யாகம் பண்ணுகிறவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். எவன் பொருளைச் செலவழித்து தக்ஷிணை கொடுத்து யக்ஞம் செய்கிறானோ அவனுக்கு யஜமானன் என்று பெயர். 'யஜ்' என்றால் 'வழிபடுவது' என்று அர்த்தம். யஜமானன் என்பதற்கு root meaning யக்ஞம் பண்ணுபவன் என்பதே.
இப்போது நம் தமிழ் தேசத்தில் முதலாளியை 'யஜமான்' - எசமான் என்கிறோம். முதலாளிதானே சம்பளம் தருகிறான்? அதனால் யக்ஞத்திலே தக்ஷிணை கொடுத்து வந்த யஜமானனின் ஸ்தானத்தில் இவனை வைத்துவிட்டோம். சாதாரண மக்களும் இப்படி முதலாளியை யஜமான் என்பதிலிருந்து, இந்த தேசத்தில் வேத வழக்கம் எவ்வளவு ஆழ வேரோடியிருக்கிறது என்று தெரிகிறது.
இன்னொரு வார்த்தையும் நம் தேசத்தின் ஆழ்ந்த வைதிகப் பிடிமானத்தைக் காட்டுகிறது. தமிழ் நாட்டில் இலவசமாகச் சாப்பாடு போடுகிற இடத்துக்கு “சத்திரம்” என்று பேர் சொல்கிறோம். வடக்கே போனால், சத்திரம் என்று சொல்லமாட்டார்கள். “தரம்சாலா” என்பார்கள். “தர்ம சாலை” என்பதன் திரிபு அது.
இங்கே தக்ஷிணத்தில் மட்டும் ஏன் சத்திரம் என்கிறார்கள்? சத்திரம் என்றால் என்ன? “ஸத்ரம்” என்பதுதான் 'சத்திரம்' என்றாயிருக்கிறது. ஸத்ரம் என்பது ஒரு வகை யாகத்தின் பெயர். அந்த யாகத்திற்கும் மற்ற யாகங்களுக்கும் என்ன வித்யாசம் என்றால் மற்ற யாகங்களில் யஜமானன் என்கிற ஒருவன் தன் திரவியத்தைச் செலவு செய்து, தக்ஷிணை கொடுத்து, யாகம் பண்ணுகிறான். ரித்விக்குகள் என்ற பிராம்மணர்கள் (புரோஹிதர்கள்) யஜமானனிடம் தக்ஷிணை வாங்கிக்கொண்டு அவனுக்காக யக்ஞத்தை நடத்தித் தருகிறார்கள்.
சத்ர யாகங்களில் மட்டும் யாகம் பண்ணும் அத்தனை பேருமே யஜமானர்கள். ஒரு யக்ஞத்தினால் லோக க்ஷேமமும், அதில் கலந்து கொள்கிற எல்லோருக்கும் சித்தசுத்தியும், அதைத் தரிசிப்பவர்களுக்குக் கூட நன்மையும் ஏற்படுகின்றன. என்றாலும், இதனால் விசேஷமாகப் புண்ணியம் அடைவது யஜமானன்தான்.
சத்ர யாகங்களில் ரித்விக்குகளே யஜமானர்களாக இருப்பதால் அத்தனை பேருக்கும் சமமான புண்ணியம். 'இந்த யக்ஞம் தன்னுடையது' என்ற உரிமை எல்லோருக்கும் இருக்கிற சோஷலிஸ யக்ஞம் இது. இதை வைத்தே, எவரானாலும் உரிமையோடு வந்து, யஜமானர்கள் மாதிரி வயிறாரச் சாப்பிட்டுப் போகிற இடத்துக்கு “சத்திரம்” என்று பேர் வந்துவிட்டது.
இந்த வார்த்தையிலிருந்து, சத்திரத்தில் சாப்பிடுகிறவனைவிடச் சாப்பாடு போடுகிறவன் தன்னை உயர்வாக நினைக்கவில்லை என்ற உயர்ந்த பண்பும் தெரிகிறது. தமிழ் நாட்டில் சத்ர யாகங்கள் விசேஷமாக நடந்திருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.
யஜமானன் தரும் தக்ஷிணையை யக்ஞ முடிவிலே பெற்று அவனுக்காக அதை நடத்தித் தருகிற மற்ற பிராம்மணர்களுக்கு ரித்விக் என்று பெயர். ரித்விக்குகளில் ஹோதா, உத்காதா, அத்வர்யு என்ற மூன்று பிரிவுகள் உண்டு. ஹோதா என்பவர் ரிக் வேத மந்திரங்களைச் சொல்லி, தேவதைகளை துதித்து ஆஹூதிகளை ஏற்பதற்காக அவர்களைக் கூப்பிடுகிறவர்.
இவருக்கு உள்ள உயர்ந்த ஸ்தானத்தினால்தான், இன்றைக்கும் யாராவது நல்ல ஸ்தானத்தில் இருந்தால், “ரொம்பவும் ஹோதாவுடன் இருக்கிறார்” என்று சொல்கிறோம். ரிக் வேதத்தில் தேவதாபரமான ஸ்தோத்திரங்கள் நிரம்பியுள்ளன.
காரிய ரூபத்தில் செய்யவேண்டிய யக்ஞ முறைகள் யஜுர் வேதத்தில் அதிகமாக இருக்கின்றன. இவற்றின்படி யக்ஞத்தை நடத்திக் கொடுப்பவர் அத்வர்யு. சாம கானம் என்பதாக சாம வேதத்தில் உள்ள மந்திரங்களை கானம் செய்வது, தேவதைகளை விசேஷமாக பிரீதி செய்விப்பதாகும். இதைச் செய்பவர் உத்காதா. இப்படி நடக்கிற யாகத்தை ஒருவர் மேற்பார்வை (ஸுபர்வைஸ்) பண்ணுகிறார். அவருக்கு 'பிரம்மா' என்று பெயர்.
பிரம்மா என்றே வேதத்துக்கும் பேர். வேதமான 'பிரம்ம'த்தில் விசேஷமாக சம்பந்தப்பட்டவருக்கே 'வேதியர்' என்பது போல 'பிராம்மணர்' என்ற பேரும் ஏற்பட்டது. வேதம் பயில்பவனை பிரம்மசாரி என்பதும் இதனால்தான். இங்கே யாகத்தில் சூபர்வைசருக்கு பிரம்மா என்று பேர். அவர் அதர்வ வேதப்படி இந்தக் காரியத்தைப் பண்ணுகிறார்.
இப்படியாக, ஹோதா, அத்வர்யு, உத்காதா, பிரம்மா என்ற நாலு பேர் நாலு வேதங்களை represent பண்ணுகிறார்கள். அதர்வ வேதத்துக்கு என்று தனிப்பட்ட யக்ஞங்கள் இருக்கின்றன. அதர்வத்தில் சொல்லியுள்ள யாகத்தை இந்திரஜித் நிகும்பிலையில் பண்ணினான் என்று வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருக்கிறது.
மற்ற மூன்று வேதங்களுமே அதிகம் பிரசாரத்தில் இருப்பவை. நாலு வேதங்கள், சதுர்வேதங்கள் என்று வித்யாஸ்தானங்களில் சொன்னாலும் அதர்வத்தை நீக்கி மற்ற மூன்றையுமே “த்ரயீ” என்ற பெயரில் வேதங்களாக விசேஷித்துச் சொல்வது வழக்கம்.
“சாந்திகம்” என்பதாக சாந்தியையும், “பௌஷ்டிகம்” என்பதாக புஷ்டியையும், சத்ருக்களுக்குக் கெடுதலை உண்டாக்குகிற “ஆபிசாரகம்” எனப்படுபவையுமான மூன்று வித யாகங்கள் அதர்வத்தில் ஏராளமாக உள்ளன.
யாகங்களில் பிரம்மாவின் மேற்பார்வைக்கான கர்மா மிகக் குறைவானதே. கர்மாக்கள் செய்கையில், அவ்வப்போது அத்வர்யுவானவர் பிரம்மாவை அனுமதி கேட்பார். அதற்கு பிரம்மா 'ஓம்' என்று சொல்லி அனுமதி தருவார். அவ்வப்போது யக்ஞத்தில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கான பிராயச்சித்தத்தைக் கூறுவதும் பிரம்மாவின் பொறுப்பே.
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
32 mins ago
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago