கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ளது மேலக்கடம்பூர். ஒரு காலத்தில் கடம்பவனமாக இருந்த ஊர் இது. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, முழுமுதற்கடவுளான விநாயகருக்குச் சொல்லாமல், அந்த அமிர்தத்தை தேவர்கள் தாங்களாகவே உண்ண முடிவெடுத்து அமர்ந்தார்கள்.
இதையறிந்த விநாயகப் பெருமான், இந்திரனின் அகங்காரத்தை அழிப்பதற்காக அமிர்தக் கலசத்தைக் கைப்பற்றி வந்து திருக்கடையூரில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. அப்படி அவர் அமிர்தக் கலசத்தை எடுத்து வரும்போது அதிலிருந்து ஒரு துளி அமிர்தமானது மேலக்கடம்பூர் கடம்பவனத்தில் விழுந்தது. அமிர்தம் விழுந்த இடத்திலிருந்து சுயம்புவாய் ஒரு சிவலிங்கம் தோன்றியது. அவர்தான் அமிர்தகடேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
அமிர்தகடேஸ்வரராய் கடம்பவனத்தில் உதித்த சிவபெருமானை வழிபடுவதற்காக இந்திரனின் அன்னை தினமும் பூலோகம் வந்துபோனார். அவருக்காக இச்சிவலிங்கத்தை தேவலோகத்திற்கே எடுத்துச் செல்வதற்காகத் தேரெடுத்து வந்தார் இந்திரன். இதையறிந்த விநாயகப் பெருமான், இந்திரனின் தேரில் ஒரு சக்கரத்தை மட்டும் தன் காலால் மிதித்து மண்ணுக்குள் புதைத்துத் தேரை அங்கிருந்து நகர விடாமல் செய்தார் என்கிறது புராணம்.
பூமியில் பதிந்த நிலையில் தேர்சக்கரம்தேவாரப் பாடல் பெற்ற தலமான அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலின் கருவறை, தேர் வடிவத்தில் எழுப்பப்பட்டுள்ளது. தேரின் ஒரு சக்கரம் பூமியில் பதிந்த நிலையில் காணப்படுகிறது. உயரிய சிற்பக் கலையின் அடையாளமாய் விளங்கும் இத்திருக்கோயிலில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. ஆறாம் நூற்றாண்டில் செங்கல் கட்டிடமாக இருந்த இத்திருக்கோயிலை முதலாம் குலோத்துங்க சோழன் தனது காலத்தில் கற்கோயிலாகச் சமைத்துள்ளான்.
மேற்கு மூலையில் விநாயகர்பதினெட்டு சித்தர்கள், சந்திரன், சூரியன், கலியுகத்தில் பதஞ்சலி முனிவர் உள்ளிட்டோர் இங்கு வந்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்திரனையே மிரள வைத்த விநாயகர் ஆரவார விநாயகராக கோயிலின் மேற்கு மூலையில் வீற்றிருக்கிறார்.
புடைப்புச் சிற்பமாகக் காட்சிதரும் இந்த விநாயகரை, ராஜேந்திர சோழன் தனது படையெடுப்பின்போது மங்களூரிலிருந்து எடுத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதேபோல், ரிஷப வாகனத்தின் மீது நின்று பத்துக் கரங்களில் ஆயுதம் ஏந்தி தாண்டவமாடும் சிவனின் பஞ்சலோக சிலையும் இங்கே உள்ளது. இதுவும் ராஜேந்திரனால் வங்கத்தில் மகிபாலனை வீழ்த்தியதன் வெற்றிச் சின்னமாக எடுத்துவரப்பட்டது. பிரதோஷ நாளில் மட்டுமே இந்தச் சிலை வெளியில் எடுத்து பூஜிக்கப்படுகிறது.
இத்திருக்கோயிலில் முருகப் பெருமான் வில்லேந்திய வேலவராகக் காட்சி தருகிறார். சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்கு பார்வதி தேவியார் கந்தனுக்கு வேல் எடுத்துக் கொடுத்த இடம் இதுவென்ற புராணத் தகவலும் உண்டு. இங்கே சிவனுக்குப் பக்கத்தில் ஜோதி மின்னம்மையாக வீற்றிருக்கும் அம்பாள் தினமும் மூன்று அவதாரம் எடுக்கிறார்.
காலையில் சரஸ்வதி, மதியம் லெட்சுமி, மாலையில் துர்க்கை என இங்கே மூன்று அலங்காரத்தில் அம்பாள் காட்சி தருவதால், கல்வி, செல்வம், தைரியம் மூன்றையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் திருத்தலமாக விளங்குகிறது அமிர்தகடேஸ்வரர் திருத்தலம்.