ஞாயிற்றுக்கிழமைகளில்... ஆதித்ய ஹ்ருதயம் சொல்வோம்!

By வி. ராம்ஜி

சூரிய பகவானை மனதார வேண்டுவோம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து, சூரிய பகவானுக்கு உரிய மந்திரங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்வோம். ஆதித்ய ஹ்ருத்யம் பாராயணம் செய்து வேண்டிக்கொண்டால், கிரக தோஷங்கள் மொத்தமும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமானவர் சூரிய பகவான். எல்லா உயிர்களுக்கும் சக்தியை வழங்குபவர் இவரே. நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, சூரியனாக, சூரிய பகவானாக அமைந்திருக்கிறார்.

சூரியனை வழிபடும் முறையை செளமாரம் என்று போற்றுகிறது சாஸ்திரம். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவாலயத்தில் இருக்கும் துர்கையை, சிவ துர்கை என்றும் திருமால் கோயிலில் இருக்கும் துர்கையை விஷ்ணு துர்கை என்றும் சொல்லுவது போல், சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைக்கிறது புராணம்.

சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன், ‘கிரகபதம்’ எனும் பேறு பெற்றார். ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றார் என்கிறது சூரிய புராணம்.

சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பனிரெண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் தமிழ் மாதப்பிறப்பு நிகழ்கிறது.

சூரியன் பச்சை நிறமுடைய ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன் எனத் தெரிவிக்கிறது புராணம். இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

சூரியனின் ரதம் பொன் மயமானது என வர்ணிக்கிறது சூர்ய புராணம். அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும் மூன்று நாபிகளும் உண்டு. மூன்று நாபிகள் என்பவை முக்காலத்தையும் குறிக்கின்றன. சூரிய சக்கரத்திலுள்ள ஆறு6 கட்டைகளும், ஆறு ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயனம் மற்றும் தட்சிணாயனத்தைக் குறிக்கிறது. சூரிய பகவான், தன்னுடைய தேரில் நான்கு பட்டணங்களைச் சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’. இது சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். அன்றையதினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒருசேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன என விளக்குகிறது புராணம்.

இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு. பொதுவாகவே, தினமும் சூரியோதயத்திற்கு முன்னதாக எழுந்துவிடவேண்டும். சூரியன் உதயமாகிற தருணத்தில் சூரிய பகவானை நமஸ்காரம் செய்யவேண்டும்.

கணவனை இழந்தவர்கள் ரத சப்தமி விரதத்தை கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரதசப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்யவேண்டும்.

முக்கியமாக, சூரிய பகவானை தினமும் வணங்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால், சூரிய பகவானின் அருளைப் பெறலாம். அதேபோல்,மாசி மாதம் என்பதால், காவிரியில் நீராடிவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என எடுத்துரைக்கிறது சாஸ்திரம்.

ஞாயிற்றுக்கிழமைகளில், வீட்டு வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து, சூரிய பகவானை வேண்டிக்கொண்டால், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம், கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்