மலையுச்சியில் ஒளிரும் நெய் தீபம்

By ஜி.விக்னேஷ்

நவம்பர் 25: திருவண்ணாமலை தீபம்

கார்த்திகை திருநாளன்று அண்ணாமலையார் தீபம் மலையின் மீது ஏற்றப்படும். நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ ஆகிய ஐம்பூதங்களில் அக்னித் தலமான திரு அண்ணாமலையில் ஈஸ்வரன், அருணாசலேஸ்வரன் என்ற திருநாமம் கொண்டு சிறப்பாகக் காட்சி அளிக்கிறார். அம்பாள் திருநாமம் உண்ணாமுலை.

புராணக் கதை ஒன்று இந்தத் திருவண்ணாமலைக்கு உண்டு. பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட, தானே பெரியவன் என்றார் சிவன். இதனை நிரூபிக்க, நெருப்புக் கோளமாய் ஆகாயத்துக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்தார் சிவன். தனது அடியையோ முடியையோ கண்டுவிட்டால் அவரே உயர்ந்தவர் என்றாராம் சிவன். ஜூவாலையின் அடி தேடிப் போனாராம் விஷ்ணு.

முடி தேடிப் போனாராம் பிரம்மா. சிவன் தலையில் இருந்த தாழம்பூ விழ, அதனைப் பொய் சாட்சியாக்கினாராம் பிரம்மா. இதனால் கோபம் அடைந்த சிவன் பிரம்மனுக்குக் கோயில் கிடையாது எனச் சாபமிட்டாராம். பொய் சாட்சி கூறிய தாழம்பூ சிவனுக்குப் படைக்கத் தகுதி இழந்தது. அந்த ஜூவாலை தோன்றிய இடமே திருவண்ணாமலை என்கிறது தலப் புராணம். ஆண்டுக்கு ஒரு முறை மலையின் உச்சியில் வெட்டவெளியில் ஏற்றப்படும் தீபம், எந்தப் புயல், மழை, காற்றுக்கும் அணையாது என்பது நிதர்சனம்.

மனநலம்

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள் தீபத்தன்று அதனை மிகுந்த விசேஷமாகக் கருதுகின்றனர். திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகக் கருதப்படுவதால் மலைவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காகும். அருணன் என்றால் சூரியன், நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையின் உயரம் 2,688 அடி என்கிறது தல வரலாறு. அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது என்று மேலும் தெரிவிக்கிறது அத்திருத்தல வரலாறு.

கிரிவலப் பாதையில் எட்டுத் திக்கிலும் உள்ள அஷ்டலிங்கங்கள், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை ஆகும். இந்த மலையின் சுற்றளவு சுமார் பதினான்கு கிலோமீட்டர்.

இம்மலையில் இன்றும் பல சித்தர்கள், யோகிகள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுவதால், பவுர்ணமியன்று கிரிவலம் வருவது சிறந்த பலன்களை அளிக்கும் என்பது ஐதீகம். வலம் வரும்போது, கையில் கத்தையாக ஊதுவத்தி ஏற்றி எடுத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்படும் சித்தர்களுக்கு, இந்த வாசனைப் புகையை அர்ப்பணிக்க முடியும். நிலவின் குளிர் கதிருடன், காற்றில் கலந்து வரும் மூலிகையின் மணம் மனத்திண்மையை அளித்துக் காரிய வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதாக நம்புவதால், பக்தர்கள் கிரிவலம் செய்ய வருகிறார்கள்.

அஷ்டலிங்கம் தரும் அதிர்ஷ்டம்

இந்த கிரிவலப் பாதையிலுள்ள அஷ்டலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். இந்திர லிங்கத்தை வழிபடுவதால் நீண்ட ஆயுளுடன் புகழும் கிடைக்கும். அக்னி லிங்கம் நோய்கள் மற்றும் பயம் நீக்கும். யம லிங்கம் நீண்ட ஆயுள் தரும், நிருதி லிங்கம் உடல் நலம், செல்வம், மழலைச் செல்வம், புகழ் போன்றவற்றை அருளும். வருண லிங்கம் நீர் சம்பந்தப்பட்ட நோயைத் தீர்க்கும். வாயு லிங்கம் இதயம், மூச்சு தொடர்பான நோயைப் போக்கும். குபேர லிங்கம் செல்வமும் உன்னத வாழ்க்கையும் தரும். ஈசான்ய லிங்கம் மன அமைதி தரும்.

தீங்கு எரிக்கும் தீப பூஜை

கார்த்திகைத் திருநாளன்று காலையில் குளித்த பிறகு சிவனைத் துதிக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து வில்வ இலையால் அர்ச்சிக்க வேண்டும். பருப்பு வடை, பருப்பு வெல்லப் பாயசம், சாம்பார், அன்னம் முதலியவற்றைச் சமைத்துச் சிவன் பார்வதிக்கு படையலிட வேண்டும். இந்த நிவேதனங்கள் காளிக்கும் உகந்தவை என்பதால் அத்தெய்வத்தையும் திருப்தி அடையச் செய்யும் என்பது ஐதீகம்.

அவல் பொரி, நெல்பொரி ஆகியவற்றில் பாகு சேர்த்து, உருண்டை பிடிக்க வேண்டும். உருண்டையாகப் பிடிக்க வராவிட்டாலும் பரவாயில்லை. வெல்ல அப்பம், வேர்க்கடலை உருண்டை ஆகியவற்றைச் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அகல் விளக்குகளைக் காலையில் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிட வேண்டும். பின்னர் அவற்றை எடுத்துச் சுத்தமாகத் துடைத்து, ஆறவிட வேண்டும். சந்தனம், குங்குமம் இட வேண்டும். பஞ்சு அல்லது நூல் திரி போட்டு, நல்லெண்ணெய்விட்டு விளக்குகளைப் பூஜை அறை அல்லது பூஜை அலமாரிக்கு அடியில், கோலமிட்ட மனைபலகையில் அழகாக அடுக்க வேண்டும். திரியின் நுனியில் கற்பூரத்துகள்கள் போட்டு வைத்தால், தீபத்தை எளிதில் ஏற்றிவிடலாம்.

மலையில் அண்ணாமலை தீபம் ஏற்றியபின் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கத்தைச் சிலர் கொண்டிருப்பார்கள். அவ்வாறே தீபம் ஏற்றும்போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் போட வேண்டும். தயாராக உள்ள பொரி உருண்டை, அப்பம், வேர்க்கடலை உருண்டை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும், வெற்றிலை பாக்கு, பழம், பூ மற்றும் சன்மானத்துடன் சகோதரன் வாங்கிக் கொடுக்கும் புதிய விளக்குகளைத் தவறாமல் ஏற்ற வேண்டும். ஏற்றிய விளக்குகளை வாசலில் அணிவகுத்தாற் போல் வரிசையாக வைக்க வேண்டும். வீட்டின் ஒவ்வொரு அறையிலும் குளியல் அறை உட்பட அனைத்து இடத்திலும் ஒரு விளக்காவது வைக்க வேண்டும். தீபாவளிக்கு வாங்கிய மீதமுள்ள பட்டாசுகளை வெடித்துத் தீர்த்துவிடலாம். அன்றைய தினம் சிவன் கோயிலுக்குச் சென்று சிவ தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தை அளிக்கும் என்பது நம்பிக்கை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்