விவிலிய வழிகாட்டி: கடவுளை வரவேற்கும் தகுதி இருக்கிறதா?

By அனிதா அசிசி

உலகைத் தன் இன்னுயிரால் மீட்டு ரட்சிக்க, கடவுள் மனிதனாகப் பிறந்த மாதத்தில் நுழைய இருக்கிறோம். ஆம்! கிறிஸ்து பிறப்பின் திருவருகைக்காலம் அருகில் இருக்கிறது. ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்து, வளர்ந்து, 10 வயதில் தேவாலய மறைநூல் அறிஞர்களிடம் விவாதித்துப் பெற்றோரை ஆச்சரியப்படுத்தினார். ஓர் இளைஞராகப் பெற்றோருக்குப் பணிவிடைகள் செய்தார்.

தனது தந்தைக்குத் தச்சுப் பணிகளில் கடமையாற்றினார். பிறகு தனது 29-ம் வயது முதல், பரலோகத் தந்தையாகிய கடவுளுக்கு உகந்த மனிதர்களாக எப்படி வாழ்வது என்பதை போதிக்கத் தொடங்கினார். பாவ வாழ்வை விட்டுவிட்டு மனந்திரும்ப வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். ஒடுக்கப்பட்ட மக்களைத் தேற்றினார். பழமைவாதத்தைக் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்தார். அத்துடன் தாம் கடவுளின் மகன் என்பதை நிரூபிக்கும் விதமாக நோயுள்ளவர்களை குணமாக்கினார்.

இதனால் மத அதிகார வர்க்கத்தின் சதிக்கு ஆளாகி சிலுவை மரணத்துக்குத் தீர்ப்பளிக்கப்பட்டார். மரித்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்தார். தம் சீடர்களுக்குத் தொடர்ந்து காட்சியளித்தார். தனது வழியில் அவர்கள் பணியை தொடர சக்தியளித்தார். பின்னர் விண்ணகம் எய்தினார். இதுதான் இயேசுவின் பூவுலக வாழ்க்கை.

இந்த வாழ்வில் “நான் மீண்டும் பூமிக்கு வருவேன்” என்பதைத் தெளிவாகச் சொல்லிச் சென்றிருக்கிறார் இயேசு. அப்படி வரும்போது அதுவே உலகின் இறுதியாக இருக்கும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார். அவர் திரும்பவும் வரும்போது நாம் அவரை வரவேற்கும் தகுதியுடன் இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். தனது உவமை ஒன்றின் மூலம் தாம் கைதுசெய்யப்படும் சில தினங்களுக்கு முன் போதித்திருக்கிறார்.

மிக நீண்ட உவமை

மத்தேயு புத்தகம் 25-வது அதிகாரம், 31 முதல் 46 வரையிலான இறைவசனங்கள் இயேசுவின் இரண்டாம் வருகையை உறுதிசெய்யும் அதேநேரம், அவரை வரவேற்க நம்மை எவ்வாறு தகுதியாக்கிக்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத்தருகின்றன. அந்த வசனங்களைக் காண்போம்.

இயேசு தம் சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தபோது கூறியது: “வானதூதர் அனைவரும் புடைசூழ, மானிடமகன் மாட்சியுடன் வருவார். அப்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உங்களது உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் `ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், `மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். சாத்தானுக்கும் அவனது தூதர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை' என்பார்.

அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், `மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் முடிவில்லா நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.”(மத்தேயு 25: 31- 46). என்றார்.

நம்மிடம் எதிர்பார்ப்பது இவ்வளவே

இயேசு போதித்த உவமைகளில், நீண்ட விளக்கத்துடன் போதிக்கப்பட்ட ஓரே உவமை இதுதான். சக மனித தேவைகளுக்கு நாம் எவ்வாறு பங்களிக்கிறோம் என்ற கேள்வியை இந்த உவமை நம்மை நோக்கி எழுப்புகிறது. நான் திரும்பவும் வரும்போது உங்களிடம் எதிர்பார்ப்பது நாம் தகுதிக்கு ஏற்ப செய்யக்கூடிய மிகச் சாதாரணச் செயல்களைத்தான். இந்த உவமையில் இயேசுவின் வலது பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு, உண்மையில் தாங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என்பது தெரியவில்லை, தாங்கள் செய்த சிறிய செயல்கள் எத்தனை மகத்துவமானவை என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அதைத்தான் கடவுள் பாராட்டுகிறார்.

இந்த நற்செய்தியைக்கேட்டு மனமாற்றம் அடைந்தவர்கள் இரண்டு பெரிய புனிதர்கள். புனித பிரான்சிஸ் அசிசி மற்றும் புனித மார்ட்டின். இரண்டுபேருமே செல்வந்தர்களாக, அதிகாரம் மிகுந்தவர்களாக இருந்தபோதிலும், இயேசுவின் வார்த்தை அவர்களைத் தொட்டு, அவர்கள் வாழ்வை மாற்றியது. தங்கள் செல்வத்தையும் அறிவையும் கொண்டு சக மனிதர்களைக் கடைத்தேற்றினார்கள்.

நாம் செய்ய முடியாத கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. நாம் செய்ய முடிகின்றவற்றைக் கூடச் செய்யவிடாத சாத்தானின் பிள்ளைகளாக நாம் மாறிவிடும்போது அவர் நம்மை இடப்புறத்தில் நிறுத்திக் கைவிடுவார். எனவே சக மனிதருக்குக் கைகொடுக்கவும் கைதூக்கிவிடவும் மறக்காதீர்கள். இப்போது ஆண்டவரை வரவேற்றும் தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்