போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்த பகவான், தான் பெற்ற இந்த அரிய ஞானத்தை அனைவரும் பெற்றுப் பயனுற வேண்டும் என எண்ணினார். விண்ணுலகில் வசிக்கும் தேவர்களுக்கும் இதனைப் போதிக்கும் எண்ணத்துடன் அங்குச் சென்றார் ஞானபுத்தர்.
குறிப்பாக, தான் பிறந்தபோதே இப்பூவுலக வாழ்வை நீத்த தனது தாயார் மாயா தேவிக்கு இதுகுறித்து எடுத்துரைப்பது அவரது முக்கிய நோக்கமாகும். தனது அடுத்த பிறவியில் ஒரு தேவியாக உருவெடுத்து, 33-வது மேலுலகில் வசித்து வந்தாராம் அன்னை மாயா தேவி. தனது தாயாருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவருக்கு ஞானபோதனையை வழங்கி, முக்தி பெறுவதற்கான மார்க்கத்தைச் சுட்டிக்காட்டுவதற்காகத் தமது நாற்பத்தியொன்றாவது வயதில் புத்தர் விண்ணுலகத்துக்குப் பயணப்பட்டார் என்று கூறப்படுகிறது. சரிபுத்ரா எனும் முக்கிய சீடரும், கோஷயபா என்ற பெயருள்ள மற்றொரு சீடரும் அவருடன் மேலுலகம் சென்றனர்.
மேலுலகில் தனது ஞானப் பிரசாரத்துக்குப் பிறகு அங்குள்ள கற்பகதரு மரத்தடியில் (திபெத் மொழியில் ‘ப்க்ஸம் ஜுன்ஷிங்’) தவத்தில் இறங்கிவிட்டார் புத்தர். அந்தக் காலகட்டத்தில் இம்மண்ணுலகில் அவருடைய சார்பாக அவருடைய பிரதான சீடர் மொகல்லானா தர்ம காரியங்களைக் கவனித்து வந்தார். புத்த பகவானைத் தரிசிக்க இயலாத சீடர்களும் பக்தர்களும் பெரும் வேதனை அடைந்து, மொகல்லானாவிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவரும் மேலுலகம் சென்று, நீண்ட விவாதத்துக்குப் பிறகு பூமிக்குத் திரும்பிவரப் பகவானைச் சம்மதிக்கவைத்தார்.
அத்திமலர்கள் பூத்திருந்த ஷங்கா ஷாஹி
இந்திரனும் பிரம்மனும் அவரது இருபுறம் உடன்வர, ஆயிரம் புனிதக் கலசங்களை ஏந்தித் தேவர்களும் தேவியரும் புத்த பகவானுடன் பூலோகம்வரை கூடவே வந்து மனதின்றி வழியனுப்பி வைத்தனர். அவர்கள் அவ்வாறு வந்திறங்கிய புனித இடம் உத்திரப் பிரதேச மாநிலத்தின் ஈடா மாவட்டத்திலுள்ள ஷங்கா ஷாஹி கிராமம் என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு அத்தி மலர்கள் ஏராளமாகப் பூத்திருந்ததாம்.
இவர்கள் அனைவரும் விண்ணுலகிலிருந்து மண்ணுலகம் இறங்கி வருவதற்கு வசதியாக விலைமதிப்பற்ற உலோகங்களால் ஆன மூன்றடுக்கு ஏணி ஒன்றை விஷ்வகர்மா உருவாக்கி அளித்தார். விஷ்வகர்மாவின் பணியைப் பாராட்டும் விதமாகப் பாதி வழிவரை ஏணியில் இறங்கி வந்த பகவான் புத்தர், மீதித் தொலைவை அதில் கால் வைக்காமலேயே கடந்தார். தம்மீது பக்தர்களுக்கு உள்ள நம்பிக்கையை உறுதி செய்யும்விதமாக இவ்வாறு அதிசயம் நிகழ்த்தினார்.
இவ்வாறு பகவான் புத்தர் விண்ணுலகில் இருந்து பூவுலகுக்குத் திரும்பிய நன்நாள்தான் ‘ல பா துய்-சென்’ என்று மஹாயனா புத்தமதப் பிரிவில் அனுசரிக்கப்படுகிறது. ல=தேவா, பாப்=இறங்கி வருதல், துய்-சென்=நன்நாள் என்று பொருத்தமாகப் பொருள்படுகிறது. அவர்களது திபெத்திய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதத்தின் 22-வது நாள் இந்த நன்நாளாகும்.
இச்செயல் பகவான் புத்தரின் எட்டு சாதனை நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அன்று மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நல்லதோ, கெட்டதோ பன்மடங்காகப் பிரதிபலிக்கும் என்று நம்பிக்கை உள்ளது. எனவே புத்தரின் வழிநடப்போர் அன்றைய தினம் நற்செயல்களில் ஈடுபடுகின்றனர். புத்த மடாலயங்களுக்குச் சென்று வெண்ணெய் தீபங்கள் ஏற்றி, இந்தப் பருவத்தில் விளையும் பொருட்களைப் புத்தரின் காலடியில் அர்ப்பணித்து வழிபடுகின்றனர்.
லபாப்துய்சென் திருநாள் இவ்வாண்டு நவம்பர் 3-ம் தேதியன்று மஹாயனா புத்தப் பிரிவினரால் அனுசரிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago