சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! 

By வி. ராம்ஜி

'நான் பரம்பொருளாக இருக்கிறேன்’ என்று எந்தத் தருணத்திலும் இறைவன் தன்னைப் பெருமையாய் சொல்லிக் கொண்டதே இல்லை.
ஒரு அடியாருக்காக அந்த அடியார் தன்மேல் கொண்டிருக்கும் மாறா பக்திக்காக, அடியாருக்கு முன் தோன்றி லீலைகள் மேற்கொண்டார். அடியவருக்கு நேர்ந்த துன்பம் களைவதற்கு மட்டுமே தோன்றினார்; லீலைகள் மேற்கொண்டார் லீலை செய்கிறாரே தவிர மற்றைய இந்த உலகத்திற்காக அற்புதங்களோ லீலைகளோ நிகழ்த்துவதே இல்லை இறைவன். சாதாரண மனிதர்கள் வழக்கமாக கேட்கும் கேள்வி இதுதான்... ஏன் இப்படி அடியாரை துன்பத்துக்கு ஆட்படுத்த வேண்டும், பின்னர் லீலைகள் புரிந்து திருவிளையாடல் நிகழ்த்தி காட்சி தந்து ஆட்கொள்ளவேண்டும் என்பதுதான் பக்தர்கள்பலரின் கேள்வி.

இடருக்கு ஆட்படுத்த வேண்டும் - அதற்கு பிறகு லீலை புரிந்து தரிசனம் தர வேண்டும் என்பது... இந்த இரண்டையும் புரிந்துகொள்ளவேண்டும்.

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக 'பரம்பொருள்' தன்மை அதாவது 'இறைத்' தன்மையானது 'சத்' என்றும் 'சித்' என்று சொல்லப்படுகின்ற 'பூரண அறிவு' என விளக்குகிறது சாஸ்திரம்.

இந்த 'சத்' தன்மையையும் 'சித்' தன்மையையும் ஒருவர் தனக்குள்ளே ஆழ்ந்து அனுபவிக்கும் தருணத்தில், உணரப்பட வேண்டியதே தவிர அந்த இரண்டு வார்த்தைகளுக்கு தனித்து ஒரு அர்த்தமோ மற்றும் அவைகள் ஒரு காட்சிக்குள் அடங்குகின்ற பொருள்களோ அல்ல என்று சிவ புராணம் தெளிவுபடுத்துகிறது.

மேலும் இரண்டு தன்மைகளும் தனித்தனியாகவும் கிடையாது. மகான்கள், ஞானியர்களின் அனுபூதி நிலையில் கண்டெடுக்கப்பட்ட மிக பவித்ரமான உண்மைகள் இவை!

இது மிக பிரத்யேகமாக இறைவனுக்காகவே தன் உடல், மனம் மற்றும் ஆவியை அர்ப்பணித்து இறைவனுக்காகவே வாழ்பவர்களுக்கு இறைவன் அவர்களை தன்னுடன் சாயுஜ்யம் செய்து கொள்ள யுகங்களிலும் கர்மாக்களிலும் நிகழ்த்துகிற அற்புதம் இது என்று போற்றுகிறார்கள் சிவ பக்தர்கள்.

சக்தித்திரள்கள், அணு முதல் அண்டங்கள் அனைத்தையும் ஆளும் இறைவனுடைய சாம்ராஜ்யத்தில் கால-தேச எல்லைகள் அதாவது வரையறைகளோ எல்லைகளோ இல்லை.

நாம் ஒரு இறை அடியாரைக் இனம் கண்டு கொள்கிறோமா? அருளும் லீலைகளுமாக அனவரதமும் இருக்கின்ற இறைவனின் இருப்பை நம் பௌதீக உடலுக்குள், கால-தேச எல்லைகளுக்குள் மாட்டிக் கொள்ளாமல் புரிந்து கொள்கிறோமா? என்பது ஒரு தனி மனிதன் சதா தன்னை புடம் போட்டுக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

நம்முடைய சுவை உணரும் புலனான 'நாக்கு'க்கென்று ஒரு தனித்த சுவை உணர்ச்சி கிடையாது. நாக்கின்மேல் ஒரு சுவையான பதார்த்தம் வைக்கப்பட்டவுடன் எப்படி அந்தச் சுவை உணரப்படுகிறதோ அதேபோன்று 'சத்' தன்மை என்பது 'நாக்கை'ப் போன்றது. எந்தச் சுவை கொண்ட பதார்த்தமும் 'சித்' தன்மையை கொண்டது. நாக்கான 'சத்துடன்' சுவை கொண்ட பதார்த்தமான 'சித்' சேர்ந்தவுடன் சுவைத்தல் என்ற ஆனந்த அனுபவத்துக்கு ஆட்படுகிறோம். அப்படித்தான் இறைத்தன்மையையும் நாம் உணரவேண்டும்.

ஆகவே 'சத்' தன்மையும் 'சித்' தன்மையும் பிரிந்து இருக்கும் விஷயங்கள் இல்லை. தனித்தனி விஷயங்கள் இல்லை. அவை எப்போதும் சேர்ந்தே உள்ளன. அந்த்த் தன்மைகளை உணரும் தருணம்தான் ஆனந்தம். சத், சித் இணைந்திருப்பதை உணருவதே சச்சிதானந்தம். 'சத்-சித்-ஆனந்தம்' என்பது ஒன்று சேர்ந்த தன்மையாக துலங்குவதே 'பரம்பொருள்' நிலை.

'மெய்யிருப்பு - பூரண அறிவு - ஆனந்தம்' என்பது ஒரு நிலை. இதுவே பக்தி. இதுவே இறை. இதுவே ஆன்மிகம். இதை 'ஆதி - அந்தம்' இல்லாத ஒரு அருட்பெருஞ்சோதி என்கிறார் ராமலிங்க வள்ளலார். இந்த நிலையை ஆரம்பம் - முடிவு என்றெல்லாம் சொல்லுவது தன்னை ஒரு பௌதீக உடலாகவும் அதில் தனித்து அறிவு கொண்டு இயங்கும் ஒரு மனமாகவும் நினைக்கும் 'அகந்தையினுடைய' கருத்து என்று விளக்குகிறது சிவ புராணம்.

குணம் - குறி மற்றும் நாமம் - ரூபம் இவைகளால் ஆன இந்த பௌதீக பிரபஞ்சம் மெய்ப்பொருளிலேயே தோன்றி இருந்து மறைந்து கொண்டிருக்கின்றது. 'யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ' 'மனமும் வார்த்தைகளும் அதை சுட்டிக் குறிப்பிட்டு காட்ட முடியாமல் தாம் கிளம்பிய இடத்திற்கே திரும்புகின்றன' என்ற உபநிஷத வாக்கியத்தைச் சொல்லி விளக்குகிறார் சிவக்குமார சிவாச்சார்யர்.

சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

24 mins ago

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்