மாசி கடைசி வெள்ளியில் அம்பிகையின் தரிசனம்; ராகுகாலத்தில் துர்கைக்கு எலுமிச்சை தீபம்

By வி. ராம்ஜி

மாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் அம்பிகையைத் தரிசித்துப் பிரார்த்திப்போம். ராகுகாலத்தில் துர்கையை வழிபட்டு, எலுமிச்சை தீபமேற்றி வேண்டுவோம். கேட்டதையெல்லாம் தந்தருளுவாள் துர்காதேவி.

மாசி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாதத்தில்தான் மகம் நட்சத்திர நாளில், மாசி மகம் என்று கொண்டாடப்படுகிறது. மாசி மகம் என்பதுதான் கும்பமேளாவாகவும் பெரும்பாலான ஆலயங்களில் தீர்த்தவாரி திருவிழாவாகவும் கோலாகலமாக நடைபெறுகிறது.

மாசித் திருவிழா, மாசிப் பெருவிழா, தீர்த்தவாரித் திருவிழா என்றெல்லாம் நடைபெறும். மாசி மாதத்தில் புனித நீராடுவது மிகுந்த புண்ணியம் தரும் என்பார்கள். மாசி மாதத்தில் வருகிற சிவராத்திரி மாசி மகா சிவராத்திரி என்று விரத நாளாகவும் சிவ தரிசனத்துக்கு உரிய நாளாகவும் போற்றப்படுகிறது.

மாசி மாதத்தில் காரடையான் நோன்பு எனும் வைபவம் முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்கள் கொண்டாடும் பண்டிகை இது. கணவன்மார்களின் தீர்க்க ஆயுளுக்கான விரதம் இது. அதேபோல், மாசி மாத செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் விசேஷமானவை.

ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியும் சிறப்பானவைதான். அம்பாள் வழிபாட்டுக்கு உகந்தவைதான். என்றாலும் மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியவை.

செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3 முதல் 4.30 மணி வரை. அதேபோல் வெள்ளிக்கிழமை அன்று ராகுகாலம் காலை 10.30 முதல் 12 மணி வரை. ராகுகால வேளையில், துர்கையை வணங்குவதும் ஆராதிப்பதும் வலிமையைத் தரும். எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கும் என்பது ஐதீகம்.

மாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 12ம் தேதி, காலை 10.30 முதல் 12 மணி வரையிலான நேரத்தில், அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று துர்கையின் சந்நிதியில் மனதார நின்று வேண்டிக் கொள்வோம். துர்காதேவிக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவோம். நம் இன்னல்களையெல்லாம் தீர்த்துவைப்பாள் தேவி.

துர்கை என்றாலே துக்கங்களையெல்லாம் போக்குபவள் என்று அர்த்தம். தீயசக்திகளையெல்லாம் அழிப்பவள் என்று பொருள். மாசி கடைசி வெள்ளிக்கிழமையில், துர்கையை வணங்குவோம். எலுமிச்சை தீபமேற்றுவோம். சகல சம்பத்துகளையும் தந்தருளும் துர்காஷ்டகம் பாராயணம் செய்து தேவியை ஆராதிப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE