிறார் என்பது சாயி பக்தர்களின் நம்பிக்கை!

தினமும் பாபாவின் படத்துக்கோ சிலைக்கோ பூஜை செய்யுங்கள். தீப ஆரத்தி காட்டுங்கள். முன்னதாக, அவருக்கு எதிரே ஒரு பத்துநிமிடமேனும் அமர்ந்து, பாபாவின் மூல மந்திரத்தைச் சொல்லுங்கள். முக்கியமாக இன்றைய நாளில் மறக்காமல் சொல்லுங்கள். இன்று ஏப்ரல் 21ம் தேதி ஷீர்டி சாயிபாபா அவதரித்த தினம்.

அந்த மூல மந்திரம்;

ஓம் ஸாயி ஸாயி ஜெயஜெய ஸாயி.

இந்த ஒற்றை வரி கொண்ட மூல மந்திரத்தை, கண்கள் மூடி ஜபியுங்கள். தினமும் 108 முறை சொல்லுங்கள். சொல்லி முடித்துவிட்டு, பாபாவின் சிலைக்கோ படத்துக்கோ தீபாராதனை காட்டி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் பாயசம், கேசரி என்று ஏதேனும் நைவேத்தியம் செய்யலாம். பாபாவின் பிறந்தநாளில், சாக்லெட்டுகளும் பிஸ்கட்டுகளும் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கும் குழந்தைகளுக்கும் வழங்குவோம்.

நம்மிடம் எது இருக்கிறதோ நம்மால் எது முடிகிறதோ... அவற்றை பாபாவுக்குக் கொடுத்தாலே போதும்... அதை மிகுந்த வாத்ஸல்யத்துடன் ஏற்றுக் கொள்வார். பக்தியே பிரதானம். நம்பிக்கையே அஸ்திவாரம்.

பகவான் ஷீர்டி சாயிபாபா அவதரித்த நாள் இன்று (ஏப்ரல் 21ம் தேதி). இந்த நன்னாளில் பாபாவை வணங்குவோம். சாயிநாதனைப் போற்றுவோம். ஷீர்டி நாயகனை மனதாரப் பிரார்த்திப்போம்!
**************

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE