ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி

By சாளை பஷீர்

அந்த மனிதருக்கு வயது 65. நல்ல உடல் நலம். ஒரே ஒரு மகன். அவன் படித்து நல்ல நிலையில் இருக்கிறான். 20 வருடத்திற்கு முன்னரே அவரது வங்கி வைப்புத்தொகை 10 லட்சங்கள். இன்னும் நல்ல முறையில் வணிகம் செய்து கொண்டுதான் இருக்கிறார். எப்போது சந்தித்தாலும் எப்படி இருக்கிறீர்கள்? என்ற என் கேள்விக்கு சோர்வான முகத்துடன் ‘ஒண்ணும் இல்லப்பா’ என உதட்டை பிதுக்கிக் கொண்டே பதில் சொல்வார்.

பொதுவாக நமது வாழ்க்கையில் நாம் எத்தனை பேறுகளைப் பெற்றிருந்தாலும், பெரும்பாலானவர்களுக்குச் சலித்த மன நிலையுடன்தான் ஒவ்வொரு நாளும் கழிகின்றது.

இந்தச் சலிப்பு மன நிலையானது பல சமயம் பேராசையாகவும் , விரக்தியாகவும் இன்னும் பல எதிர்மறை எண்ணங்களாகவும் செயல்களாகவும் வெளிப்பட்டு சமூகத்தைச் சீரழிக்கிறது.

வாழ்வின் ஆசைகளையும் தேவைகளையும் நிறைவு செய்வற்காக மனிதர்கள் ஓடும் முடிவற்ற ஓட்டத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க அகிலங்களை படைத்த இறைவன் செய்த ஏற்பாடுகளில் ஒன்றுதான் நோன்பாகும்.

நோன்பின் மூலமாக மறுவுலகில் மன மகிழ்வான கூலி என்பதோடு இறைவன் நிறுத்திடவில்லை. அவற்றின் வாயிலாக ஏராளமான இவ்வுலகப் பயனையும் மனித குலத்திற்கு அள்ளித்தருகிறான் இறைவன். நோன்பாளியான மனிதர் ஒருவர் உண்ணுதல் , பருகுதல் , உடல் வேட்கைகள் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். அந்த மனிதர் இவற்றிலிருந்து உண்மையாகவே விலகி இருக்கின்றாரா என்பதை இறைவனைத்தவிர யாரும் கண்காணிக்கப் போவதில்லை. இதன் மூலம் அந்த மனிதரின் மனசாட்சியானது தூய்மைப்படுத்தப்படுகிறது. மனிதன் தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்ளும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படுகிறது.

உணவும் பானமும் வாழ்க்கைத் துணைவரும் மனிதரின் முழு முதல் உரிமையாகும். நோன்பின் பகல் காலங்களில் இவற்றை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று வரும்போது இந்த மூன்றின் மீதான மனிதரின் தனி உரிமை என்பது இல்லை என்று ஆகின்றது.

இதன் உண்மையான முழு முதல் உரிமையாளன் இறைவன் ஒருவனே. இவற்றின் மீதான மனிதருக்குள்ள உரிமையெல்லாம் தற்காலிகமானதே என்பதும் நிறுவப்படுகின்றது.

அன்றாட வாழ்வில் மனிதருக்குள்ள பங்கிற்கே இதுதான் நிலை எனும்போது உலகின் வளங்களைச் சுரண்டும் பேரவாவிற்கும் பெருந் திட்டங்களுக்குமான அரிச்சுவடி ஓசையின்றி கலைக்கப்படுகின்றது.

குப்பையில் உணவைத் தேடும் பிச்சைக்காரர்கள் , குடி நீரை தேடி பல மைல் தூரம் அலைவோர், முதிர் கன்னிகள், வாழ்க்கை துணையை இழந்த முதியவர்கள் போன்ற காட்சிகளை எவ்வித உறுத்தலுமின்றி நாம் அன்றாடம் கடந்து செல்கின்றோம்.

நோன்போ அவற்றை அனைவருக்குமான கட்டாய அனுபவமாக மாற்றுதன் மூலம் சக மனிதரின் துயர் துடைப்பதை இறை வணக்கத்தின் இன்றியமையாத பக்கமாக உருவாக்குகின்றது

அன்றாடம் எவ்வித சிரமுமின்றி நாம் களிக்கும் வாழ்க்கையானது உலகில் எத்தனையோ பேருக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. என்ற அப்பட்டமான உண்மையை நோன்பானது நமக்கு உணரச்செய்வதோடு நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதையும் புரிய வைக்கும்.

பல வித வண்ணக் கோலங்களுடனும் ஈர்ப்புகளுடனும் நம்முன் திறந்து விடப்படும் ஒரு நாளின் பகல் பொழுது என்ற வாழ்க்கைத் திடலில் மூச்சிரைக்கும்படியான ஒரு ஓட்டத்தை ஓடியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் நம் முதுகின் மீது சுமையாய் கனக்கின்றது.

நோன்பின் பகல் பொழுதுகளில் உயிர் வாழ்தலின் அத்தியாவசியத் தேவைகளைக்கூடத் தவிர்க்கும்போது குடும்ப வாழ்விற்குள்ளாகவே ஒரு துறவறப் பட்டறிவு வாய்க்கின்றது. அது நீர்த்திரளின் மேல் மிதக்கும் நெய்ப் படலம் போல வாழ்வை மாற்றுகின்றது .

நம்முடைய சொந்த வாழ்க்கையை நாமே விலகி நின்று பார்வையாளர்களைப்போலப் பார்க்க முடிகின்றது . இதன் மூலம் நம் வாழ்வின் மீது கவிழ்ந்துள்ள ஆடம்பரங்களின் பட்டியல் நம் புலன்களுக்கு மெல்ல மெல்லத் தட்டுப்படத் தொடங்குகிறது.

மொத்தத்தில் நோன்பானது மனிதனுக்குள் தொலைந்து போன இறைத்தன்மையை மீட்டெடுக்கும் ஒரு ஆன்மிகப் பயிற்சி. குணங்களிலும் நடத்தைகளிலும் மாற்றங்களை கொண்டு வராத நோன்பு என்பது பசியும் , தாகமும் நிரம்பிய வெறும் சடங்கின் தொகுப்பாக மட்டுமே மிஞ்சும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

53 mins ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்