தெய்வத்தின் குரல்: ஆத்ம சாதனைக்கு தேவையான யோக்யதாம்சம்

By செய்திப்பிரிவு

ஒன்று மறக்கப்படாது. வாஸ்தவமாக, சீரியசாக ஒருத்தன் ஆத்ம சாதனை கிரமத்தை மேற்கொள்ள வேண்டியது மனசின் அழுக்கும், தடுமாற்றமும் தீர்ந்த அப்புறந்தான் என்றே ஆசார்யாள் வைத்திருக்கிறார். அழுக்கையும், தடுமாற்றத்தையும் போக்கும் சாதனங்களான கர்ம, யோக, பக்தி யோகங்களில் தேர்ச்சி பெற்றவனுக்கே சாதனை சதுஷ்ட்யம் கைகூடுகிறது என்று ஆசார்யாள் ‘க்ளியரா'கச் சொல்லியிருக்கிறார்.

தனியாகப் பூஜை என்றில்லாமல், கீதோபதேசப்படி ஸ்வதர்ம கர்மாவை அவனுக்கு அர்ப்பணிப்பதே பக்திதான். ஆசார்யாள் முடிவாகப் பண்ணிய உபதேசத்திலும் ‘கர்மாவை நன்றாக அநுஷ்டித்து அதன் மூலமே ஈச்வர பூஜை பண்ணியதாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்றுதான் சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் அப்படி, செய்யும் காரியமெல்லாம் ஈச்வர ஆராதனை என்ற பாவத்தோடு செய்வது அவ்வளவு சுலபமில்லையாதலால் பக்தி என்று தனியாக அவனையே பிரேமையோடு நினைத்து உபாசிப்பதையும் சொல்லியிருக்கிறார். சித்தத்தைத் துப்புரவு பண்ணக் கர்மா, அதை ஒருமுகப்படுத்த பக்தி என்று வைத்தார். பக்தியைதான் இங்கே ஹரிதோஷணம் என்றது.

ஹரி என்றால் விஷ்ணு ஒருத்தர்தான் என்ற அர்த்தமில்லை. 'ஹரி:ஒம்' என்றே சொல்வது வழக்கம். இங்கே ஹரி என்றால் எல்லா தெய்வத்தையும் குறிக்கும் ஸகுண ப்ரஹ்மம். அப்படித்தான் இங்கேயும் அர்த்தம். 'தோஷணம்' என்றால் திருப்திபடுத்துவது, ப்ரீதி உண்டாக்குவது. நாம் பகவானிடம் அன்போடு ப்ரீதி பண்ணினால் அவன் குழந்தை நல்ல வழிக்கு வருகிறான்' என்று திருப்தியும் ப்ரீதியும் அடைகிறான்.

ஆகையால் ஹரி தோஷணம் என்றால் பக்தி யோகம். ஸ்வதர்மம், ஹரி தோஷணம் இவற்றோடு 'தபஸா' என்றும் சொல்லியிருக்கிறார். தபஸ் என்று மூன்றாவதான ஒன்றாக அதை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஸ்வதர்மம், ஹரி தோஷணம் இரண்டையுமே தபஸ் போல மெய்வருத்தம் பாராமல் நல்ல ஈடுபட்டோடு செய்ய வேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்படிச் செய்யும் மனிதர்களுக்குத்தான் ‘ஸாதநம் சதுஷ்டயம் ப்ரபவேத்', “ஸாதன சதுஷ்டயம் என்பது கைகூடும்; ஏற்கத்தக்கது'. ஸ்கூல் படிப்பு முடித்தவனுக்குத்தான் காலேஜ் என்கிற மாதிரி, முதலில் மனசை சுத்தமாக்கிக்கொள். ஒரே லக்ஷயத்தில் நிற்கும்படியாக நிலைப்படுத்திக் கொள். அதில் முதலில் பாஸ் பண்ணிவிட்டு அப்புறம் என்னுடைய காலேஜ் வா, அட்மிஷன் தருகிறேன். அப்போது (ஆத்ம) விசார மார்க்கத்தில் அடியெடுத்து வைக்கலாம். அதற்கும் அப்புறம் ஆழ்ந்து விசாரம் பண்ணலாம்.

விசாரம் அநுபவமாவது இன்னமும் அப்புறம். அதெல்லாம் காலேஜ் படிப்பை முடித்து எம்.ஏ.விலிருந்து பி.ஹெச்.டி போய்தான். அதாவது சந்நியாசம் வாங்கிக்கொண்ட பிறகுதான்' என்றே ஆசார்யாள் சொல்கிறார். குரு உபதேசத்தில் மனசு டகாலென்று நின்று, சாஷாத்காரம் பளீரென்று சித்தித்துவிடும்.

அத்வைத சாதனைக்கு எல்லாருமே அதிகாரிகள்தான். யோக்யதாம்சம் என்று எதுவுமே வேண்டாம். தனக்கே ரொம்ப ரொம்ப சொந்தமான தன்னையே, தன் உண்மை நிலையையேதானே தெரிந்துகொள்ளப் போகிறான்? தான் தானாவதற்கு என்ன யோக்யதாம்சம் வேணும்? தன்னைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிஜமான தாபம் ஒன்றே போதும். சில பேர் நிஜமாகவே அப்படித் தெரிந்துகொண்ட ஞானிகளாகவும் இருக்கலாம். அவர்களை ஆச்ரயித்தவர்களிலும் சிறு வயசில், க்ருஹஸ்தாச்ரமத்தில், பிஸினஸ் மாதிரிக் காரியத்தில் இருந்த வெள்ளைக்காரர்கள் முதலான இரண்டொருத்தர் கூட ஒரே தாபத்தோடு, ஒரு முனைப்பாக ஆத்ம விசாரம் பண்ணி ஞானத் தெளிவு அடைந்தும் இருக்கலாம்.

ரொம்பக் குறைச்சலாகத் தானிருக்கும். வேதாந்த விஷயமாக நிறையப் படித்ததாலும், நல்ல புத்திசக்தியுள்ளதாலும் ஞானத்தைப் பற்றி, ஆத்மாவைப் பற்றி நன்றாகச் சிந்தனையைப் படரவிட்டு அநேகம் கருத்துக்களை அழகாக நிர்மாணித்து எழுதலாம். பேசலாம். பேப்பர் ப்ரெஸன்ட் பண்ணுவது, ஸ்ப்மிட் பண்ணுவது எல்லாம் செய்யலாம். அவர்கள் சொல்கிற சமாசாரங்களையும், சொல்லியிருக்கும் விதத்தையும் பார்த்தால் மற்றவர்களுக்கு பிரமிப்பாக அவர்கள் சாக்ஷத்காரமே பெற்றவர்கள் என்று நினைக்கும்படிதான் இருக்கும். ஆனாலும் வாஸ்தவத்தில் அப்படி எழுதி, பேசிப் பண்ணுவர்களில் ஆயிரத்தில் ஒருத்தர்தான் கண்டவராக இருப்பார். அந்தக் கண்டவரையோ பொதுவாக ‘விண்டிலர்' என்கிறார்கள். அதாவது ஒன்றும் சொல்லாமல் தக்ஷிணாமூர்த்தியாக இருப்பார்களென்று சொல்கிறார்கள்.

- தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்