அனைத்துச் செல்வங்களும் தந்த அவதாரம்

ஜூன் 23: கூர்ம ஜெயந்தி

பெருமாளின் அவதாரங்களில் கூர்ம அவதாரம் மனித குலத்திற்கு தேவையான செல்வங்களை அளிக்கவே நிகழ்ந்ததுபோல் இருக்கிறது. அசுரர்களை வதம் செய்து, தேவர்களைக் காக்கப் பெருமாள் திருவுளம் கொண்டதால் ஏற்பட்ட அவதாரம். இந்த அவதாரம் எடுக்க தூர்வாச முனிவர்தான் காரணம் என்றே சொல்லலாம்.

துர்வாச முனிவர் கோபத்திற்கும் சாபமிடுவதற்கும் பெயர் பெற்றவர். இவரிடம் பெருமாளின் பிரசாதமான பூ மாலை ஒன்று இருந்தது. அவர் மூவுலக சஞ்சாரி. அவ்வாறு அவர் தேவலோகம் வழியாகச் சென்றபோது, தேவேந்திரன் அவ்வழியே தனது யானை மீதேறி வந்தான். அவனைக் கண்டு மகிழ்ந்த துர்வாசர் தன்னிடம் இருந்த மாலையை அவனுக்கு அளித்தார். அவனோ அதனை வாங்கி, யானையின் மத்தகத்தில் வைத்தான். யானையோ அதைத் தும்பிக்கையால் எடுத்துத் தன் காலில் இட்டு மிதித்தது. துர்வாசருக்கு வந்ததே கோபம். அகந்தையால் நீயும் உன் குழுவினரும் பலமற்றுப் போவீர்கள் என சபித்துவிட்டார்.

துர்வாசர் மிகுந்த தபஸ்வி. அவர் வாக்கு பலிக்கத் தொடங்கியது. தேவர்கள் பலமிழந்தார்கள். அசுரர்கள் பலங்கொண்டு தேவர்களுடன் போரிட்டார்கள். போரில் மடிந்த தேவர்கள், மடிந்தபடியே இருக்க, அசுரர்கள் மாண்டபோது அவர்களது குருவான சுக்கிராச்சாரியார் தனது தவ வலிமையால் அவர்களை மீண்டெழச் செய்தார். இதனால் தேவர்களின் எண்ணிக்கை குறைய, அசுரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்தப் பிரச்சினையில் இருந்து மீள வேண்டி, பிரம்மா தலைமையினாலான தேவர்கள் மகா விஷ்ணுவை அணுகினார்கள். அவர் வழியொன்று கூறினார். பாற்கடலைக் கடைந்தால் அமிர்தம் கிடைக்கும்; அதனை தேவர்கள் உண்டால் சாகா வரம் பெற்று வாழலாம் என்றார் மகா விஷ்ணு.

பாற்கடலைக் கடைய வேண்டும் என்றால் அவ்வளவு பெரிய மத்து வேண்டுமே. அதனைச் சுற்றி இழுக்கக் கயிறு வேண்டுமே. பலமற்ற தேவர்களைக் கொண்டு எப்பொழுது கடைந்து முடித்து, எப்பொழுது அமிர்தம் எடுப்பது என்ற பல கேள்விகள் எழுந்தன.

மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற ஆயிரம் தலை கொண்ட பாம்பைக் கயிறாகவும் கொண்டு, வெளி வர இருக்கிற அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி பலமாக உள்ள அசுரர்களையும் சேர்த்துக்கொண்டு பாற்கடலைக் கடையுமாறு கூறினாராம் பெருமாள். பலமற்றுத் தொய்ந்து போயிருந்த தேவேந்திரன் அசுரர்களிடம் சென்று பேசினான். அசுரர்கள் அவனைக் கண்டு எள்ளி நகையாடினார்கள். அதனைப் பொருட்படுத்தாத தேவேந்திரன் அசுரர்களின் பங்களிப்பை வேண்டி நின்றான். சுக்கிராச்சாரியாரின் அறிவுரைப்படி அசுரர்கள் முழுமையான ஒத்துழைப்பைத்தர ஒப்புக் கொண்டனர். ஆனால் மந்தார மலையை கொண்டு சென்று கடலிலே போட்டு வாசுகியையும் கயிராக்கித் தயார் செய்யுங்கள். அப்போது அங்கு வந்த அசுரர்கள் நாகத்தின் வாய்ப்புறப் பகுதியில் நின்று கடைய உதவுகிறோம் என்றார்கள். தேவர்கள் மந்தார மலையைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தார்கள்.

அப்போது பாதியிலேயே மலையைக் கீழே போட்டுவிட அதனடியில் மாட்டிக்கொண்ட தேவர்கள் நசுங்கத் தொடங்கினர். கருடாரூடனான பெருமாள் உடனடியாக அங்கு வந்து, கருடனின் காலினால் மலையைத் தூக்கிக் கடலில் போட்டார். உடனடியாக வாசுகி நாகமும் மலையைச் சுற்றிக்கொண்டது. இரு தரப்பிலும் தேவர்களும், அசுரர்களும் பாற்க்கடலைக் கடையத் தொடங்கினார்கள். கனமான மந்தார மலை மூழ்கத் தொடங்கியது. தேவர்களும் அசுரர்களும் செய்வதறியாது திகைத்தனர். பெருமாள் ஆமையாக மாறி, மலைக்கு அடியில் சென்று தாங்கினார். இதுவே கூர்ம - ஆமை அவதாரம்.

தேவர்களும் அசுரர்களும் கடையத் தொடங்க, வாசுகி தாங்கொண்ண வலியால் விஷம் கக்கியது. உலகோரைக் காப்பதில் விருப்பம் கொண்ட பரமேஸ்வரன் இந்த விஷத்தைத் தான் உண்டு உலகைக் காக்க விரும்பினார். பார்வதி தேவி அனுமதிக்க, விஷத்தைத் துளியும் வீணாக்காமல் உருட்டி எடுத்து விழுங்கினார். அன்னை பார்வதி தன் மணாளன் கழுத்தைப் பிடிக்க, விஷம் சிவனின் கண்டத்தில் (தொண்டை) நின்றுவிட்டது. இதனால் நீலகண்டன் என்ற காரணப் பெயர் பெற்றார் சிவபெருமான். இந்நிகழ்ச்சி நடைபெற்ற நேரம் மாலைப் பொழுது, அதுவே இன்றும் பிரதோஷ காலமாகக் கொண்டாடப்படுகிறது.

தடை நீங்கிய பிறகு கடையத் தொடங்கியவுடன் முதலில் வந்தது காமதேனு என்னும் வேண்டியதையெல்லாம் வழங்கும் பசு. பின்னர் வரிசையாகப் பொன்மயமான ஒளியை உடைய உச்சைசிரவஸ் என்னும் பறக்கும் குதிரை, நான்கு தந்தங்கள் கொண்ட வெண்ணிற யானை ஐராவதம், பஞ்ச தருக்கள், கற்பக மரம், கவுஸ்துப மணிமாலை, மூதேவி, அறுபது கோடி தேவ கன்னியர், மது, மதுவின் அதிதேவதை சுராதேவியுடன் பல பெண்கள், ஆதிலஷ்மி எனப்படும் மகாலஷ்மி, சந்திரன், ஸ்யமந்தமணி என்னும் சிந்தாமணி, கடைசியாக அமிர்த கலசம் ஏந்தி தன்வந்திரி ஆகியோர் வெளிப்பட்டனர். இவை அனைத்தும் வானோருக்கும் உலகோருக்கும் கூர்மாவதாரம் தந்த பரிசு.

அழகிய கண்ணும் பெருமாள் அவதாரமும்

மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன அவதார மூர்த்தியை ராம, கிருஷ்ண, பெளத்த, பலராம, கல்கி, அவதார மூர்த்தியை தியானித்தெழுந்தேன்; தியானித்தெழுந்தேன்; தியானித்தெழுந்தேன். என்ற எளிய கிராமியப் பாடல் விஷ்ணுவின் அவதாரங் களைக் கூறும். ஒரு சிறந்த விஷ்ணு பக்தர் இருந்தார். அவர் எப்போதும் சொல்வாராம் கிருஷ்ணா நீ எங்கே இருந்தாலும் உன்னைக் கண்டுபிடித்துவிடுவேன் என்று. அதற்கு எப்படிக் கண்டுபிடிப்பாய் என்று கேட்டு அதன் சூட்சுமத்தை அறிய விரும்பினாராம் கிருஷ்ணர். அதற்கு இந்த பக்தர் கூறினாராம் நீ மச்சாவதாரம் என்ற மீனின் அவதாரம் எடுத்தாயே அப்பொழுது, தண்ணீரில் இருந்த எல்லா மீன்களுக்கும் கண்கள் வட்டவடிவமாக இருந்தது. ஆனால் நீ மீனாக இருந்தபோது செவ்வரி ஓடிய தாமரை இதழ் போல் உன் கண்கள் நீளமாக இருந்ததே, அரவிந்த நயனா என்றாராம் பக்தர். மச்ச அவதாரம் மட்டுமல்ல கூர்ம, வராக, நரசிம்ம என்று பல விலங்கின அவதாரங்களை எடுத்தாயே அப்போதும் உன் கண் மலர்கள் உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டன கிருஷ்ணா என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE