பட்ட கஷ்டமெல்லாம் போக்கும் திருமாந்துறை!

By வி. ராம்ஜி

திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்ளுங்கள். குறிப்பாக, மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலம் இது. மூல நட்சத்திர நாளில், இங்கு வந்து தரிசனம் செய்வது மகத்தான பலன்களைத் தரும். இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் ஆம்ரவனேஸ்வரர்.

மாமரங்கள் சூழ்ந்த வனத்தில் சிவபெருமான், முனிவருக்கு திருக்காட்சி தந்தருளிய தலம் என்பதால் இந்தத் தலத்துக்கு மாந்துறை என்று பெயர் அமைந்தது. சுவாமிக்கு ஆம்ரவனேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. ஆம்ரவனேஸ்வரர் எனும் கோயிலின் ஸ்தல விருட்சம் மாமரம்.

திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமாந்துறை. தலத்தின் நாயகி ஸ்ரீபாலாம்பிகை. சக்தி வாய்ந்தவள் என்று அம்பாளைப் போற்றுகின்றனர்.

மிருகண்டு முனிவர் தவமிருந்து சிவனாரின் அருளைப் பெற்ற திருத்தலம். ஆதிசங்கரர் இந்தத் தலத்துக்கு வந்து சிவபெருமானையும் பாலாம்பிகையையும் தரிசித்து வழிபட்டுள்ளார் என்கிறது ஸ்தல புராணம்.

மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் ஈசனின் அடிமுடியைத் தேடிய கதை தெரியும்தானே. அப்போது, சிவபெருமானின் முடியைக் கண்டேன் என்று பொய் சொன்னார் பிரம்மா. இதனால் சாபத்துக்கு ஆளானார். இந்த சாபத்தைப் போக்கிக் கொள்ள பிரம்மா வழிபட்ட தலம் எனும் பெருமையும் ஆம்ரவனேஸ்வரர் கோயிலுக்கு உண்டு.

தட்சன் தான் நடத்திய யாகத்திற்கு சிவனாருக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், அந்த யாகத்திற்கு சூரியன் சென்றதால், சிவ சாபத்துக்கு ஆளானார். பிறகு சூரிய பகவான், சிவபெருமானை தவமிருந்து வழிபட்டு, சாப விமோசனம் பெற்றார். அப்படி சூரிய பகவான், சிவனாரை நோக்கி தவமிருந்ததும் சாப விமோசனம் பெற்றதுமான திருத்தலம் திருமாந்துறை என்கிறது ஸ்தல புராணம்.

அப்பர் பெருமானாலும் ஞானசம்பந்தர் பெருமானலும் பாடப் பட்ட புண்ணிய க்ஷேத்திரம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள். திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோயிலுக்கு வந்து சிவனாரையும் அம்பாளையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால் போதும்... வாழ்வில் சகல பாவங்களையும் போக்கியருளுவார்கள் அம்மையும் அப்பனும்!

திருமாந்துறை திருத்தலம் இந்திரன் வழிபட்டு அருள் பெற்ற தலமும் கூட. இங்கே உள்ள காவேரி தீர்த்தமும் காயத்ரி தீர்த்தமும் விசேஷமானவை என்று கொண்டாடப்படுகிறது. கிழக்கு நோக்கிய கோபுரத்துடன் திகழ்கிறது ஆலயம். கைத்தடியுடன் நிற்கும் சுந்தரர் அற்புதமாகக் காட்சி தருகிறார். நவக்கிரக சந்நிதியில், சூரிய பகவான் தன் இரண்டு மனைவியருடன் காட்சி தருவதும் காணக்கிடைக்காத ஒன்று. மேலும் சூரிய பகவான் தனியே நின்றபடியும் காட்சி தருகிறார். சூரியன் வழிபட்டு அருள்பெற்ற தலம் என்பதால்தானோ என்னவோ, நவக்கிரகத்தில் சூரியனாரைப் பார்த்தபடியே மற்ற கிரகங்கள் அமைந்திருக்கின்றன.

கிழக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிக்கிறார் ஆம்ரவனேஸ்வரர். சூரிய பகவான், இறைவனின் சந்நிதியில் வந்து வணங்கும் தலங்கள் பல உண்டு. பங்குனி மாதத்தின் முதல் மூன்று நாட்கள் சூரியக்கதிர்கள், சிவலிங்கத் திருமேனியைத் தழுவும் காட்சி சிலிர்க்கவைக்கும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்ளுங்கள். குறிப்பாக, மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலம் இது. மூல நட்சத்திர நாளில், இங்கு வந்து தரிசனம் செய்வது மகத்தான பலன்களைத் தரும். இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் ஆம்ரவனேஸ்வரர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

12 days ago

மேலும்