தை மாத வாஸ்து நாள்; கடன் சுமையைப் போக்குவார் வாஸ்து பகவான்! 

By வி. ராம்ஜி

வாஸ்து நாளில், வாஸ்து பகவானை வழிபடுவோம். இல்லத்தின் திருஷ்டியைப் போக்கி அருளுவார் வாஸ்து புருஷன். தொழிலில் மேன்மையும் உத்தியோகத்தில் உயர்வும் தந்து அருளுவார். நாளைய தினம் 25ம் தேதி வாஸ்து நாள்.

வாஸ்து புருஷன் வருடத்தில் எட்டு நாட்கள் விழித்திருப்பார் என்கிறது சாஸ்திரம். மற்ற நாட்களில் வாஸ்து பகவான் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று விவரிக்கிறது. வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களையே வாஸ்து நாட்கள் என்று போற்றுகிறோம். விழித்திருக்கும் நாட்களில் ஒருநாளில்... ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

விழித்ததும் காலைக் கடன்களை நீராடுவார் என்றும் பூஜைகள் செய்வார் என்றும் விவரிக்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். இதையடுத்து பூஜைக்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளுவார் வாஸ்து பகவான். சாப்பிட்டு முடித்த பின்னர், தாம்பூலம் போட்டுக்கொள்வாராம். அதாவது வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்வார். அப்படி நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜைக்கான நேரம். பூமி பூஜைக்கான நேரம் என விவரிக்கிறது மனையடி சாஸ்திரம்.

வாஸ்து புருஷனை, கீழே தள்ளி அவன் மேல் 53 தேவதைகள் அவன் முதுகில் அமர்ந்த இடம் தான் வாஸ்து மண்டலம் என்று குறிப்பிடப்படுகிறது. வாஸ்து மண்டலம் சதுரமாக அமைந்திருக்கும். வாஸ்துவை பிரம்மதேவன் காப்பாற்றி அருளியதால், வீட்டின் நடுபாகம் பிரம்மாவுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை பிரம்ம ஸ்தானம் என்றே விவரிக்கிறது மனையடி சாஸ்திரம்.

ஒரு வருடத்தில், வாஸ்து புருஷன் விழிக்கும் நாட்கள் என்று ஜோதிட வல்லுநர்கள் குறித்திருக்கிறார்கள். சித்திரை 10ம் தேதி, வைகாசி 21ம் தேதி, ஆடி 11ம் தேதி, ஆவணி 6ம் தேதி, ஐப்பசி 11ம் தேதி, கார்த்திகை 8ம் தேதி, தை 12ம் தேதி, மாசி 22ம் தேதி.


வாஸ்து பகவான், தினமும் தூங்கும் போது அசைந்து அசைந்து, ஒரு இடம் இல்லாமல் மாறுவாராம். இதனால் சில மாதங்களில் அவர் படுக்கும் திசை மாறிவிடுகிறது என்பார்கள்.

இரவில் 12ல் இலிருந்து 3 வரை கிழக்கை நோக்கி இருக்கிறார். காலை 3ல் இருந்து 6 வரை தெற்கை நோக்கி இருக்கிறார். காலை 6 முதல் 9 வரை மேற்கில் இருக்கிறார். காலை 9 முதல் 12 வரை வடக்கில் இருக்கிறார் என விவரிக்கின்றன ஞானநூல்கள்.

வாஸ்து பூஜை சரியாகச் செய்தபின் கட்டடம் கட்ட ஆரம்பிக்க, எல்லாம் நலமாகவும் சுபமாகவும் வளமாகவும் முடியும் என்பது ஐதீகம்.

‘வாஸ்து புருஷன்’ என்பவர் குறிப்பிட்ட மாதங்களில் குறிப்பிட்ட திசையில் தன்னுடைய சிரசை வைத்திருப்பார், கால் வைத்திருப்பார் என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. பூமியின் சுழற்சியை மையமாக வைத்தே வாஸ்து புருஷன் கணிக்கப்படுகிறது.

சூரியன் உதிக்கும் திசை, மறையும் திசை, உத்தராயனம், தட்சிணாயனம் ஆகியவையும் வாஸ்து புருஷன் தொடர்பான கணிப்பில் பெரும்பங்கு வகிக்கின்றன.
வாஸ்துவில் ‘வாஸ்து புருஷன்’ என்பது பாவனை இயக்கத்தைப் போன்றதே. இயற்கையைக் கொண்டே வாஸ்து புருஷன் கணிக்கப்பட்டுள்ளதால், அதை வைத்து வீடு கட்டும் போது சில செயல்களை, சில விஷயங்களை சரிவரச் செய்தாலே சிறப்பாக இருக்கும் என்பார்கள்.

வாஸ்து புருஷனைப் பின்பற்றி குறிப்பிட்ட செயல்களை மேற்கொள்ளும்போது இயற்கையின் ஒத்துழைப்புடன் வீட்டைக் கட்டி முடிக்க முடியும். இடையூறுகள் ஏற்படாது. மேலும் குடும்பத்தில் சுபிட்சம் குடிகொள்ளும்.

நாளைய தினம் 25ம் தேதி திங்கட்கிழமை வாஸ்து நாள். நாளைய தினத்தில் காலை 10.41 முதல் 11.17 மணி வரை வாஸ்து நேரம். இந்த நேரத்தில், வீட்டைச் சுத்தப்படுத்துங்கள். சுவாமி படங்களுக்கு பூக்களிடுங்கள். வீட்டின் அனைத்து இடங்களுக்கும் சாம்பிராணி புகையைச் சமர்ப்பியுங்கள். விளக்கேற்றுங்கள். முடிந்தால், வெள்ளி விளக்கு ஏற்றுவதும் காமாட்சி விளக்கு ஏற்றுவதும் அளவற்ற நன்மைகளைத் தந்தருளும்.

கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பார் வாஸ்து புருஷன். கவலைகளில் இருந்தும் திருஷ்டியில் இருந்தும் நீக்கி அருளுவார் வாஸ்து பகவான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

21 days ago

ஆன்மிகம்

21 days ago

மேலும்