கூடாரைவல்லியில் ஆண்டாளிடம் பிரார்த்தனை;  கல்யாண யோகம்; இல்லத்தில் சுபிட்சம்!  

By வி. ராம்ஜி

கூடாரைவல்லித் திருநாளில், ஆண்டாளிடம் பிரார்த்தனையை வைத்தால், கல்யாண யோகம் கைகூடிவரும். இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளுவாள் ஆண்டாள். நாளைய தினம் 11ம் தேதி, திங்கட்கிழமை கூடாரைவல்லித் திருநாள்.

திருப்பாவையை அருளிச் செய்தவர் ஸ்ரீஆண்டாள். மார்கழியில் திருப்பாவையைப் பாடி திருமாலை சேவிப்பார்கள் பக்தர்கள். ஆண்டாள் அருளிய பாடல்களில் 27 வது பாடல் பாடுகிற நாள்... கூடாரைவல்லித் திருநாள் என்று கொண்டாடப்படுகிறது.

அரங்கனை மணம் புரிந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துக்கொண்டிருந்தாள் கோதை. அதனை ஏற்றுக்கொண்டான் அரங்கன். ஆகவே, தம்மை கைத்தலம் பற்ற இருக்கிறான் என்பது உறுதியாகி விட்டதை உணர்ந்து பூரித்துப் போனாள் ஆண்டாள்.

பாவையர் அனைவரும் புத்தாடை அணிந்து, அழகாக அலங்கரித்துக் கொண்டு, பால்சாதம் மூடும்படியாக, மிதந்து வழியும்படியாக நெய் விட்டு பால் சாதம் செய்யவேண்டும். அதைக் கண்ணனுக்கு படைத்து, அனைவரும் சேர்ந்து கையில் எடுக்கவேண்டும். முழங்கை வரை வழியும் நெய் கொண்ட பால் சோறை அனைவரும் கூடியிருந்து சாப்பிட்டு கிருஷ்ணானுபவத்தில் திளைத்து மகிழவேண்டும். வாரீர் வாரீர் என அனைவரையும் அழைக்கிறாள் ஆண்டாள் எனச் சொல்லிப் பூரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

திருமாலான கண்ணனையே மணாளனாக அடைய வேண்டி, ஆண்டாள் எனப்படும் கோதை நாயகி, பல்வேறு பாசுரங்கள் இயற்றியுள்ளார். அவையெல்லாம் நாச்சியார் திருமொழி என்று அழைக்கப்படுகின்றன. இது நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் ஒரு பகுதி. அதில், கண்ணனையும் அழகரையும் அரங்கனையும் போற்றிப் பாடியிருக்கிறார் ஆண்டாள்.

ஆண்டாளின் குலதெய்வம் கள்ளழகர். அதாவது பெரியாழ்வாரின் குலதெய்வம் கள்ளழகர். ஆகவே, கள்ளழகர் குறித்துப் பாடுகிறாள். அதாவது, மகாவிஷ்ணுவையே மணாளனாக அமைய வேண்டும் என்கிற கோரிக்கையை அழகரிடம் முன்வைத்துப் பாடுகிறாள்.

‘நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறுதடா நிறைய வெண்ணைவாய் நேர்ந்து பராவிவைத்தேன்

நூறுதடா நிறைய அக்காராஅடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கோளே!’ என்று உருகுகிறாள் ஆண்டாள்.

அதாவது, ‘நூறு தடா நிறைய வெண்ணெய் பரவி வைத்தேன். நூறு அண்டா நிறைய வெண்ணெய் நைவேத்தியம் செய்தேன்’ என்கிறார். ‘நூறுதடா நிறைய அக்கார அடிசில் சொன்னேன். அதாவது நாம் நமது குலதெய்வத்துக்கு பொங்கலிடுவது போல், ஆண்டாள் , தன்னுடைய ஆசை பூர்த்தியானால், அழகருக்கு (பால் பொங்கல் போல்), அக்கார அடிசில் நூறு தடாவில் வைப்பேன் என்கிறாள் ஸ்ரீஆண்டாள்.

மதுரை கள்ளழகரிடம் ஆண்டாள் விண்ணப்பித்த சிறிது காலத்திலேயே அரங்கனுடன் இரண்டறக் கலந்தாள் கோதை. அதன் பின்னர், கோதையானவள் ஸ்ரீஆண்டாள் என்று அழைக்கப்படலானார் என்கிறது புராணம். எனவே, ஆசைப்படி, வேண்டுதல்படி, நேர்த்திக்கடனைச் செலுத்தமுடியவில்லை கோதையால்! அதாவது, அக்கார அடிசில் சமர்ப்பிக்கவில்லை.

ஆண்டாள் காலத்துக்குப் பின்னர் சில நூறு வருடங்களுக்குப் பின்னர் பிறந்த உடையவர் என்று போற்றப்படும் ராமானுஜர், ஆண்டாளின் அபிலாஷையை அறிந்து கொண்டு, அவளின் நேர்த்திக்கடனைத் தெரிந்து கொண்டு, அழகர்கோவிலில், அழகருக்கு முன்பாக வந்து அர்ச்சகரின் அனுமதியைப் பெற்று, ‘நூறு தடா அக்கார அடிசில்’ நூறு அண்டாக்களில் சமர்ப்பித்தார்.

பிறகு, அந்தப் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். அங்கே ஸ்ரீவில்லிபுத்தூ திருத்தலத்தில்... ஆண்டாள் வயது வித்தியாசமெல்லாம் பார்க்காமல், உடையவரை... ‘அண்ணா...’ என்று அழைத்தாராம்! ’பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே’ - ஒரு பாவையாக இருந்தபோது, அவளது மனோபீஷ்டத்தை பூர்த்தி செய்ய வேண்டியவர் தகப்பன். அதையடுத்து தமையன். எனவே ராமானுஜரை அண்ணா என்று அழைத்தாள் ஆண்டாள் என சொல்லி சிலாகிக்கிறது ஆண்டாள் புராணம்.
அன்று முதல், கூடாரவல்லி என்றும் 27ம் நாள் பாசுரத்தில், ’பால் சோறு மூட நெய் பெய்து’ என்று இருப்பதால், அக்கார அடிசிலான பால் சோறு, நூறு தடாவில் சமர்ப்பிக்கும் வழக்கம், இன்றைக்கும் அழகர்மலையில் நடைபெற்று வருகிறது. கூடாரைவல்லி நாளில், கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. அடுத்தடுத்த காலகட்டங்களில், அனைத்து பெருமாள் கோயில்களிலும் கூடாரை வல்லி விழா விமரிசையாக நடத்தப்படும் வழக்கம் வந்தது. இன்றளவும் கூடாரவல்லி வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாளைய தினம் 11ம் தேதி திங்கட்கிழமை கூடாரைவல்லித் திருநாள். மார்கழி மாதத்தின் 27ம் நாள். திருப்பாவையின் 27வது பாடலைப் பாடுவோம். மகாவிஷ்ணுவை, பெருமாளை மனதார வழிபடுவோம். மங்காத செல்வத்தைத் தந்தருளுவார்கள் பெருமாளும் ஆண்டாளும்.

ஆண்டாள் சந்நிதியில் மனதார பிரார்த்தனை செய்யுங்கள். ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், திருக்கோஷ்டியூர், திருவல்லிக்கேணி முதலான முக்கியமான வைஷ்ணவ தலங்களில் உள்ள ஆண்டாளையும் பெருமாளையும் மனதாரப் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம். கல்யாண யோகம் கைகூடி வரும். கஷ்ட நிலையில் இருந்து விடுபட்டு, இல்லத்தில் நிம்மதியையும் அமைதியையும் தந்தருளுவார்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்