எட்டெழுத்து மந்திரக் கோயில்;  திருக்கோஷ்டியூருக்கு வந்தாலே புண்ணியம்!  

By வி. ராம்ஜி

உலகிலேயே மிக ஆபத்தானது கர்வம்தான். ஆணவம் இருக்குமிடத்தில் செருக்கும் திமிரும் குடிகொண்டிருக்கும். கர்வத்தையும் ஆணவத்தையும் செருக்கையும் வெளிப்படுத்திவிடுகிற ஒற்றைச் சொல்... ‘நான்’. ‘நான் செய்தேன்’, ‘நான் காரணம்’ என்று எல்லா இடங்களிலும் சூழலிலும் ‘நான்’ என்பதைச் சொல்லிக்கொண்டிருப்பதில் இருந்து விலகவேண்டும். அந்த வார்த்தையை முற்றிலுமாக அகற்றிவிட வேண்டும். ‘நான்’ என்று சொன்ன ஒரே வார்த்தைக்காக, ஒற்றை வார்த்தைக்காக, ஒரேயொரு காரணத்துக்காக, ஆனானப்பட்ட ஸ்ரீராமானுஜரே நடையாய் நடந்தார் எனும் சரிதம் தெரியுமா உங்களுக்கு?

ஸ்ரீரங்கத்தில் இருந்து உண்மையிலேயே இப்படி நடையாய்நடந்தார் ஸ்ரீராமானுஜர். அப்படி அவர் நடந்தது நம்பி அவர்களிடம் உபதேசம் பெறுவதற்காக! நம்பி என்பவர் சாதாரணர் அல்ல. அவரால் அந்த ஊரே பிரபலமாயிற்று. அந்த ஊர்... திருக்கோஷ்டியூர். அதனால்தான் அவருக்கு திருக்கோஷ்டியூர் நம்பி என்றே பெயர் அமைந்தது.

மதுரையில் இருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோஷ்டியூர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஊர். இங்கே அற்புதமான பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த பெருமாள் கோயில், திவ்விய க்ஷேத்திரம். 108 திவ்விய தேசங்களில் இந்தத் தலமும் ஒன்று.

நாராயண மந்திரம் என்பது எட்டெழுத்து மந்திரம். ‘ஓம் நமோ நாராயணா;’ என்பதுதான் எட்டெழுத்து மந்திரம். இந்த மந்திரத்தை திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசமாகப் பெறவேண்டும் என்று ஸ்ரீராமானுஜர் எண்ணம் கொண்டார். ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு ஆச்சார்யரைக் காண நடந்தே வந்தார். கோயிலுக்கு வந்தார்.கோயிலுக்கு அருகில் உள்ள திருக்கோஷ்டியூர் நம்பியின் வீட்டு வாசலுக்கு வந்தார்.

‘ஆச்சார்யருக்கு நமஸ்காரம்’ என்று அழைத்தார். ’ என்ன விஷயம்’ என்று கதவு திறந்து நம்பி கேட்டார். ‘தங்களிடம் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசமாகப் பெறவேண்டும்’ என்றார் ராமானுஜர். ‘யார் நீங்கள்?’ என்று கேட்டார் அவர். ’நான் ராமானுஜன்’ என்று பதிலளித்தார். உடனே முகத்தைத் திருப்பிக் கொண்ட நம்பி, வாசல் கதவை தடக்கென்று சார்த்திக் கொண்டார். விறுவிறுவென வீட்டுக்குள் சென்றார்.

முகம் சுருங்கிப் போனார் ராமானுஜர். வந்த வழியே திரும்பினார். ஸ்ரீரங்கத்தை அடைந்தார். சிலநாட்கள் கழிந்த நிலையில், மீண்டும் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு பாத யாத்திரையாகவே வந்தார். திருக்கோஷ்டியூருக்கு வந்தார். நம்பி வீட்டு வாசலில் நின்றார். நம்பியும் ‘யாரது’ என்று கேட்க... ‘நான் ராமானுஜன்’ என்று இவரும் பதில் சொல்ல... மீண்டும் முகம் திருப்பிக் கொண்டார். கதவைச் சார்த்தினார். ஸ்ரீரங்கம் திரும்பினார்.

இப்படி, பதினெட்டு முறை ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கும் திருக்கோஷ்டியூரில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கும் பதினெட்டு முறை நடந்தார். ‘நான் ராமானுஜன்’, ‘நான் ராமானுஜன்’ என்று சொல்லி வந்தோமே... அதற்கு அவர் சொன்ன பதில் புரிந்தும் புரியாமலும் இருந்தது. நம்பி சொன்ன வார்த்தை... ‘நான் செத்து வா’!

பதினெட்டாவது முறைதான் ’எவ்வளவு பெரிய தவறு இழைத்துவிட்டோம்’ என்பதே அவருக்குப் புரிந்தது. இந்த முறை திருக்கோஷ்டியூருக்கு வந்தார். நம்பியின் விட்டு வாசலுக்கு வந்தார். ‘யாரது?’ என்று கேட்டார் நம்பி. அதற்கு ராமானுஜர்... ‘அடியேன் வந்திருக்கிறேன்’ என்று சொல்லி வணங்கினார். ‘உள்ளே வா’ என அழைத்தார். ‘ஓம் நமோ நாராயணா;’ எனும் திருமாலின் எட்டெழுந்து மந்திரத்தை போதித்து அருளினார்.
மந்திரத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு முன்னதாக, ஸ்ரீராமானுஜரிடம் ‘இது மோட்சத்துக்கான மந்திரம். முக்திக்கான மந்திரம். இந்த மந்திரத்தை எவருக்கும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் உனக்கு வைகுண்டம் கிடைக்காது’ என்று எச்சரித்தார். அதன் பிறகுதான் மந்திரோபதேசம் செய்தார்.

திருக்கோஷ்டியூர் நம்பியை நமஸ்கரித்தார். ‘மிக்க நன்றி சுவாமி’ என்று கைகூப்பிச் சொன்னார். வாசலுக்கு வந்தார். அருகில் உள்ள கோயிலுக்கு வந்தார். உள்ளே நுழைந்தார். விறுவிறுவென உயரத்துக்குச் சென்றார். கோயிலின் உயர்ந்த இடத்தில் இருந்து ஊரையும் ஊர் மக்களையும் பார்த்தார். ‘அன்பர்களே. மோட்ச கதியைத் தரும் எட்டெழுத்து மந்திரத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். எல்லோரும் வாருங்கள்; கேளுங்கள்’ என்று அழைத்தார்.

மக்கள் திரண்டார்கள். நம்பியும் வெளியே வந்தார். தடதடவென கோயிலுக்கு ஓடினார். ‘ராமானுஜா... என்ன காரியம் செய்கிறாய்? முறைப்படி கற்க வேண்டிய மந்திரத்தை இப்படிக் கூவிக்கூவி சொல்லித்தருகிறேன் என்கிறாயே. இதனால் நீ மோட்சத்துக்குச் செல்லமாட்டாய். வைகுண்டம் கிடைக்காது உனக்கு’ என்று கத்தினார்.

‘அடியேனை மன்னித்துவிடுங்கள். எனக்கு மோட்சம் கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை சுவாமி. இதோ... இங்கே கூடியிருக்கும் மக்களுக்கு மோட்சம் கிடைக்கும் அல்லவா. அந்த மன நிறைவே போதும் எனக்கு’ என்றார். ‘ஓம் நமோ நாராயணா’ எனும் எட்டெழுத்து மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசித்தார்.

அப்படி பெருங்கருணையும் விசால மனமும் கொண்டு ராமானுஜர், எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம்தான் திருக்கோஷ்டியூர்.

இங்கே பெருமாளின் திருநாமம் ஸ்ரீசெளம்ய நாராயண பெருமாள். அற்புதமான க்ஷேத்திரத்துக்கு வந்தாலே புண்ணியம். இங்கு மாசி மகம் ரொம்பவே விசேஷம். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தையொட்டி பனிரெண்டு நாள் திருவிழா, வெகு விமரிசையாக நடைபெறும்.

மாசி மக நன்னாளில், அதற்கு முந்தைய நாளில், மகத்துக்கு மறுநாளில் என மூன்று நாட்களில் ஏதேனும் ஒருநாள், இங்கே தெப்பக்குளத்தில் விளக்கேற்றி விடுவது ஐதீகம். அங்கிருந்து விளக்கு எடுத்து வந்து வீட்டுப் பூஜையறையில் வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், நாம் நினைத்த காரியமெல்லாம் நடந்தேறும். கேட்டதெல்லாம் தந்தருளுவார் பெருமாள். 27ம் தேதி சனிக்கிழமை மாசி மகம். 26ம் தேதி, 27ம் தேதி மற்றும் 28ம் தேதி ஆகிய மூன்று நாட்களில் ஏதேனும் ஒருநாள் இங்கு வந்து விளக்கேற்றி, விளக்கை எடுத்துச் சென்று வ்ழிபடலாம்.

மாசி மகத்தையொட்டி, திருக்கோஷ்டியூரில் விளக்கு எடுத்து வந்தால், தொட்டதெல்லாம் துலங்கும். இல்லத்தில் சுபிட்சமும் ஐஸ்வர்யமும் நிலைத்திருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை என்கிறார் கோயிலின் ஸ்ரீகாந்த் பட்டாச்சார்யர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்