பிரிந்த கணவன் மனைவியை ஒன்றுசேர்க்கும் திருப்பாற்கடல் பெருமாள்! 

By வி. ராம்ஜி

தகுதியும் திறமையும் இல்லாதவர்களுக்குக்கூட, கர்வம் தலைவிரித்தாடுகிறது. தனக்கு எந்தத் திறனும் இல்லை என்பது எவருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று இன்னும் அதீதக் கர்வத்துடன் ஆணவத்துடன் திரிகின்றனர் பலரும்! அப்படியிருக்க... உலகையே படைத்த பிரம்மாவுக்கு ஆணவம் வருவதில் ஆச்சரியம் எதற்கு?

திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து வந்தவர். படைப்புக்கு அதிபதி என்று பெருமையுடன் திகழும் பிரம்மாவுக்கு, ஆணவம் தலை தூக்கியது. ஆனால், அந்த ஆணவம்தான் திருமாலிடம் இருந்து சற்றே அவரைப் பிரித்து வைத்தது.

கர்வத்துடன் நாம் இருந்தால் அது வெறும் அலட்டல். ஆனால் இறைவனின் கர்வத்தில், உலகத்தின் மொத்த உயிர்களுக்குமான பாடம் அரங்கேறும் என்று விளக்குகிறது புராணம். இறைவன் நடத்துகிற விளையாட்டுகள் நடந்தேறும். ஒருகட்டத்தில், உண்மையை உணர்ந்து கொண்ட ஸ்ரீபிரம்மா, தற்போதைய காஞ்சியம்பதிக்கு வந்து திருமாலை மனதில் கொண்டு, மிகப் பிரமாண்டமான யாகம் ஒன்றை நடத்துவது என தீர்மானித்தார்.
யாகமோ பூஜையோ, ஹோமமோ வழிபாடோ... மனைவியின் துணை இல்லாமல், அவர் அருகில் இல்லாமல் செய்யக் கூடாது என்றும் அப்படிச் செய்தால் அதை முழுமையாக இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம். மனைவியை அருகில் வைத்துக் கொண்டு யாகமும் பூஜையும் செய்வதுதான் மரபு. சடங்கு. சம்பிரதாயம். இவை இறைவனுக்கும் பொருந்தும். எனவே, ஸ்ரீசரஸ்வதி தேவியை யாகத்துக்கு வரும்படி அழைத்தார் பிரம்மா. ‘கர்வத்துடன் இருப்பது கணவரேயானாலும் மன்னிக்க மாட்டேன்’ என்று சொல்லி, வர மறுத்துவிட்டாள் சரஸ்வதிதேவி.

உடனே, ஸ்ரீசாவித்திரியையும் ஸ்ரீகாயத்ரியையும் அழைத்துக் கொண்டு, யாகத்துக்குப் புறப்பட்டார் பிரம்மா. இதில் ஆவேசமானாள் சரஸ்வதி தேவி. அவளும் பூமிக்கு வந்தாள். நதியாக உருவெடுத்தாள். பிரவாகமெடுத்தாள். அந்தப் பிரவாகத்தில், ஆக்ரோஷமும் கோபமும் வெளிப்பட்டது. யாகம் நடைபெறும் இடத்தையே தண்ணீரில் மூழ்கச் செய்வது எனத் திட்டமிட்டாள். அது மட்டுமே அவளின் குறிக்கோளாக இருந்தது. பூமிக்கு வந்தவள், நதியானாள். கடும் உக்கிரத்துடன் மிக வேகமாகப் பாய்ந்து வந்தாள். இதனால், அந்த நதிக்கு, வேகம்வேகமாக வந்த நதிக்கு வேகவதி எனப் பெயர் அமைந்தது என்கிறது புராணம்.

மனிதர்கள்தான் இனம் பார்ப்பார்கள். குணம் பார்ப்பார்கள். குலம் பார்ப்பார்கள். எந்தப் பாகுபாடுகளும் இன்றி, ஆட்கொள்பவன் இறைவன் மட்டுமே! ஆகவே ஸ்ரீபிரம்மாவின் யாகத்தையும், அதனைக் கலைக்க ஸ்ரீசரஸ்வதிதேவி, நதியாக உருவெடுத்து வந்திருப்பதையும் அறிந்த திருமால், தன் பக்தனுக்கு வந்த சோதனையை முறியடிக்கத் திருவுளம் கொண்டார். யாகம் நடைபெறும் இடத்தை நோக்கி, சீறிப் பாய்ந்தபடி வேக வேகமாக வந்து கொண்டிருந்த வேகவதி நதிக்கு முன்னே... தன் ஆதிசேஷனின் பிரமாண்டமான திருவுருவத்தை அப்படியே அணை போலாக்கினார். ஆதிசேஷன் மீது மிக ஒய்யாரமாகச் சயனித்திருந்தார் திருமால். திருப்பாற்கடலில் சயனித்திருப்பது போலவே எதிரில் வீற்றிருக்கும் பிரமாண்ட ஆதிசேஷனையும் பரம்பொருள் திருமாலையும் கடந்து வேகவதியால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அவளின் வேகம் வேதப்பரம்பொருளிடம் செல்லுபடியாகவில்லை.

தன் தவற்றை உணர்ந்தாள் சரஸ்வதிதேவி. கணவரிடமும் கடவுளிடமும் மானசீகமாக மன்னிப்பு வேண்டினாள். திருமாலும் ஸ்ரீபிரம்மனுக்குத் திருக்காட்சி தந்தார். அவரிடம், ‘நானும் கர்வம் தொலைத்தேன். கர்வமும் செருக்கும் இருந்தால், மனைவி கூட ஆதரிக்க மாட்டாள் என்பதை உணர்ந்து தெளிந்தேன். எனக்கு அருளியது போல், மனிதர்கள் அனைவருக்கும் இந்த க்ஷேத்திரத்தில் இருந்து அருள்பாலியுங்கள் சுவாமி’ என வேண்டினார் பிரம்மா. அதை ஏற்று, இன்றளவும் அந்தத் திருவிடத்தில் இருந்தபடி, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்துகொண்டிருக்கிறார் பரம்பொருள். இவர் கோயில் கொண்டிருக்கும் ஊரின் பெயர்... திருப்பாற்கடல். இங்கே உள்ள பெருமாளின் திருநாமம் - ஸ்ரீரங்கநாத பெருமாள். ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் எனும் திருநாமமும் உண்டு.

சென்னை -வேலூர் சாலையில் சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாற்கடல். வேகவதி ஆற்றின் வேகத்தைத் தடுத்து நிறுத்த திருப்பாற்கடலில் இருப்பது போலவே ஆதிசேஷன் மீது சயனித்த திருக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால், ஊரின் பெயர் திருப்பாற்கடல் என்றே அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். தீர்த்தமும் சரஸ்வதி தீர்த்தம் என்றே போற்றப்படுகிறது.

திருப்பாற்கடலுக்கு வந்து இங்கே அருள்பாலிக்கும் ஸ்ரீரங்கநாத பெருமாளை, பிரசன்ன வேங்கடேச பெருமாளை கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளுவார் பெருமாள். இல்லத்தில் நிம்மதியைத் தருவார். கணவன் மனைவி இடையே ஒற்றுமையை ஏற்படுத்தித் தந்தருளுவார்; பிரிந்த தம்பதியும் ஒன்றுசேருவார்கள் என்பது ஐதீகம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்