குறைகள் போக்குவார், தோஷம் போக்குவார் குச்சனூர் சனீஸ்வரர்! 

By வி. ராம்ஜி

அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சந்நிதி இருக்கும். அந்த நவக்கிரகத்தில் ஒரு கிரகமாக சனீஸ்வரரும் காட்சி தருவார். மற்றபடி தனிச்சந்நிதியாக சனி பகவான் அருள்பாலிக்கும் ஆலயங்கள் மிகக் குறைவுதான்.

திருவாரூர் அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு எனும் திருத்தலத்தில் அக்னீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கே பொங்கு சனீஸ்வரராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் சனி பகவான். திருநள்ளாறிலும் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனீஸ்வர பகவான் இருக்கிறார். இன்னும் ஒரு சில தலங்களில் சனீஸ்வர பகவான், தனிச்சந்நிதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

இப்படியொரு தனிச்சந்நிதியாக, தனிக்கோயிலாக சனீஸ்வர பகவான் எழுந்தருளியிருக்கும் தலம்தான் குச்சனூர். சுயம்பு மூர்த்தமாக இங்கே குச்சனூரில் சனீஸ்வர பகவான் எழுந்தருளியுள்ளார் என்றும் சனி பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிட, அந்த தோஷம் நீங்கப் பெற்றது இந்தத் தலத்தில்தான் என்றும் விவரிக்கிறது ஸ்தல புராணம்.

தேனி மாவட்டத்தில் உள்ளது குச்சனூர். இந்த குச்சனூரில்தான் கோயில் கொண்டிருக்கிறார் சனீஸ்வரர். ஒருகாலத்தில், தினகரன் எனும் அரசன் வாழ்ந்தான். அத்தனைச் செல்வங்களும் தேசமும் இருந்தாலும் அவனுக்கு உள்ள ஒரே குறை... பிள்ளை பாக்கியம் இல்லையே... என்பதுதான். சிவ வழிபாட்டில் மிகுந்த பக்தியுடன் ஈடுபட்டு வந்தான்.

ஒருநாள்... அசரீரியாக ஒரு குரல்... ‘உன் வீட்டுக்கு சிறுவன் ஒருவன் வருவான். அவனை அரவணைத்து அன்புடனும் கனிவுடனும் வளர்த்து வா. பின்னர் உனக்கு குழந்தை பிறக்கும்’ என அசரீரியாகச் சொல்லப்பட்டது.

அதன்படியே, சிறுவன் ஒருவன் வந்தான். அவனுடைய பெயர் சந்திரவதனன். சிறிது காலம் கழித்து, மன்னனுக்குக் குழந்தை பிறந்தது. சதாகன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான் மன்னன். சொந்த மகனை விட வளர்ப்பு மகன் புத்திசாலியாகவும் அறிவுக்கூர்மையுடனும் இருந்தான்.

இதனால், சொந்த மகனைவிடுத்து வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு முடிசூட்டி மகிழ்ந்தார். அரச பொறுப்பை வழங்கினார் மன்னர். இந்த சமயத்தில் மன்னனுக்கு ஏழரைச் சனி பீடித்தது. இதில் கலங்கித் தவித்தார் மன்னர். தந்தையின் வாட்டமும் கலக்கமும் ரொம்பவே பாதித்தது சந்திரவதனனை!

சுரபி நதி நோக்கிச் சென்றான். நதிக்கரையில் சென்று நின்றான். மனமுருக நதியை வணங்கி, கரையில் இருந்த மண்ணில், சனியின் திருவுருவத்தை வரைந்தான். மனமுருக வழிபட்டான். அவனுடைய கோரிக்கையை ஏற்ற சனி பகவான், அந்த பக்தியை உணர்ந்து திருக்காட்சி தந்து அருளினார். ‘உனக்காகவே உன் தந்தையை நான் பிடிக்கமாட்டேன்’ என்றார். ‘அதற்கு பதிலாக உன்னை ஏழரை நாழிகை மட்டும் பிடித்துக் கொண்டு விட்டுவிடுகிறேன்’ என அருளினார். ‘நியாயமாகவும் தர்ம நெறியுடனும் ஒழுக்கத்துடனும் உண்மையாகவும் வாழ்பவர்களிடத்தில் நான் வரமாட்டேன். அவர்களை பீடிக்கமாட்டேன்’ என அருளினார். ’இந்த ஏழரை நாழிகையும் நான் உன்னைப் பிடித்ததற்கு உன் முன் ஜென்ம வினையே காரணம்’ என்றார். ‘உன் கர்மா இத்துடன் முற்றுப் பெற்றது’ என சனி பகவான் அருளிச் சென்றார்.

இதையடுத்து நெகிழ்ந்து மகிழ்ந்த சந்திரவதனன், குச்சுப்புற்களைக் கொண்டு சேகரித்து, அவற்றைக் கொண்டு கூரை அமைத்து, சனீஸ்வரருக்கு கோயில் எழுப்பினான், வழிபட்டான்’ என்கிறது குச்சனூர் கோயிலின் ஸ்தல புராணம்.

குச்சுப்புற்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட கோயில் கொண்ட ஊர் என்பதால், இந்த ஊருக்கு குச்சனூர் எனும் பெயர் அமைந்தது.

அற்புதமான ஆலயம். சாந்நித்தியம் நிறைந்தவராகத் திகழ்கிறார் சனி பகவான். குச்சனூர் கோயிலுக்கு வந்து சனீஸ்வர பகவானை வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், ஏழரைச் சனியின் தாக்கம் குறையும், சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்